சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!
சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ்
ரிச்சர்ட் ஸ்மித்
ப்ளூடோ பிரஸ்
சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது.
சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே கவலையில்லை. இப்படித்தான் பொதுவுடைமை கட்சி சீன நாட்டு மக்களை பயிற்றுவிக்கிறது. முழுக்க நுகர்வோராக மட்டுமே இருக்கும்படி அவர்களை மடைமாற்றுகிறது. தியானன்மென் சதுக்க மாணவர்கள் போராட்டம் ராணுவம் மூலம் முறியடிக்கப்பட்ட பிறகு, மக்களை நுகர்வோராக்கும் பணி வேகம் பெற்றது. முன்னாள் அதிபர் டெங், வெளிநாட்டு முதலீடுகளை கோரிப்பெற்று, அனைவரும் பணக்காரராகுங்கள் என பேராசையைத் தூண்டிவிட்டார். அந்த நெருப்பு இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது.
சீனாவின் சூழல் மாசுபாடு, சம்பாதிக்கும் பேராசையால் உருவானதுதான். பேய் நகரங்களை உருவாக்குவது பற்றிய அத்தியாயம் நூலில் சுவாரசியமானது, அதேசமயம் வினோதமானதாகவும் உள்ளது. அதிக பொருட்செலவில் வானுயர கட்டிடங்களைக் கட்டுவது. சாலைகளை அமைப்பது, பாலங்களை கட்டுவது. ஆனால், இதைப் பயன்படுத்த மக்கள் இல்லையென்றாலும் கவலைப்படுவதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டிடங்களை கட்டி இடிப்பது கட்டுமான நிறுவனங்களுக்கும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கும் லாபகரமானது. அரசியல்வாதிகள்தான் அதை செய்கிறார்கள். அவர்களுக்கு பொதுவுடைமை கட்சியில் உயரிய பதவி கிடைக்கும். இறுதியாக இந்த நாடகத்தை பார்க்கும் மக்கள்தான் ஏமாந்து போகிறார்கள்.
இந்த நூல் சூழல் பிரச்னைகளை மட்டுமல்ல, அதற்கு காரணமான அரசியல் சூழ்நிலை, அதிகாரத்திலுள்ள எட்டு குடும்பங்களைப் பற்றியும் விளக்கமாக பேசுகிறது. அந்த குடும்ப இளம் வாரிசுகள் எப்படி அரசு நிறுவனங்களில் மோசடி செய்த சொந்த நிறுவனங்களைத் தொடங்கி லாபம் அடைந்தனர் என்பதை விளக்கும் பகுதி, வேதனையான ஒன்று. அதிலும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் அனைத்துமே முன்னாள் அதிபர் டெங்கின் ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்டது. அன்று முதலே தொழிலாளர்கள் வேலை நிச்சயமின்மை கொண்டதாக மாறிவிட்டது. மாவோ கொடுத்த சலுகையை, அவரது சீடரே பறித்துக்கொள்கிறார் என்பதை ஆச்சரியம் என்றுதான் கூறவேண்டும்.
உள்நாட்டு உற்பத்தி என்ற அளவீட்டில் முன்னிலை பெற சீன அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் விளையாட்டில் வாழ்க்கையைத் தொலைப்பது அந்நாட்டு மக்கள்தான். கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயப்படுத்தி நகருக்கு கூட்டி வந்து படுமோசமாக உள்ள குடியிருப்பு வீடுகளை அரசு வழங்குகிறது. சீனாவில் உள்ள சட்டப்படி, அங்குள்ள நிலங்கள் அனைத்துமே அரசுக்கு சொந்தம். அங்கு வீடுகள், விவசாயம் என எதை செய்தாலும் அரசு சொன்னால், அதை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அப்படியல்லாதபோது, அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் நிறுத்தப்படும். காவல்துறை தாக்குதல், வழக்குபதிவு அடுத்த கட்ட நடைமுறை. இப்படியான நகரமயமாக்கல் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.
கட்டுமானங்கள் கட்டப்படுவது குத்தகையில்தான். எனவே, அவற்றில் லாபம் பார்க்க அடிக்கும் ஊழல் விஷயங்களால், கட்டுமானங்கள் பெரிதாக வலுவாக இருப்பதில்லை. மக்கள் அதில் வாழ்வதற்கான வசதிகளை செய்வதற்கே கூடுதலாக செலவு செய்யவேண்டியுள்ளது. இவற்றை சீனாவிலுள்ள குறைவான ஊடகங்களே பேசுகின்றன. அதன்மீதும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிபர் ஷி ச்சின்பிங், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளுக்கென தனி அத்தியாயமே நூலில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு பலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.
சூழல் பிரச்னைகளைப் பேசினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தியை முன்னே வைப்பது நிச்சயம் அறிவுடைமை ஆகாது. நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, மாசுபாடு அதிகரிப்பது தீர்க்க முடியாத பிரச்னை. நோயை உண்டாக்கி அதற்கு வைத்தியம் செய்வோம் என்று மருத்துவர் கூறினால் அதை யாராவது ஏற்போமா? அப்படித்தான் சீனா சூழல் விஷயத்தில் செல்கிறது. நூலில், சூழல் பிரச்னைகளை உருவாக்கும் அனைத்து விவகாரங்களும் விரிவாக பேசப்பட்டுள்ளன. இதற்காக ஏராளமான உள்ளூர், வெளிநாட்டு நூல்களில் உள்ள பல்வேறு பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே நமக்கு சீனா பற்றிய சித்திரிப்பை தெளிவாக்குகின்றன. சாலைப்போக்குவரத்து ஏற்படுத்திய காற்று மாசுபாடு, ஆறுகளில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், மக்கள் வசிக்காத விண்ணுயர கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பிரமாண்ட ரிங் சாலைகள், எட்டுவழிச்சாலைகள் ஆகியவற்றை எழுத்து, புகைப்படம் ஆகியவற்றின் வழியாக விளக்கியுள்ளனர்.
சீனா, அடுத்த அமெரிக்கா என தன்னை நம்பிக்கொண்டு அமெரிக்காவை அப்படியே நகல் செய்கிறதோ என சந்தேகம் உருவாகிறது. ஏனெனில் அந்நாட்டில் கட்டப்படும் கட்டுமானங்கள் அப்படியே அமெரிக்காவை பிரதியெடுத்தாற்போலவே உள்ளன. நுகர்வு கலாசாரத்தை அரசும், பொதுவுடைமை கட்சியுமே ஊக்குவிக்கிறது. இப்படி இருக்கும்போது சூழல்பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருந்தாலும் சோசலிச கொள்கையை ஒரு காலத்தில் கடைபிடித்த நாடு இப்படியான சீரழிவில் தள்ளப்பட்டுவிட்டதே நினைக்கையில் வருத்தமாக உள்ளது.
சீனாவில் சூழல் சார்ந்த பிரச்னைகளை ஆதாரப்பூர்வமாக பேசுகிற, பிரச்னைகளை விளக்குகிற சிறந்த நூல் என்று கூறுவதில் எந்த அய்யமுமில்லை.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக