தாயை மீட்பதை விட்டுவிட்டு கவர்ச்சிப் பெண்கள் பக்கம் மடைமாறும் நாயகன்!
வென்ஜென்ஸ் ஆஃப் ஹெவன்லி டீமன்
மங்காகோ.காம்
70 க்கும் கூடுதலாக அத்தியாயங்கள்
மு குடும்பத்தைச் சேர்ந்தவன் நாயகன் மு. இவனுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள ரத்தம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி அடித்து உதைத்து தற்காப்புக்கலை கற்கும் உடல் பாகங்களை சிதைத்து அனுப்புகிறார்கள். இவனது சகோதரன்தான் அதை செய்கிறான். குற்றுயிராக கிடப்பவனை வயதான மாஸ்டர் ஒருவர் எடுத்து உயிரைக் காப்பாற்றி, சில பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறார். அப்போதுதான் நாயகனுக்கு ஹெவன்லி டீமன் இனக்குழுவின் ரத்தம் தனக்குள் ஓடுகிறது என தெரியவருகிறது. அவனது குடும்பம் அவனை வெளியே தள்ளிவிட்டது. அவனது அம்மா, அப்பாவின் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். நாயகனுக்கு அம்மாவை மீட்பதுதான் முக்கியம். அவனால் அம்மாவை மீட்க முடிந்ததா, இடையில் சந்தித்த திருடர்கள், ஆகாய நகர தூதர்கள், வெட்டிப்பெருமை பேசும் பணக்கார வாரிசுகள் என நிறையப் பேர்களை நாயகன் மு எதிர்கொண்டு சண்டை போடுகிறான்.
மங்காகோ.காமில் காமிக்ஸ் படங்களை குறிப்பிட்ட முறையில் வெட்டி ஒட்டி பதிவிடுகிறார்கள். அது அனைத்து காமிக்ஸ் கதைகளுக்கும் பொருத்தமாக இல்லை. சிலசமயங்களில் படங்கள் தாறுமாறாக வெட்டப்படுகின்றன. சில பக்கங்களில் எந்தக் கதையுமே இல்லை. காலியாக உள்ளது. சில பக்கங்களில் ஒற்றை படம் மட்டுமே உள்ளது. வதைக்கிறீங்களேடா?...
கதையில் முக்கியமான திருப்புமுறை நாயகன் மு, அவனது அம்மா யே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு என்பதை அறிவதுதான். அதேசமயம், அவனுடைய ரத்தம் கூட யே இனக்குழுவுக்கான ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. நாயகனுக்கு வயதான மாஸ்டர் ஒருவர் ஹெவன்லி டீமன் தற்காப்புக்கலைகளை சொல்லிக்கொடுக்கிறார். அதாவது சிலவற்றை மட்டுமே... அவர் தனது பெயரைக் கூறுவதில்லை. தான் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றியாக, ஹெவன்லி டீமன் ரத்தம் கொண்டவர்களைக் கண்டால் அவர்களுக்கு முடிந்தவரை உதவு என்று கூறிவிட்டு செல்கிறார்.
நாயகன் அப்படியே சுற்றித் திரிகிறான். அப்போது, அவனுக்கு கூலிப்படை வேலைகளை செய்யும் அப்பாவும் பெண்ணும் எதிர்ப்படுகிறார்கள். எதிர்பாராதவிதமாக மகளை குரங்கு ஒன்றிடமிருந்து நாயகன் மு காப்பாற்றுகிறான். பதிலுக்கு அவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு வருகிறது. நாயகனுக்கு செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. அம்மாவைக் காப்பாற்ற தற்காப்புக்கலையில் வலிமை தேவை. அதற்கு நல்ல உணவு, மாத்திரைகள் வாங்கவேண்டுமே எனவே, பணியை ஏற்கிறான். பாலைவனத்தில் செல்லும்போது ஆபத்தான எதிரிகளை சந்திக்கிறார்கள். அப்போது, நாயகன் முவுக்கு மட்டுமே ஒரு குரல் கேட்கிறது. என்னை வந்து விடுவி, வா சீக்கிரம் வா என குரல் உதவி கோரி அல்ல. ஆணையாக இருக்கிறது.
அப்படி ஆணை வரும் இடத்தை எதிர்பாராமல் நாயகன் முவும் , கூலிப்படை அப்பா, பெண்ணும் சென்று அடைகிறார்கள். அங்குதான் அந்த இரண்டு மனிதர்களைப் பற்றிய உண்மை தெரிகிறது. அவர்கள் இருவருமே குரூரமான பிரபல திருடர்கள். அவர்கள் நாயகன் முவை கொன்றுவிட்டு பொக்கிஷங்களை அடைய முயல்கிறார்கள். கூலிப்படை குழுவினரை மாத்திரையில் புழு ஒன்றைக் கலந்துகொடுத்து அதை வைத்து ஒரே நேரத்தில் கும்பலாக படுகொலை செய்கிறார்கள். அப்போது நாயகன் மு, தன்னை அழைத்த குரலை அடையாளம் கண்டு கொள்கிறான். அது ஒரு மரவாள். அதன் அருகில் மூத்திரம் பெய்து மரவாள் ஆன்மாவுக்கும் அவனுக்கும் வார்த்தைப்போர் முற்றுகிறது. இருந்தாலும் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டபோதில், வாளின் உதவியை நாடுகிறான். அவனது ரத்தம்தான் அந்த வாளின் ஆன்மாவை வெளியே விடுவிக்க ஒரே வழி. அது ஒருவித ரத்த ஒப்பந்தம் கூட. அந்த ஆன்மா யாரென்பது பின்னரே நாயகனுக்கு தெரியவருகிறது. அது ஒரு சக்திவாய்ந்த இளம்பெண் ஆன்மா. நாயகனை தனக்கு சேவகனாக கருதுகிறது. அவன் பலவீனமாக இருப்பதால், மூலிகை மருந்துகளை ஏராளமாக கேட்கிறது.
ரத்தம் மூலம் நாயகன் மு, இளம்பெண் ஆன்மா என இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகிறது. மு செய்யும் தற்காப்புக்கலை முன்னேற்றம், இளம்பெண் ஆன்மாவுக்கு கிடைக்கும்தான். ஆனால் திருடர்களுடன் சண்டை போடுமளவு முவுக்கு வலிமை கிடையாது. எனவே இரு திருடர்களையும் இளம்பெண் ஆன்மாவே கொன்றுபோடுகிறது. பிறகு அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்கிறார்கள். நாயகனுக்கு இளம்பெண் ஆன்மாவோடு, சிவப்புக்கல் பதித்த மரவாள் ஒன்று கிடைக்கிறது. அதைப் பார்ப்பவர்களுக்கு வாள் என்று தோன்றாது, மரத்துண்டு என்றுதான் தோன்றும். அதை கையில் யாராவது தவறி எடுத்தால், அவர்களின் ஆன்ம ஆற்றலை உறிஞ்சி தன்னை வலிமையாக்கிக்கொள்ளும். இதனால், வாளை பயன்படுத்துபவர் தற்காப்புக்கலை ஆற்றலில் வல்லவராக இருந்தால் மட்டுமே வாளை ஈடுகொடுத்து சுழற்றி சண்டை போட முடியும். கருப்பு நரகம் என அழைக்கப்படும் வாளை யாராவது தெரியாமல் எடுத்து பயன்படுத்த முயன்றால், அவர்கள் சக்தியை முழுக்க உறிஞ்சி கொன்றுவிடும்.
சீன தற்காப்புக்கலை தொடரில், இதுபோல நாயகன் மரத்துண்டை வாளாக பயன்படுத்துவான். அதை பலரும் ஏளனமாக அணுகுவார்கள். நாயகன் அடிபட்டு அவன் ரத்தம் வாளில் பட பட, அதன் மெருகு கூடி வலிமை பெறும். அதை தீயசக்தி இனக்குழுவினரில் வாளாக காட்டுவார்கள்.
ஒரு வாள் தனக்கான உரிமையாளரை தேடிச்சென்று அடையும் என பழமொழி உண்டு. இதை காமிக்ஸ் கதைகளில் டிவி தொடர்களில் கூறுகிறார்கள். அந்த வகையில், திருடர்களால் உயிருக்கு ஆபத்து வந்தாலும் கூட பாலைவனத்தில்தான் நாயகனுக்கு வாழ்நாள் முழுக்க அவனைக் காக்கும் வாளும், இளம்பெண் ஆன்மாவும் கிடைக்கிறார்கள்.
இளம்பெண் ஆன்மா பலவீனமாக இருப்பதால், அதை வலுப்படுத்த மருத்துவ மூலிகைகளை வாங்க வேண்டுமே? அதற்காக லாங் குடும்பம் நடத்தும் ஏல நிறுவனத்திற்கு நாயகன் மு செல்கிறான். அங்கு அவனை ஏமாற்றி காசை பிடுங்க ஒரு இளம்பெண் முயல்கிறாள். உடனே, இளம்பெண் ஆன்மா எழுந்து மந்திர தாக்குதலை முறித்து கட்டழகியை உளவியலாக மிரட்டுகிறது. ஏலம் விடும் அமைப்பின் பாதுகாவலருக்கு தங்கத்தை எறிந்த நாயகன் மு, ஏல நிறுவனத்தின் பெண்ணிடம் மூன்று விலையுயர்ந்த கற்களைக் கொடுக்கிறான். அதை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் உறுப்பினர் அட்டையும், மீதியுள்ள பணத்தை லாபமாக எடுத்துக்கொள்வது திட்டம்.
நாயகன் மு, ஏலம்விடும் இடத்தில் ஏலநிறுவனத்திற்கு ஆதரவாக விலையை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டு உதவுகிறான். மேலும் அவனுடைய பொருட்களையும் விலை ஏற்றிவிட்டு லாபம் சம்பாதிக்கிறான். இதனால், அந்த ஏலநிறுவன பெண்ணுக்கு அவனை எப்படியாவது இணக்கமான வணிக கூட்டாளியாக்கிவிட ஆசை. உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், உதவிக்கு எங்களை கூப்பிடுங்கள் என்கிறாள். அவளுக்கு வணிக போட்டியை சமாளிக்க தற்காப்புக்கலையில் வலுவுள்ள ஆள் தேவை. அதற்கு நாயகன் முவை நம்புகிறான். இவள்தான் கதையில் நிறைய இடங்களில் மு குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்கிறாள்.
கதையில் குறை என்பது அப்பா பாத்திரம். அவன் தற்காப்புக்கலையை கற்கவிடாமல் செய்து அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டியதற்கு பின்னாளில் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், அதை வாசிக்கும்போதே ஏற்கமுடியவில்லை. ஒரு குடும்ப காரியஸ்தன் முன்னிலையில் இன்னொருவரின் காலை தலையில் ஏற்று சரிங்க ஐயா என்று சொல்லுபவரை யார் மு இனக்குழு தலைவர் என்று சொல்வார்கள்? மரியாதை கொடுப்பார்கள். நாயகன் முவின் அப்பா அந்தளவு சக்தி உள்ளவர்களிடம் கோழையாக, பலவீனமானவர்களிடம் வீரம் காட்டுபவராக இருக்கிறார். நாயகன் மு போடும் சண்டை சிறப்பாக உள்ளது. ஆனால், இறுதியாக வீட்டை அடித்து உடைத்து அதை சரிசெய்ய காசைக் கொடுத்துவிட்டு வருவது என்ன மனநிலை என்று தெரியவில்லை.
நாயகன் முவுக்கு தற்காப்புக்கலையில் பெரிய தேர்ச்சியில்லை என்பதற்காக பலரும் அடித்து கேலி சித்திரவதை செய்யும்போது அவனது அப்பா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தபோது அவனை குப்பை, இழிந்த பிறவி என ஏசுகிறார். இப்படியான ஆளை கொல்லாமல் நாயகன் விடுவது அத்தனை பயிற்சி, தற்காப்புக்கலை கற்றுக்கொண்ட பிறகு கூட என்ன பிரயோஜனம் என்று கேட்க வைக்கிறது. நாயகன் அம்மாவின் மீது பாசம் வைத்திருப்பதாக பேச்சில் கூறுகிறானே ஒழிய, கதையில் இருவருக்குமான நெருக்கம் பற்றிய ஒரு சம்பவம் கூட இல்லை. இதனால் அம்மா பாசம் என கதையை இழுக்கும்போது... சலிப்பாக இருக்கிறது.
நாயகனின் புத்திசாலித்தனம் வெளிப்படும் இடம் பெரிதாக ஏதுமே இல்லை எனலாம். பூமியிலுள்ள உயிரினங்கள் வலிமையில் குறிப்பிட்ட வரம்பு தாண்டும்போது வரும் சொர்க்க மின்னல் தண்டை சம்பவம் மட்டுமே விதிவிலக்கு. மற்றபடி கதையில் நாயகன், தியானம் செய்வதோ, சக்தியை பெருக்கிக்கொள்வதோ அதை வைத்து புத்திசாலித்தனமாக எதையாவது செய்கிறாரா என்றால் இல்லை. இதனால் கதை ஒரு கட்டத்தில் அம்மா பாசம் இல்லையென்றால் தொங்கிவிடுமோ என அயர்ச்சியாக உள்ளது. நாயகனுக்கு அம்மாவை மீட்பதுதான் நோக்கம் என்றால், அதற்கு என்ன செய்யவேண்டும். இளம்பெண் ஆன்மாவை வலுவாக்கவேண்டும். அதை செய்கிறாரா என்றால் சாமானியமாக இல்லை. இதற்கிடையில் கிளுகிளு நீச்சலுடை காட்சிகள் வேறு வருகி்ன்றன.
இப்படியான சம்பவங்கள் எல்லாம் கதையை எங்கோ, எங்கெங்கோ தமிழ்நாட்டை விட்டு ஆந்திரத்தின் சித்தூர் பக்கமாக இழுத்து செல்கிறது. அங்குதான் பத்துமொழி பேசுவார்களே, முதல்வரே சொல்லித்தருவேன் என்று கூறியிருக்கிறார். எப்படியோ நாயகன் பிழைத்துக்கொள்ளக்கூடும்.
கதையின் ஓவியங்கள் அந்தளவு சிறப்பாகவோ தனித்துவமாகவோ இல்லை. மங்காகோ.காம் தளத்தில், கதைகளை தாறுமாறாக வெட்டியதில் கதையின் பல பக்கங்கள் காணாமல் போய்விட்டன. குறிப்பிட்ட காமிக்ஸ் தளங்களின் பக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொடுக்கவேண்டும். அப்படியல்லாதபோது காமிக்ஸை கடுமையாக உழைத்து எழுதினாலும் கூட எடுபடாது.
அம்மா பாசக்கதை.... நடுவில் நிறைய இளம்பெண்கள் டூபீசில் வருவதால் கதை வேறு பாதைக்கு மாறி எங்கெங்கோ போய்விடுகிறது. நாயகனுக்கு குறிப்பிட்ட நோக்கம் என்பதை எழுத்தாளர் குறிப்பிடவில்லை. எனவே, கதையை வாசிக்கும் நாமும் ஆபோ என்ற பாத்திரம் போல வறுத்த கோழிக்கறியை தின்றுகொண்டே வாசிக்கலாம். படிக்க பிடிக்கவில்லையா வேறு சுவாரசியமான கதைக்கு மாறிக்கொள்ளலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக