சக நண்பர்களைக் கொன்று துரோகம் செய்த முரிம் கூட்டணி அமைப்பின் தலைவரை பழிவாங்க துடிக்கும் இளம்பெண்!
பிளாக் சர்பென்ட்
வெப்டூன்.காம்
காமிக்ஸ்
முரிம் கூட்டணி, பிளாக் சர்பென்ட் என்ற வலிமையான படையை பயிற்சி கொடுத்து உருவாக்குகிறது. தீயசக்தி இனக்குழுவை அழிக்க பயன்படுத்துகிறது. ஆனால், இறுதியில முரிம் கூட்டணி தலைவர், பிளாக் சர்பென்ட்படையை துரோகம் செய்து அவர்களை முற்றாக அழிக்கிறார். ஏனெனில் அப்படையினர், ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள். பெற்றோர் இல்லாதவர்கள். குழுவின் தலைவி, ஜியோன்மா, படுகாயமுற்றாலும் உயிர் பிழைத்து முரிமை பழிவாங்க முற்படுவதுதான் கதை.
ஆதரவற்ற வலிமையான தற்காப்புக்கலை கொண்ட இளம்பெண்ணின் கதை. ஈட்டிதான் அவளின் ஆயுதம். தன்னையொத்த வீரர்களை துரோகம் செய்து முரிம் கூட்டணி ஏமாற்றியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, படுகாயமுற்ற நிலையில் கூட தன்னை பிழைக்க வைத்துக்கொண்டு எதிரிகளை கொல்ல நினைக்கிறாள். அப்படி வரும் வழியில் ஒயிட் பந்தனா என்ற கொள்ளைக்கூட்டத்தினரை சந்திக்கிறாள்.அவர்கள்,அவளை வல்லுறவு செய்து அனுபவிக்க நினைக்கிறார்கள். நாயகி ஈட்டியைச் சுழற்ற தலை காற்றில் பறக்கிறது. மெல்ல கொள்ளைக்காரர்களின் தலைமையிடத்திற்கு வந்து அத்தனை பேரையும் ஒரு விஷயம்தான் கேட்கிறாள். சாப்பிட சோறு இருக்கிறதா? ஆனால், எதிரிகள் அவளை தாக்க முயல்கிறார்கள். நாயகி, ஈட்டியை சுழற்ற எதிரிகள் ரத்தம் எரிமலைக் குழம்பு போல நிலத்தில் சி்ந்தி ஆவியாகிறது. அவள் எதையும் யோசிப்பதில்லை. தன்னை எதிர்த்தால் கொல்வது அவ்வளவுதான்.
இப்படியே சண்டை போட்டு அவள், ஒயிட் பந்தனா எனும் அந்த கொள்ளைக்காரர்களை முழுமையாக கொல்கிறாள். தனியொருத்தியாக.... இறுதியாக அக்கூட்டத்தில் இருவர் மட்டுமே தங்களது கூட்டத்தினருக்கு தகவல் சொல்ல உயிர் பிழைத்து ஓடுகிறார்கள். கொள்ளைக்காரர்களைக் கொன்றுகூறுபோட்டதால், அந்த ஊர் மக்களுக்கு மகிழ்ச்சி. நன்றியின் வெளிப்பாடாக, தினசரி உணவு செலவை மக்களே பார்த்துக்கொள்கிறார்கள், ஜியோன்மாவுக்கு கொள்ளைக்காரர்களின் இடம் தங்குவதற்கும், பயிற்சி செய்வதற்கும் கிடைத்துவிடுகிறது. உணவுப் பிரச்னையும் தீருகிறது. அப்புறம் என்ன, பழிவாங்கலுக்கு தயார் செய்யவேண்டியதுதான்.
இந்தக்கதையிலும் கதையின் போக்கிலேயே நாம் எது நன்மை எது தீமை என உணருவதற்கு கதாசிரியர் உதவுகிறார். தீயசக்தி குழுவை அழித்ததால் தீமை அழியவில்லை. தீமை என்பது மனிதர்களல்ல. அது ஒரு சிந்தனை என்பதை முரிம் கூட்டணி புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு பிழைத்திருக்க ஒரு பொது எதிரி தேவை. அதை அவர்கள் கட்டமைக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப இனக்குழுவின் பெயர் மாறுகிறது. முரிம் கூட்டணி பேசும் கலந்துரையாடலில் மவுண்ட் குவா இனக்குழு தலைவர் மட்டுமே பிளாக் சர்பென்ட் தலைவர் ஜியோன்மா கொல்லப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார். ஏனெனில் அப்படை பல்வேறு சமயங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அவர்களை முதுகில் குத்தி ஏன் கொன்றீர்கள் என கேள்வி கேட்க, துரோகிகளுக்கு உடனே கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி கேள்வி கேட்கலாம் என பேசுகிறார்கள்.
முரிம் கூட்டணி தலைவர், பிளாக் சர்பென்ட் குழுவை உருவாக்குகிறார். ஆனால், அதன் தலைவர் ஜியோன்மாவின் வலிமை அவரைவிட அதிகரித்தது, அவருக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிவிடுகிறது. எனவே, அவளை அழித்துவிட முயல்கிறார் என்பதே உண்மை.
இந்த நிலையில் ஒயிட் பந்தனாக்களை பராமரிக்கும் அசுரா இனக்குழுவினர், ஜியோன்மாவை அழிக்க கூலிக்கொலைகாரர்களை அனுப்புகிறார்கள். அத்தனை பேர்களையும் நாயகி, ஒற்றை ஆளாக சமாளித்து பரலோகம் அனுப்புகிறாள். அதிலும் கதை முழுக்கவே கருப்பு வெள்ளையாக வரைந்திருப்பதும் அழகாக உள்ளது. சண்டை என்று வந்துவிட்டால் ஜியோன்மாவின் ரத்தம் சூரியனைப் போல கொதிக்க தொடங்கிவிடுகிறது. எதிரிகளிள் கை, கால், தலை என பலதும் நான்கு திசைகளிலும் பறக்கிறது. இத்தனைக்கும் ஜியோன்மாவின் ஆன்ம ஆற்றல் இல்லாமலேயே அவளால் எதிரிகளை வீழ்த்த முடிகிறது. இதைப் பார்த்து கிராமத்து இளைஞன் யூ, ஜியோன்மாவிடம் தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள சேருகிறான். இதற்கடுத்து, கொள்ளையர்களை அழிக்க வுடாங் இனக்குழுவில் இருந்து இளைஞன் ஒருவன் வருகிறான். அவனும் ஜியோன்மாவின் சீடனாகிறான். ஜியோன்மாவும், வுடாங் இளைஞனும் போடும் சண்டையில் வரும் உரையாடல்கள் அவசியமில்லை. ஆனால் எழுத்தாசிரியர் அதை எழுதிவிட்டார்.
ஜியோன்மா அதிகம் உரையாடக்கூடியவர் அல்ல. அந்த சூழலில் தன்னை எதிர்த்து வாள் உயர்த்துபவர்களை யோசிக்காமல் கொல்பவர். எதற்கு தன்னுடைய அடையாளம் பற்றியெல்லாம் அறிமுகமில்லாத ஒருவனிடம் தன்னை தாக்க வருபவனிடம் பேசவேண்டும்?
வுடாங் இளைஞன், ஜியோன்மாவிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு குருவாக ஏற்று பயிற்சிகளை செய்யத் தொடங்குகிறான். ஏற்கெனவே, ஜியோன்மா அவனது உயிரைக் காப்பாற்றியவள் என்று அவளது அடையாளத்தையும் தெரிந்துகொள்கிறான். அந்த நேரத்தில் ஒருவரை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பணி வருகிறது. அதில், ஜியோன்மா, வுடாங் இளைஞன், யூ என மூவரும் இணைந்து செல்கிறார்கள்.
இதில், அவர்கள் கூலிக்கொலைகாரன் ஒருவனை சந்தித்து சண்டை போடுகிறார்கள். அந்த சண்டைக்காட்சி சிறப்பாக வரையப்பட்டுள்ளது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக