வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி

 

 



 

டெரர்
ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ்
தெலுங்கு

மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம்.

எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை.

நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலையில் சீருடை அணியமுடியாதபடி மாற்றி கீழே வைக்கிறார்கள். நாயகனின் ஊழல் சிக்கலால், அவனது அப்பா முகம் கொடுத்து பேசுவதில்லை. வீட்டிலும் அனுமதிப்பதில்லை. தனியாக வீடு எடுத்து, குழந்தை பெற முடியாத மனைவியுடன் வாழ்கிறான். படத்தில் தன்னால் குழந்தை பெற முடியாது என்பதை நாயகனின் மனைவி, இன்னொரு அதிகாரியிடம் எதற்கு கூறுகிறார் என்று தெரியவில்லை. பொதுவாக நெருக்கமானவர்களிடம் இன்பம், குறிப்பாக துன்பத்தை பகிர்வது ஏற்புடையது. முதல்முறையாக சந்தித்த ஒருவரிடம் தன்னால் பிள்ளை பெற முடியாது என பெண் ஒருத்தி கூறுவாளா? ஓகே கதையில் அதற்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனாலும் நாயகனின் குழந்தை பெற முடியாத மனைவி பாத்திரத்தில் நடிகை நிகிதாவுக்கான இடம் குறைவுதான்.

படத்தில் முக்கியமான முரண்பாடு. நாயகனுக்கு அப்பாவிடத்தில் மீண்டும் சேரவேண்டும். பணியில் ஊழல் கறை உள்ளது. அதை சரிசெய்யவேண்டும். இதற்கிடையில், ரெய்டு நடத்தி பிடிபட்ட பணத்தை திரும்ப தொடர்புடைய அமைச்சருக்கு கொடுக்கவேண்டிய நிர்பந்தம் வருகிறது. இந்த வேலையை நாயகனின் மேலதிகாரியே செய்கிறார். இதேநேரத்தில் தீவிரவாத தாக்குதலை தடுக்கும் முயற்சிகளை தன்னுடைய குழுவினரோடு சேர்ந்து செய்கிறான்.

ஶ்ரீகாந்த் மேகா, இப்படத்தில் நாயகன் விஜய்யாக நேர்மையாக செயல்பட முடியாமல் அலைகழிக்கப்படுபவராக சிறப்பாக நடித்திருக்கிறார். தேசபக்தி வசனம், முகத்தில் தொங்கும் சதை இதெல்லாம் திருஷ்டி. மற்றபடி அனைத்தும் சுபமே. நாயகனுடைய குழுவினரே ஒருவித கலவையான ஆட்கள். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மூர்த்தி என்ற பாத்திரத்தில் வரும் தொந்தியான காவல்துறை அதிகாரி.

பிரியதர்சி சிறிய பாத்திரம் என்றாலும் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். தோற்றம், பேசும் தொனி இவற்றில் ஏதேனும் வேறுபாடு காட்டியிருந்தால் கவனிக்கும்படி இருந்திருக்கும். நாயகன் வெல்கிறான் சரிதான். அதற்காக சற்று புத்திசாலித்தனமாக வில்லன் பாத்திரம் இருந்துவிடக்கூடாதோ? வங்க தேச தீவிரவாதிகளுக்கு, ஆந்திரத்தில் உள்ள உள்துறை அமைச்சரே உதவுகிறார். இவர்களை நாயகன் வசனம் பேசி கைது செய்து சிறையில் அடைக்கிறார். தனது அப்பாவுடன் சேர்கிறார். தொழில் வாழ்க்கையில் ஊழல் கறை மறைகிறது. அவ்வளவேதான் படம். இறுதிப்பகுதி எதிர்பார்த்த அளவில் சுவாரசியமாக இல்லை. படத்தில் எல்லா விஷயங்களுமே நாயகன் விஜய்க்கு அனுகூலமாக இருந்து முடிந்துவிட்டதைப் போல உள்ளது.

சாயம் போன காக்கி.
கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்