முற்பிறப்பில் சகோதரனால் படுகொலையான தம்பி, தற்காப்புக்கலையால் வலிமை பெற்று வந்து பழிவாங்கும் கதை!

 

 


 ரெக்கார்ட்ஸ் ஆஃப் டீமன் பாத் ரிடர்ன்
குன்மாங்கா.காம்
57 அத்தியாயங்கள் ----

இந்த மாங்கா காமிக்ஸ் கதையில், முழுக்க தீயசக்தி இனக்குழுவில் நடைபெறும் அதிகாரப்போட்டி, வாரிசு அரசியல், வஞ்சனை, துரோகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்கள்.

கதையின் தொடக்கத்தில் நூல்களை வாசித்துக்கொண்டிருக்கும் தீயசக்தி இனக்குழுவின் ஏழாவது இளவரசனுக்கு ஒருவர் விஷத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அவர் அதைக் குடித்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற வற்புறுத்துகிறார் ஒரு படையணித் தலைவர். இளவரசன் தன்னை வற்புறுத்துபவனைக் கொன்றுவிட்டு, அவனது படையணிகளை வெறியோடு கொல்கிறார். திடீரென பின்புறமிருந்து ஒருவன் அவனைத் தாக்கிக் கொல்கிறான். கொல்பவன்தான், தீயசக்தி இனக்குழுவின் தலைவன். நாயகனின் ஆறாவது சகோதரன், மியோன் காக். நாயகன் இறக்கு்ம்போது, அதிகாரம் இல்லாமல் இருப்பதால்தான் இப்படி அநீதியாக நாம் கொல்லப்பட்டோம் என நினைத்துக்கொண்டே சாகிறான். அவன் உயிர்மெல்ல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. ஆம் மற்றொரு மறுபிறப்பு பழிவாங்கல் கதைதான்.

அரசகுலத்தில் வாரிசு அரசியல் போட்டிதான் கதை. இக்கதையில் நாயகன் இருப்பதிலேயே பலவீனமானவன். ஆனால், மற்றவர்களைவிட நேர்மையானவன். நிறைய நூல்களை வாசிப்பவன். ஒருகட்டத்தில் வலிமையில் தற்காப்புக்கலையில் அடையும் ஞானத்தில் தீயசக்தி இனக்குழுவின் தலைவரே அவனைப் பார்த்து திகைத்துப் போகிறார்.

இதில் நாயகன் தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவனாக இருந்தாலும் குறிக்கோளே இல்லாத கொலைகளை சித்திரவதைகளை செய்வதில்லை. முந்தைய பிறவியில் அதிகாரத்திற்கு ஆசைப்படாவிட்டாலும் அவனால் ஆபத்து வரும் என ஆறாவது இளவரசன் தனது சகோதரனை பின்புறமாக இருந்து தாக்கி வீழ்த்துகிறான். படுகொலை செய்கிறான். எனவே, நாயகன் தன்னை பலப்படுத்திக்கொண்டு ஹெவன்லி டிமோன் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள தலைவனாக முயல்கிறான். அவனுடைய அம்மா, சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர். அதனால் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து உணவில் நஞ்சு கலக்கப்பட்டு படுக்கையில் கிடந்து இறந்துபோகிறார். அம்மா பற்றி இனக்குழு தலைவரான அப்பா கவலை கொள்ளாதது நாயகனுக்கு ஆறாத ரணத்தை மனதில் உருவாக்கியுள்ளது.
ஆனாலும் கூட அவன் தன் கூடவே இருப்பவர்களை, அவமரியாதையாக நடந்துகொள்பவர்களை மரியாதையுடன் கண்ணியமாகவும் நடத்துகிறான். வலிமை பற்றி சந்தேகப்படுபவர்களை வாளால் வீழ்த்தி அவர்களை தனது அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வருகிறான்.

எதிர்காலம் தெரிவதால், தான் கொல்லப்படுவதை எதிர்த்து நாயகன் போராடுகிறான். அதிகாரத்தை பெற என்னென்ன செய்கிறான், செல்வாக்கை எப்படி வளர்த்துக்கொள்கிறான் என்பதே கதையின் சுவாரசியம். தனக்கு தேவையான வீரன் ஒருவனுக்கு தற்காப்புக்கலை நூலை கொடுத்து அதை வைத்தே அந்த வீரனை தன்னுடைய பக்கமாக கொண்டு வருகிறான். அதோடு, அதிகார படிநிலையை தீயசக்தி இனக்குழு தீவிரமாக கடைபிடிக்கிறது. அங்கு வலிமைதான் அடிப்படை. வலிமையானவனுக்கு பலவீனமானவன் பணியவேண்டும். அதுதான் சட்டம்.

தனக்கு, மேற்கு குடியிருப்புக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் வேண்டுமென ஐந்து பேர்களை அழைத்து வருகிறான். அவனுக்கு தான் யாரென்றே தெரியாத வகையில் வாள் பயிற்சியை வழங்குகிறான். அவர்களை வைத்தே தற்காப்புக்கலை பயிற்சிக்கான தனி இடத்தை பந்தயம் வைத்து அதில் போட்டியிட்டு வென்று பெறுகிறான். இந்த நேரத்தில் அடுத்த இனக்குழு தலைவர் போட்டியில் இருப்பவர்களை ஆதரிக்கும் சியோ இனக்குழுவினர், ஏழாவது இளவரசனை அணுகுகிறார்கள். அவனுக்கு தான் சதுரங்க காய்கள் போல நடத்தப்படுவது பிடிக்கவில்லை. அதை அவன் வெளிப்படையாகவே கூறுகிறான். எந்த வலிமையால் அழுத்தப்பட்டாலும் உறுதியாக இருக்கிறான். அதுவே அவனுக்கு மரியாதையைப் பெற்றுத் தருகிறது.

நாயகனின் சிறப்புகளை பட்டியலிடுவோம். அதிகாரத்திற்காக அவன் சுயமரியாதை தன்மானத்தை இழப்பதில்லை. அதிகாரப் போட்டியில் அவன் அடையும் உயரங்கள், இனக்குழுவை விட்டுக்கொடுத்து பெற்றதில்லை. அவர்களை முடிந்தவரை பாதுகாக்க முயல்கிறான். கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறான். குறிப்பாக, டொமின் என்ற சிறிய நாட்டு வியாபாரியை, சிலர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட அதைக்கூட தட்டிக் கழிக்காமல் சரிசெய்து பிரச்னையை தீர்த்து வைக்கிறான். அதற்கு பரிசாக அவனுக்கு விரைவாக செல்லும் குதிரை பரிசாக கிடைக்கிறது. கதையின் பின்னே, நாயகன் விஷம் வைக்கப்பட்ட இளம்பெண்ணைக் காக்கிறான். அவள் வேறு யாருமில்லை, முன்னர் உதவி செய்த பெண்ணின் தங்கை. இளவரசி. இப்படி தான் செய்த செயல் வழியாக பல்வேறு நலன்களைப் பெறுகிறான். இங்கு அவன் பெறும் நட்பும் ஆதரவும் முக்கியமானது. மஞ்சூரியர்களோடு சண்டையிட்டாலும் அவர்களை காரணமே இல்லாமல் கொன்று குவிப்பதில்லை.
வணிக தடங்களை பாதுகாத்தால் போதும். உங்களுக்கு நான் பரிசுகொடுப்பேன் என்று சொல்லி மஞ்சூரியர்களில் தங்களுக்கு சாதகமான ஒருவரையே நியமிக்கிறான். கூடவே டொமின் என்ற நாட்டிற்கு எதிரியாக உள்ளவர்களை தனது படைவீரர்களோடு சென்று அழிக்கிறான். அந்த வகையில் டொமின் நாடு, ஏழாவது இளவரசனுக்கு ஆதரவாக மாறுகிறது.

நாயகன் எங்குமே தேவையில்லாமல் யாரையும் கொல்வதில்லை. படைவீரர், தனது சகோதரியை ஒருவன் வல்லுறவு செய்துவிட்டான் என கதறி அழுகிறார். அதை மனதில் குறித்து வைத்துக்கொண்டு அந்த வீரரை கூட்டிக்கொண்டு சென்று சம்பந்தப்பட்ட தாவோயிச தலைவர்களை வெட்டிக் கொல்கிறான். அதேநேரம், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியின் நோயையும் தீர்க்கிறான். நோயை தீர்க்கும் இடத்தில் மவுண்ட் குவாவைச் சேர்ந்தவருக்கு தன்னுடைய ஞானமடைந்த தருணத்தைக் கூறுகிறான். அவருக்கு அதைக் கேட்டதும் உயிர் பிரிகிறது. ஏறத்தாழ பல்லாண்டுகளாக ஞானத்திற்கு போராடிய நிலையில், இருபது வயது இளைஞனிடம் சண்டை போட்டு தனது வாழ்க்கையில் எதிர்பார்த்த அதுவரை கிடைக்காத அற்புதத்தைப் பெறுகிறார்.

நாயகனுக்கு மனதில் உறுத்தும் விஷயமாக அம்மாவின் அமைதி இல்லாத அரண்மனை வாழ்க்கை சம்பவங்களே  உள்ளன. அவனது அம்மாவை பெரிய பின்புலம் இல்லாத நிலையில் பலரும் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால், அதை நாயகனின் அப்பா கண்டுகொள்வதில்லை. ஓரிடத்தில் அவனது அம்மா, மகனிடம் நாம் இங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவோமா நிம்மதியாக வாழலாம் என்கிறார். அப்போது நாயகன் நான் வளர்ந்து வலிமையாகி உன்னை பாதுகாப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அந்த காட்சியை நாம் வாசிக்கும்போது என்னவிதமாக அதிர்ச்சியை உணர்வோம் என்று யோசித்துப் பாருங்கள்.

நாயகனுக்கு வாழ்க்கையில் நிறைய கடினமான சூழல்கள் உள்ளன. அதை அவன் மெல்ல சமாளித்து கடக்கிறான். தற்காப்புக்கலை கற்று வலிமையான பிறகு கூட கடந்த கால கசப்புகளை அவன் யாரிடமும் காட்டுவதில்லை. மிரட்டுபவர்களை, தனது ஆட்களை அவமானப்படுத்துபவர்களை விட்டுவைப்பதில்லை. பதிலுக்கு பழிவாங்குதல் குரூரமாக இருக்கிறது. எதிரிகளே அதைக் கண்டு மிரள்கிறார்கள். பயர் கிங் என்பவன், சிமா ஜின் என்ற இளம்பெண்ணை தாக்கினான் என்பதற்காக உறுதியுடன் சண்டை போட்டு அவனது தலையை வெட்டி வீசுகிறான்.

அதேநேரம் எதிர்ப்படும் எதிரிகள் அத்தனை பேரையும் வெட்டி வீசுவதில்லை. திறமைசாலிகள் என தெரிபவர்களை தோற்கடித்து மன்னித்து என்புறம் வந்துவிடுகிறாயா என்று கேட்கிறான். அந்தளவு புத்திசாலித்தனம் அவனுக்கு உண்டு, இது அவனது ஆறு சகோதரர்களுக்கும் கிடையாத குணம். தலைவனாக மாறுவது அவன் லட்சியம். அந்த லட்சியத்தைக் கூட அவன் அந்த பொறுப்புக்கு வராதபோது அவன் கொல்லப்படுவான் என்ற நெருக்கடியில்தான் செய்கிறான். அதேநேரம் எந்த நிலையிலும் போர்வெறியில் தன்னை மறந்துவிடுவதில்லை.

நிறைய இடங்களில் நாயகனுக்கான அதிநாயகத்துவ காட்சிகள் உண்டு. ஆனால், அவை எல்லை மீறி செல்லவில்லை. முடிந்தவரை இயல்பாகவே இருக்கின்றன. 

komalimedai team

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்