எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

 

 



பிகினிங் ஆப்டர் தி எண்ட்
மாங்கா காமிக்ஸ்
200 அத்தியாயங்கள்.

குன்மாங்கா.காம்

இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்கிடையில் சபியன் அரசரின் மகள் இளவரசி காத்தலின். அவளுடைய இதயத்தையும் ஆர்தர் ஈர்க்கிறான். இக்கதையில் அவனை நோக்கி வரும் பெண்களை கணக்கிட்டால் கைவிரல் கொள்ளாது. லிலியா, காத்தலின், டெசியா, எமிலி, ஜாஸ்மின், பேராசிரியர் குளோரி, ஸைரஸ் அகாடமி இயக்குநர் என அவன் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட பெண்களின் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். ஒருவகையில் போர், ஆண்களின் வீரம், பழிவாங்கல் என கதை நகராமல் நிறைய பெண் பாத்திரங்களை வலுவாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆர்தர் லெய்வெய்ன், கூலிவேலைகளை செய்யும் தம்பதிக்கு மூத்த பிள்ளையாக பிறக்கிறான். கிங் கிரேவின் நினைவுகள் இருப்பதால், அவன் தன்னுடைய வாழ்க்கையை முழுக்க தற்காப்புக்கலை, போர் என்ற மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. குடும்பவாழ்க்கை, பெற்றோரின் அன்பு, நண்பர்கள் என பலவற்றையும் அனுபவிக்க நினைக்கிறான். அதேநேரம் மூன்று வயதிலேயே பல்வேறு மூச்சுப்பயிற்சிகளை படித்து தற்காப்புக்கலைக்கான சக்தியை அடிவயிற்றில் உருவாக்கிக்கொள்கிறான். அவனுடைய அப்பா, ஒரு வினோதமான ஆள். தனது மகனுக்கு சிறுவயதிலேயே மரவாளை வாங்கி வைத்து தனக்கு தெரிந்த வாள்வீச்சு கலையை சொல்லிக் கொடுக்கிறார். ஆர்தருக்கு, சிறுவயதிலேயே நூல்களை வாசிப்பதில், தற்காப்புக்கலையைக் கற்று தெளிவடைவதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், அவனது அம்மாவுக்கு பிள்ளை ஏன் நூலகம் நோக்கி ஓடுகிறான். புத்தகம் பிரித்து படிக்கிறான் என்று புரிபடுவதில்லை. ஏனெனில் அந்த குழந்தைப்பருவத்தில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். அதற்கு முறையாக சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என கருதுகிறாள்.

ஒருகட்டத்தில் ஆர்தரின் அப்பா, தனது பிள்ளை தன்னை விட பெரிய புத்திசாலி என்பதை புரிந்துகொள்கிறார். ஏனெனில் ஆர்தர் தியானம் செய்யும்போது அந்த சக்தி திடீரென கட்டற்று வெளியாகி அவர்களின் வீட்டையே இடித்துவிடுகிறது. ஆர்தர் முற்பிறவியில் கிங் கிரே என்ற அரசன் என்பதால், அந்த நினைவுகள் அவனை வலிமையாக்கிக் கொள்ள தூண்டிக்கொண்டே இருக்கின்றன.  ஆர்தரை படிக்க வைக்க அவனது பெற்றோர், இடம்பெயர்கிறார்கள். அப்படி செல்லும்போது கொள்ளையர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது, ஆர்தர் அம்மாவைக் காப்பாற்றிவிட்டு மாந்திரீகன் ஒருவனை தனது சக்தியால் கொல்கிறான். தனது உயிரை தியாகம் செய்ய முயல்கிறான். அந்த நேரத்தில் அவனுடைய அம்மா வயிற்றில் சிசு வளர்ந்து வருகிறது.

பிறகு கண் விழித்துப் பார்க்கும்போது ஆர்தர் உயிரோடு இருக்கிறான். அவனை ஒரு குரல் வழிநடத்துகிறது. அது வேறுயாருமில்லை. பெண் தெய்வம் ஒன்று. அந்த தெய்வம், அவனுக்கு தன்னுடைய அடையாளத்தைக் கூறாமல் பல்வேறு உதவிகளைக் கூறி இறுதியாக தனது சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு இறந்துபோகிறது. அந்த சக்தி அவனுக்கு உதவ வேண்டுமெனில், தற்காப்புக்கலையில் அவன் மேலே உயரவேண்டும். போகும் வழியில் அடிமை வியாபாரிகள் எல்ப் சிறுமியை பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆர்தர், தான் கற்ற தற்காப்புக்கலையை வைத்து நான்கு வியாபாரிகளையும் கொல்கிறான். பிறகு அச்சிறுமியை மீட்கிறான். அப்போதே நீ உன்னுடைய இடத்திற்குப் போ, நான் என்னுடைய வீட்டுக்குப் போகவேண்டும் என சொல்கிறான். ஆனால், அச்சிறுமி பயத்தால் மறுக்கிறாள். அவனையும் உடன் வரச்சொல்கிறாள். இப்படியான ஆர்தர், எல்ப் நாட்டுக்கு செல்கிறான். அங்கு அவன் மனிதன் என்பதால் இனவெறியாக பேசி நடத்துகிறார்கள். அரசரே அப்படித்தான் இருக்கிறார். ஆர்தர், எல்ப் இளவரசியை காப்பாற்றிய மனிதன் என்பதால், அவனை அவர்கள் புதிராகவே பார்க்கிறார்கள். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எல்ப்களுக்கும் மனிதர்களுக்கும் போர் நடைபெற்றது. அதில் தோல்வியுற்ற கசப்பு, மனித இனத்தின் அடிமை வியாபாரமும் அவர்களை கொந்தளிப்பான நிலையில் வைத்துள்ளது.

இதை ஆர்தர் புரிந்துகொண்டு, அடிமை வியாபாரம் செய்வது சிலர்தான். மனித குலமே தவறானது அல்ல என்று நேரடியாக அரசருக்கு பதில் சொல்கிறான். இதேபோல சபியன் அரசரிடம், தன்னுடைய ஆன்ம இணைப்பு விலங்கை விட்டுதர முடியாது என மூன்று முறை மறுக்கிறான். பிறகு, உங்கள் பிள்ளையை நீங்கள் விலைக்கு விற்பீர்களா என கேட்கிறான். ஆர்தர் எந்த இடத்திலும் தன்னுடைய சுயமரியாதையை தன்மானத்தையும் விட்டுக்கொடுப்பதில்லை.  முற்பிறப்பில் அரசனாக இருந்தான் அல்லவா? அதே மனநிலையை சாதாரண பின்புலம் கொண்டிருந்தாலும் கொண்டிருக்கிறான். சூது வாதுகளை புரிந்துகொள்கிறான். சதிகளை முறியடிக்கிறான். குடும்பம், நண்பர்களை பாதுகாக்கிறான். தவறு என்று தெரிந்தால் உடனே அதை தட்டிக்கேட்காமல் விடுவதிலை. ஒருகட்டத்தில் அவனுடைய நண்பர்களே, ஆர்தரால் மற்றவர்கள் என்ன நிலைக்கு ஆளாவார்களோ என பயப்படுகிறார்கள். ஸைரஸ் அகாடமி மாணவர்கள், எல்ப், ட்வர்ப் இன மாணவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்யும்போது அவர்களை தண்டிப்பது ஆர்தர்தான். அவன் உடனே ஸைரஸ் அகாடமி இயக்குநரை அழைத்து தொடர்புடைய மாணவரின் பெயரைக் கூறி பள்ளியிலிருந்து விலக்குங்கள் என கேட்கிறான். அதே இடத்தில் சபியன் அரசரின் பிள்ளைகள் கர்டிஸ், காத்தலின் இருந்தும் கூட தவறை தட்டிக் கேட்க தயங்குகிறார்கள். அதற்கு காரணம், குற்றவாளியின் பின்புலம், அவர்கள் அரசருக்கு கொடுக்கும் தங்க நாணயங்கள். ஆனால் ஆர்தர், எப்போதும் பாதிக்கப்படுபவர்களின் பக்கள் உறுதியாக நிற்கிறான். அந்த உறுதியும் நேர்மையும், தான் நேசிப்பவர்களுக்காக தன்னை பலியிட்டுக்கொள்ளும் அர்ப்பணிப்புமே ஆன்ம இணைப்பு விலங்கின் சக்தியை அவனுக்கு பெற்றுத் தருகிறது. பொய்யாக இல்லை. இயல்பாகவே அவன் அநீதியை வெறுப்பவனாக, தவறுகளை தண்டிப்பவனாக இருக்கிறான்.

ஏனோ கதையில் ஆர்தரின் வலிமை என்பதை சற்று அடக்கி வாசிப்பதாகவே காட்டியிருக்கிறார்கள். எதற்கு என்று புரியவில்லை. கடவுள்கள் அவனுக்கு போர்ப்பயிற்சி அளிக்கிறார்கள். அப்படிப்பட்டவன், அலிக்கிரையன் நாட்டின் விஷப்பெண்ணிடம் அடிபட்டு காலில் ஆபரேஷன் செய்யவேண்டி வருவதாக கதையை கொண்டு போனது எதற்கு? எல்ப் லான்ஸ் வீராங்கனையைக் கொன்ற வில்லனைக் கூட ஏற்கலாம். அவனிடம் போராடி கொல்ல முடியாமல், விரிட்டிராவைச் சேர்ந்த இன்னொரு பெண் வந்து ஆர்தருக்கு உதவுகிறாள்.

வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவனை வலுவாக காண்பிப்பதில் என்ன பிரச்னை? திரும்ப திரும்ப அவனை பலவீனமாகவே காட்டுகிறார்கள். கதையில் ஒரு இடத்தில் அவன் டெசியாவின் காதலை ஏன் பிடித்துக்கொண்டிருக்கிறான் என கடவுள்கள் கேள்வி எழுப்புகிறார்கள். போரில் ஆர்தர் ஒரு சதுரங்க காய் போல. போர் முடிந்தபிறகு அவனுடைய தேவை கடவுள்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அவனுடைய வாழ்க்கை குடும்பம், நட்பு, காதல் என வேர் கொண்டுள்ளது. டெசியாவின் மீதுள்ள காதலை, அவன் தனக்குள்ளாக கேள்வி கேட்டுக்கொண்டு பின்னரே உணர்கிறான். அவனுக்கு முன்னரே அவனைக் காதலிப்பதாக டெசியா கூறிவிடுகிறாள். மனிதருக்கும், எல்புக்கும் பிறந்த பாதி வைகஸ் ஒருவன்தான் கதையில் வில்லன். ட்வர்ப் எனும் குள்ளர்கள் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகளாக இருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகள், அதில் வரைந்த ஓவியங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளன. கிளேர், வயிற்றில் கொம்பால் குத்தி நிற்கும் காட்சி பார்க்கும்போது பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆர்தர், வைகஸை கால், கை என பல்வேறு உறுப்புகளாக மெல்ல சிதைத்து கொல்கிறான். அதற்கு முன்னர் அவன் செய்த துரோகம்தான் காரணம். அதை அவன் எங்குமே கூறுவதில்லை. ஆர்தரின் உதவியால் ஸைரஸ் அகாடமி பிழைக்கிறது. நிறைய உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

ஆனால் மூன்று நாடுகளின் கவுன்சிலில் உள்ளவர்களில் இருவர் ஊழல் கறை படிந்தவர்கள். அவர்கள் ஆர்தரைக் கொலை செய்ய நினைக்கிறார்கள். எல்ப் நாடு அவனைக் காப்பாற்ற நினைக்கிறது. அது இயல்புதானே, அவர்களுடைய எதிர்கால மருமகனை எப்படி விட்டுக்கொடுப்பது? ஏறத்தாழ இளவரசி டெசியாவை மூன்று முறையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவது ஆர்தர் மட்டுமே. ஆனால் பதிலுக்கு அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் தன்னை வலுவாக்கிக்கொள்ள தன்னுடைய புத்திசாலித்தனத்தை மட்டுமே நம்பியிருக்கிறான். பிறர் அவனுக்கு கொடுப்பதை விட மற்றவர்களுக்கு அவன் கொடுக்கும் விஷயங்களே அதிகம். ஆர்தர், அவனுடைய தந்தைக்கு போராடி கொன்ற விலங்கின் ஆன்ம ஆற்றலைக் கொடுக்கிறான். மீதியுள்ள ஆற்றலை காதலி டெசியாவுக்கு கொடுக்கிறான். அவள் அதை முழுமையாக கிரகிக்க முடியாதபோது கூடவே இருந்து உதவுகிறான். ஆனாலும் அவளுடைய தாத்தா, அதாவது ஆர்தரின் எல்ப் இன குரு, அவனை தனக்கு கீழ் அடிமைப்படுத்தி வைத்திக்கொள்ள முயல்கிறார். அவரின் குண இயல்பு வேறு. என்ன இருந்தாலும் ஆர்தர் மனித இனத்தைச் சேர்ந்தவன். ஒருநாள் தனக்கும் இனக்குழுவுக்கும் எதிராக திரும்புவான் என நினைத்திருக்கலாம். ஆனால், அந்த கட்டுப்பாடு அதுவரை ஆர்தர் எல்ப் இனத்திற்கு செய்த விஷயங்களை அற்பமாக மாற்றுகிறது. 

ஆர்தர், தனது அப்பாவிற்கு உதவிய ஏல நிறுவனருக்கு அவரின் மகளின் ஆன்ம ஆற்றலை அதிகரித்து உதவுகிறான். அதன் வழியாக சில உதவிகளை பெறுகிறான். எந்த இடத்திலும் தான்தான் உதவிகளை செய்தேன் என்று கூறுவதில்லை. லிலியா சக்தி பெற்றவளாக மாறுவது இப்படித்தான் நடக்கிறது. அதிக சக்தி அதிக பொறுப்பு என அவனது வாழ்க்கை மெல்ல மாறுகிறது.

பல்வேறு சதி சூழ்ச்சி, சுரண்டல் பேச்சுகளில் ஆர்தர் எப்போதும் ஒருபடி மேலேதான் நிற்கிறான். ஏன் கடவுள்களே கூட அவனிடம் எளிதாக ஒன்றைக் கூறி ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை. ஒரு விஷயத்தை சீர்தூக்கி பார்த்து முடிவு செய்வதில் அவனுக்கு கடந்த கால அனுபவங்கள் உதவுகின்றன. அப்படியும் கூட கொள்ளலாம். சக்தி கூடியிருந்தாலும் அவனைத் தேடி பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. அதை அவன் புத்தி, சக்தி பயன்படுத்தி எப்படி தீர்க்கிறான் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

நம்பிக்கையை கொடுக்கிற கதை.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்