மறுபிறப்பெடுத்து எதிர்தரப்பில் நின்று தனது அண்ணனை பழிவாங்கும் தம்பி!

 




 

ரெக்கிரஸ்டு ட்யூக் சன் ஏஸ் எ அசாசின்
மங்காகோ.காம்.
நிறைவுறாத கதை
மங்கா காமிக்ஸ்

வெர்ட் என்ற குடும்பம் உள்ளது. அரசருக்கு ஆதரவாக எல்லையில் போரிடும் குடும்பம். அதில், மூத்தவன் அசெல், மனச்சிதைவு கொண்ட பொறுக்கி. அவனுக்காக அதே குடும்பதில் உள்ள சியான் என்ற சகோதரன் செய்யும் உதவிகளும், இறுதியாக அவன் அசெல் செய்த துரோகத்தால் வீழ்வதுமே முன்கதை. அதை மாற்றுவதற்கு சியான் மறுபிறப்பில் முயல்கிறான்.

சியான் ஒரு தீயசக்தியைப் பின்பற்றுபவன். அந்த இனக்குழுவின் வாளை பெறும் முன்னுரிமை பெறுகிறான். பெயர் தீயசக்தி இனக்குழு என்று கூறப்பட்டாலும், அவர்கள் முக்கியப்பணி, சமூகத்தில் தீங்கிழைப்பவர்களை கொன்று களைவதே. ஆனால் ஒளிசக்தி என்ற இனக்குழு உள்ளது. காட் ஆப் லைட் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்படுபவர்கள், பெருமை புகழுக்காக எந்த இழிவையும் செய்ய தயங்காதவர்கள். தங்களுக்கு நல்லபெயர் வர மோசமான செயல்களை இவர்களே செய்து, அதை இவர்களே தடுத்து மக்களிடையே நாயகனாவது. அதன் வழியாக அதிகாரத்தை, செல்வாக்கை, பணத்தை அடைவது லட்சியம்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சியான், தனது இறப்பிற்கு பிறகு பத்தாண்டுகள் பின்னோக்கி போகிறான். அதாவது அவனது ஆன்மா மீண்டும் அவனுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதில் சியான் தனது சகோதரனுக்கான கொடுத்த பழைய வாழ்க்கையை கைவிட்டு தனக்காக வாழ முடிவெடுக்கிறான். தன் வாழ்க்கை தன் கையில், விதியை நம்புவதில்லை என தீர்மானிக்கிறான். அவன் தன்னம்பிக்கை எங்குமே குறைவதில்லை. பலவீனமானவர்களை பார்த்து இரங்குபவன், அநீதியான ஆட்களைப் பார்த்தால் அடித்து உதைத்து வாளால் வெட்டி வீசுகிறான்.

மறுபிறப்பில் தான் செய்த தவறுகள் தெரிகிறது. தனது எதிரிகள் யாரென கண்டுகொள்கிறான். அதற்கேற்ப தன்னை வலிமைபடுத்திக்கொண்டு எதிரிகளோடு சண்டை போடுகிறான். இந்தமுறை அவன் தனியாளாக இருப்பதில்லை. அவனை கொல்ல முயன்று, மன்னிப்பு கேட்டு பாதுகாவலனாக மாறிய பிரையன், சியானின் தாதி எமிலி, பாதி டிராகன் பாதி மனுஷியான நானா, காரம் மாந்திரீக அமைப்பைச் சேர்ந்த பெண், ஐந்தாவது இளவரசி என நிறையப்பேர் அவனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

மங்கா காமிக்ஸ்களில் நன்மை தீமை பற்றிய விவாதங்கள் நிறைய நடக்கின்றன. இந்த காமிக்ஸிலும் அதற்கான இடங்கள், சம்பவங்கள் உண்டு. இதில் சியான், டிராகன் முட்டை ஒன்றை எடுத்து வருகிறான். அதன் வழியாக, அரைப்பகுதி மனிதன், அரைப்பகுதி டிராகன் என நானா என்ற சிறுமி வெளியே வருகிறாள். விலங்குகளை கருப்பு சந்தையில் விற்கும் கூட்டம் செய்யும் மோசமான சோதனை காரணமாக, நானா உருவாக்கப்படுகிறாள். அவளுக்கு சியான் தந்தையாகிறான். கதை நெடுக, வில்லனான அவனது அண்ணனை விட சியானுக்கு நிறைய பெண்கள் அனுசரணையாக இருக்கிறாள். இளவரசி, இளவரசியின் தோழியான லெக்சிமஸ், பணிப்பெண் எமிலி இப்படி பெண்கள் பட்டியல் நீள்கிறது. சிசிலியா என்ற துரோகம் செய்த பெண்ணைக் கூட சியான் தாக்கி தோற்கடித்துவிட்டு உயிரோடு விட்டுவிடுகிறான். அவளை பதுங்கி வாழச்சொல்லி அனுப்பிவிடுகிறான்.

முந்தைய பிறவியில், இரக்கமே இல்லாத கூலிக்கொலைகாரனாக இருப்பவன், மறுபிறவியில் தான் விரும்புபவர்களை காப்பவனாக இரக்கம் கொண்டவனாக இருக்கிறான். இதனால்தான், லாம்பாஸ்டர் என்ற நகரத்திற்கு சென்று அங்கு எதிரிகளை வீழ்த்தும் சமயத்தில் கூட சிகரெட் விற்கும் சிறுமியை பாதுகாக்க முனைகிறான். அங்குள்ள சில எதிரிகளை மட்டும் தீயசக்தி இனக்குழு உத்தரவுப்படி நீக்கிவிட்டு வெளியேறுகிறான்.
சியானுக்கு குடும்பம் பெரிதாக ஆதரவாக இல்லை. வலிமை இல்லையென்றால் மதிப்பில்லாத குடும்பம் அது. அண்ணனுக்கு ஆதரவாக தம்பி இருக்கவேண்டுமென தந்தை வலியுறுத்துவார். ஆனால், அவருக்கு மூத்தமகனின் குரூர சுபாவம் தெரியாது. அவன், தன்னுடைய அதிகாரத்திற்காக சியான், ஆலிஸ் என சகோதர சகோதரியைக்கூட கொல்ல தயங்காதவன். மனச்சிதைவு கொண்டவன். எனவே, சியான் மறுபிறவியில் அண்ணனுக்கு கிடைக்கும் வாளை முழுமையாக பயன்படுத்த முடியாதபடி சிதைத்துவிடுகிறான். அதன் சக்தியை தானே எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறான்.

இருள் கடவுள், தனது சக்தியை வழங்கும்போது எதற்காக சக்தியை பெறுகிறாய் என்று கேட்கும்போது என்னுடைய ஆசைக்காக சுயநலனுக்காக என்று தைரியமாக சொல்லுவான். அந்த இடம் தன்னம்பிக்கை, திமிர், தெளிவு என பலவிஷயங்களை புரிய வைக்கக்கூடியது. சியான், சூது தந்திரம் வஞ்சம் என ஆட்களை பார்த்தாலே புரிந்துகொண்டு விடுகிறான். இதில் காராம் அமைப்பின் ஆட்கள் மட்டுமே விதிவிலக்கு. இவர்கள் சொந்த குடும்ப ஆட்களையே விதவிதமாக பரிசோதனை செய்து அவர்களை பயன்படுத்துகிறார்கள். குடும்ப செல்வாக்கை அதிகரிக்க இப்படியொரு செயல்பாடு.

குடும்பத்திலுள்ள உள் முரண்பாடுகள், மாநிலத்திலுள்ள நாட்டிலுள்ள அழுகிய அரசியல், அதிகாரத்திற்காக அத்தனை இழிவு வேலைகளை செய்யும் அரச குடும்ப வாரிசுகள், அவர்களை ஆதரிக்கும் தற்காப்புக்கலை அகாடமிகள் என வித்தியாசமான கதை. பல்வேறு நோக்கங்களைக் கொண்ட மனிதர்கள்.

கோமாளிமேடை குழு



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்