செயற்கையாக நோயை உருவாக்கி, இயற்கை நோயை விரட்டலாம்!

 

 




 

மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவ முறை

வெறுமனே ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, அதன் மூலம் என்று படித்தால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. வலைப்பூவில் ஓமியோபதி பற்றி எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம், அம்முறை வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பரவலாகி வருகிறது. மருத்துவர்கள் எளிதாக கிடைப்பது, மருந்துகள் விலை குறைவு என அரசு தரப்பில் நிறைய காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் அரசு ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று மக்களுக்கு வரும் நோய்கள் அந்தளவு தீவிரமாக மாறிவிட்டன. கூட்டு மருத்துவ சிகிச்சையே இனி பயனளிக்க கூடியது. இப்போதைக்கு ஓமியோபதி பற்றிய தெளிவை பெறுவோம்.

ஓமியோபதி பற்றிய தகவல்களை ஆங்கிலம், தமிழ் நூல்களிலிருந்தும், என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தும் கூறுகிறேனே ஒழிய, நான் பட்டம் பெற்ற மருத்துவன் அல்ல. மருத்துவர்களுக்கு உதவியாளனும் அல்ல. உங்களுக்கு ஓமியோபதியில் சந்தேகம் வந்தால், மருத்துவரை அணுகலாம். நூல்கள் தேவை என்றால் தமிழக அரசின் மின்னூலகத்தை அணுகலாம். நூலகத்தில் ஏராளமான ஓமியோபதி தமிழ்நூல்கள் கிடைக்கின்றன. இவையெல்லாம் ஓமியோபதி பற்றிய புரிதலுக்கு.... மருத்துவம் செய்ய படித்த மருத்துவரை அணுகுங்கள்.

எனக்கு ஒவ்வாமை நோய் இருந்தது. தொடக்கத்தில் அதற்கு ஆங்கில மருத்துவமுறையை நாடினேன். மருந்து, மாத்திரைகளை தின்னும் வரை நோய் அறிகுறிகள் கீழே அழுத்தப்பட்டன. பிறகு மீண்டும் தோன்றின. புட்டத்தில் கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வெளியே வந்தது. இதுபோல கொப்புளங்கள் உடல் எங்கும் பரவத் தொடங்கின. அப்போது வேலையும் இல்லை. கையில் காசுமில்லை. குடும்பத்திலும் ஆதரவற்ற நிலை. எனவே, நானாக, ஆறு கி.மீ. தொலைவிலுள்ள அரசு தாலுகா மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வாரத்திற்கு இரு சித்த மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் இருவருக்கும் யார் அதிக நோயாளிகளைப் பெறுவது என போட்டியிருந்தது. ஆனால், நோய்களுக்கு புரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சில மாதங்களுக்கு பிறகு அந்த மருத்துவமனையை கைவிட்டு எட்டு கி.மீ. தொலைவிலுள்ள இன்னொரு சமுதாய மருத்துவமனைக்கு சென்றேன். இங்கு சித்த மருந்துகள் அனைத்தும் தரத்தில் படுமட்டமானவை. மருந்துகளை டப்பாக்களில் கொடுப்பவரே உன்னுடைய வியாதிக்கு இந்தமருந்து கேட்காது என கூறிவிட்டார். மருத்துவர், பரிட்சை எழுதி வந்தாரா அல்லது கொல்லைப்புற வழியாக செல்வாக்கு, உறவுகளைப் பயன்படுத்தி வந்தாரோ தெரியவில்லை. நோய் பற்றியோ, நோய்க்கான உணவு பத்தியம் பற்றி பேச காசு கொடுத்தால் கூட பேச மறுப்பார் என தோன்றியது.
வக்கத்தவனுக்கு அரசு மருத்துவமனை என ஒரு திரைப்படத்தில் நடிகர் ராஜ்கபூர் கூறுவார். அனுபவ உண்மை. வேறுவழியில்லாமல் தரமே இல்லாத மருந்து என மருந்துகொடுப்பவர் கூறியதை சாப்பிட்டேன். நோய் கட்டுப்படவில்லை. மாறாக உடலெங்கும் பரவியது.

ஒவ்வாமை நோய்க்கு குலதெய்வத்திற்கு கிடா வெட்டாதது, சேவல், கோழி அறுக்காதது எல்லாம் காரணம் இல்லை. மாநகரத்திற்கு சென்று படித்தபோது, கடைபிடித்த உணவுப்பழக்கம் என்னை வீழ்த்தியது. வெள்ளை பிரெட், பால், ஊட்டச்சசத்து பானம் என இவைதான் காலை உணவு. சகோதரர் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தாலும் சௌக்கியமாக இருந்தார். தந்தை எனக்கு அனுப்பிய பணத்தைக்கூட கவர்ந்து வளமாக இருந்தார். ஆனால் உணவு என்று வரும்போது, என்னை கைவிட்டுவிட்டார். பசி பொறுக்க முடியாமல், கடையில் கிடைத்த பிரெட்டை வாங்கி சாப்பிட்டேன். இட்லி நான்கு வாங்கி சாப்பிட உனக்கு காசு இல்லையா என கேட்பீர்கள். உண்மை. ஆனால் அந்த சமயம் எனக்கு இட்லியை வாங்கிச்சாப்பிட ஏனோ தோன்றவில்லை. மளிகைகடையில் கணக்கு வைத்து பிரெட், பால் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டேன். மதியத்திலும் கூட ஐடிசி அப்போது தயாரித்த ஸ்பெஷல் என்ற க்ரீம் பிஸ்கெட்தான் உணவு. இதை மாதக்கணக்காக சாப்பிட, காளான்படை தொற்றியது. ஒவ்வாமை என பொதுவாக சொல்லலாம். சிலர் சொரியாசிஸ் என பயந்தனர். ஏதாகிலும் சரி, உடலில் நீளமான உறுப்பு தோல் கெட்டுவிட்டது. அதுதான் நீங்கள் அறிய வேண்டிய இறுதி உண்மை.
சொந்தக்கதை போதும். ஆர்கனான் ஆப் மெடிசின் நூலில் சாமுவேல் ஹனிமன் கூறும் கருத்துக்களைப் பார்ப்போமா?

உடல், அந்தராத்மா என இரு கருத்துகள் உள்ளன. உடலுக்கு வரும் நோய்கள், மருந்துகளை சாப்பிடும்போது தீர்ந்துவிடும், ஆனால், சில சமயங்களில் வரும் நோய், அந்தராத்மாவை பாதிக்க கூடியன. அந்தராத்மா என்பதை உடலை இயக்கும் சக்தி. நம்மால் பார்க்க முடியாது என நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

ஓமியோபதி மருத்துவர், நோயாளியிடம் பேசும்போது, அவர் வயது, தொழில், வாழிடம், குண இயல்புகள், உணவு பழக்கவழக்கம், நோய் எந்த நாட்களில் தீவிரமாக இருந்தது என பலதையும் கேட்டு, அறிகுறிகளை கவனித்து மருந்துகளைக் கொடுப்பார். மீன் ஊறுகாய் சாப்பிடுகிற வங்க மாநில பார்ப்பனனுக்கு, குடல்புண் நோயை குணமாக்குவது எளிதான காரியமாக இருக்காது அல்லவா?

ஓமியோபதி மருந்து தடுப்பூசி போன்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. தடுப்பூசி மருந்து எப்படி ஒருவரின் உடலில் செலுத்தப்பட்டு, அவருக்கு குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளை உருவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறதோ அதே வழிமுறைதான். ஒருவருக்கு உள்ள நோயை ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் மருந்துகளை அதிக வீரியமாக கொடுப்பார்கள். ஓமியோபதி மருந்துகள் ஆறு பருவக்காலங்களிலும் ஒருவருக்கு உடலில் பயனளிக்க கூடியது. ஆனால் மருந்துகளை முறையாக கையாள வேண்டும். உண்ணும் மருந்துகளை மாத்திரைகளை கையில் தொடக்கூடாது. வெளியில் படாத, இருளான இடத்தில் வைக்கவேண்டும். அதை கண்ணாடி அல்லது பீங்கானில் எடுத்து பயன்படுத்தவேண்டும்.

ஏற்கெனவே நோயுள்ளவருக்கு அதே நோயை ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் மருந்துகளை கொடுத்து, செயற்கையாக நோய் ஒன்றை உருவாக்குகிறார்கள். இப்போது இரு நோய்களுக்கும் உள்ள அறிகுறி ஒன்றாகவே இருக்கும். இந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்புசக்தி மெல்ல பலப்பட்டு, நோய்களை அழிக்கும். அப்போது, செயற்கை நோய்க்கான மருந்து வீரியத்தை குறைத்தால் அந்த நோய் மெல்ல அறிகுறிகள் இல்லாமல் போய் அழியும். அதற்கு முன்பே இயற்கையாக வந்த நோய் அகன்றிருக்கும்.

ஒரு நோயாளியை அவரின் நோய் அறிகுறிகள் முற்றாக நீங்கி நோய் விலகும்படி செய்தலே ஓமியோபதி மருத்துவரின் முதற்கடமை என தனது நூலில் முதல் பத்தியில் குறிப்பிட்டிருக்கிறார். சித்த மருத்துவம் போல, ஓமியோபதியும் தாவரங்கள், விலங்கு, உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து மருந்துகளை தயாரிக்கிறார்கள். நான் ஒவ்வாமைக்கென பயன்படுத்திய அரசு மருந்துகள் அனைத்தும் அட்வென், ஸோயா லேப்ஸ், கேரள ஓமியோபதி கூட்டுறவு நிறுவனம் தயாரித்த மருந்துகளாகும். இவற்றை தமிழ்நாடு அரசுக்காக டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வழங்குகிறது.
 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்