மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!
ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும்.
இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. காதல், நட்புறவு, குழுவாதம், பகை, வன்மம் என பலவகை உணர்ச்சிகளும் உருவாகும். உறவு என்பதன் இயல்பே முறியக்கூடியதுதான். எனவே, மக்கள் அதிகார அமைப்புகளிலும் இதுபோன்ற தனிமனித உறவுச்சிக்கல்கள் உண்டு. இதையெல்லாம் அடிப்படையாக கொண்டுதான் அந்த அமைப்பின் செயல்பாடுகள் கூட அமைகின்றன. குறிப்பிட்ட தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
மக்கள் அதிகார அமைப்புகளில் ஒருவர் பல்வேறு வழிகளில் தகவல் தொடர்பை சரியாக அமைத்துக்கொள்ள முயலவேண்டும். அப்படியல்லாதபோது, ஒருவர் இன்னொருவர் மீது மேலாதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும். இப்படியான சூழலின் முடிவு சமத்துவமின்மையாக மாறும். ஒருவர் பேசும் பேச்சுக்கு செயல்பாட்டிற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஏற்க தேவையில்லை என நிறுவனமோ அல்லது அதற்கு ஆதரவான அரசோ கூறினால், பாதிப்பு மக்களுக்கு ஏற்படும். டவ் என்ற நிறுவனம் போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இதனால், மக்கள் பாதிப்புகளை தாங்கி நோய் வந்து இறந்தனர். பல்லாயிரம் பேர் ஊனமானார்கள். உயிருடன் இருப்பவர்களும் தீர்க்கமுடியாத நோய்களுடன் போராடி வருகிறார்கள்.
ஏற்பட்ட பேரிடருக்கு அன்றைய காலகட்ட அரசோ, பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனமோ யாருமே பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சம்பவத்தில் அரசு மக்களை ஒடுக்க நினைக்கிறது. தன்னுடைய நலன்களுக்காக நிறுவனத்தை பாதுகாக்க நினைக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையைக் கூட எளிதாக பெற முடியாத நிலை. மக்கள் அதிகார அமைப்புகள், பொறுப்பை முழுமையாக ஏற்கின்றன. அவற்றை புறக்கணிப்பதில்லை. பெருநிறுவனங்கள், தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என வலியுறுத்துகின்றன. சமூக மாற்றம், பொறுப்புகளை ஏற்பதன் வழியாகவே சாத்தியமாகும். அதை கைவிடுவதாலேயோ அல்லது புறக்கணிப்பதாலேயோ அல்ல. இதை மக்கள் அதிகாரத்துவர் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
இன்று அமெரிக்கா, சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்கிறது. வரி உயர்வை அறிவிக்கிறது. என்ன காரணம்? சீனா, அமெரிக்காவை பின்தள்ளி உற்பத்தி துறையில் முன்னேறி வருகிறது. பொருளாதார ரீதியாக அந்நாடு இன்றைக்கு ஆசியாவில் தவிர்க்க முடியாத சக்தி. இதை, ஆக்கப்பூர்வமுறையில் அமெரிக்காவினால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, குதர்க்கமான வழிகளில் அந்நாட்டை தடுக்க பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்கு வேட்டைநாய்களாக ஆசிய நாடுகளில் சிலவற்றை பயன்படுத்திக்கொள்கிறது. சுயமரியாதையும், தன்மானமும் இல்லாத கூலிப்படை மனநிலை கொண்ட தன்னம்பிக்கை இல்லாத தலைவர்கள் ஆளும் நாடுகள், தங்களுக்கு கிடைக்கும் எலும்புத்துண்டுகளுக்கான அடிமை வேலையை ஏற்று ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற மேலாதிக்க, ஒடுக்குமுறை செயல்பாடுகள், தொடர்புடைய இரு நாடுகளை மட்டுமல்ல உலகநாடுகளிலுள்ள மக்கள் அனைவரையுமே பாதிக்கும்.
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை தனிமைப்படுத்தி அவற்றின் சுயசார்பை உடைக்க பல்வேறு செயல்பாடுகளை செய்கின்றன. இவற்றை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், கூட்டுறவு செயல்பாட்டின் மூலம் எதிர்கொள்கின்றன. சில மனிதர்களுக்கு, அமைப்புகளுக்கு தடை விதிப்பது, இறக்குமதி, பொருளை விற்க தடை, சிலருடன் பணி செய்ய மறுப்பது என புறக்கணிப்பு பல்வேறு வகையாக இருக்கும். இதுபோன்ற தடை சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாடுகளுக்கு, நட்பு நாடுகளின் துணை அவசியம். மக்கள் அதிகாரத்துவர்களைப் பொறுத்தவரை அவர்களின் செயல்பாடு வழியாகவே நண்பர்கள் நிறையப் பேர் கிடைப்பார்கள். அவர்கள் தங்களது பணிகளை எப்போதும் போல ஊக்கமுடன் செய்யவேண்டும்.
அரசு அல்லது நிறுவனம் மேலாதிக்கத்தை அமல்படுத்தும்போது அதை உடைக்க மக்கள் அதிகாரத்துவர்கள் பல்வேறு நுட்பமான வழிகளைக் கையாள்கிறார்கள். இதில் எந்த இடத்திலும் வலுக்கட்டாயப்படுத்துதல் இருப்பதில்லை.
மக்கள் அதிகாரத்துவ அமைப்புகளில் கலந்துரையாடல்கள் நடக்குமே ஒழிய, எடுத்த முடிவுகளை ஒப்புக்கொள்ள வைக்கும் பிரயத்தனங்கள் நடக்காது. குறிப்பிட்ட நாட்டு தலைவருக்கு உதவிகளை வழங்கிவிட்டு அவர்களை அழைத்து வந்து செருப்பால் அடித்து கருப்பட்டியை கையில் கொடுப்பது போன்று நடந்துகொள்ளும் செயல்கள், ஜனநாயகத்தின் பேரில் அரங்கேறுகின்றன. தான் செய்த உதவிக்கு பகிரங்கமாக நன்றி கூறியாகவேண்டும் என வற்புறுத்துகிற அசிங்கம் கூட நடைபெறுகிறது. பலவந்தமாக ஒன்றைக் கேட்டுப்பெறுவதற்கு பெயர் பிச்சையா, கொள்ளையா? என்னவோ தெரியவில்லை.
அவை ஒரு நாட்டின் தலைவரை மட்டுமல்ல அந்நாட்டு மக்களையே அவமானப்படுத்துவது என்று கூறினால் சரியாக இருக்கும். அனைவரும் ஒன்று கூடி பேசி எடுக்கவேண்டிய முடிவை, உலகநாடுகளின் ஊடகங்களின் முன்னே வைத்து பேசுவது எப்படி ஜனநாயகத்துவமான நடவடிக்கையாக மாறும்? குறிப்பிட்ட நடவடிக்கை, செயல்பாடுகளை தீர விவாதித்து முடிவெடுத்த பிறகு அதை செய்தியாளர்களிடம் அறிவித்துவிட்டு அதுதொடர்பாக கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கலாம். அது திட்டம் பற்றி புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும். ஒருவர் பலவீனமான நிலையில் உள்ளார் என்பதற்காக அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவதை மனிதநேயம் உள்ள எவரும் செய்யத் துணிய மாட்டார்கள். நட்புநாடுகளை அதன் பரப்பளவு செல்வாக்கு கடந்து உரிய மரியாதையுடன் நடத்துவது நல்லது. உரிமைகளை, சுதந்திரங்களை நட்பு என்ற ஒற்றை பெயர் கொண்டு நசிப்பிக்க கூடாது. அதன் பெயர் நட்பல்ல. மேலாதிக்கம். அடக்குமுறை.
இங்கிலாந்தின் லண்டனில் 1991ஆம் ஆண்டு ஆர்டிஎஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு முதலாளித்துவத்திற்கு எதிராக இயங்கியது. நகரிலுள்ள இடங்கள், சாலைகள் தொழிலதிபர்களுக்கு சொந்தமானதல்ல. அது மக்களின் சொத்து. அவற்றை தன்னாட்சியுடன் இயங்க அனுமதிக்கவ வேண்டும் என அமைப்பு பிரசாரம் செய்தது. இதற்காக, பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளை சாலைகளில் நடத்தியது. சாலைகள் வேண்டாம், கார்கள் வேண்டாம், முதலாளித்துவம் வேண்டாம் என பல்வேறு போராட்டங்களை புதுமையுடன் நடத்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக