குடும்பத்தால் ஏற்படும் இறந்தகால அவமானங்களுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு பழிவாங்கும் இளைஞன்!

 



 

மார்சியல் மாஸ்டர் ஃபிரம் மார்சியல் லைப்ரரி
மங்காகோ.காம்

முரிம் கூட்டணியில் கூலிப்படையில் வேலை செய்யும் தற்காப்புக்கலை வீரரான இளைஞருக்கு வேலை ஒன்றை கொடுக்கிறார்கள். வேலைக்கு மறுக்க முடியாதபடி அதிக காசும் கொடுத்து துணைக்கு இரண்டு வலுவான வீரர்களையும் அனுப்பி வைக்கிறார்கள். நாயகன், ஒரு கற்பலகை ஒன்றை தேடி கொண்டு வந்து கொடுக்கவேண்டும். ஆனால், அதை அடையச் செல்லும் பாதை முழுக்க ஏராளமான பொறி அமைப்புகள். அதை உடைத்துக்கொண்டு போக முயன்றதில் நாயகனைத் தவிர்த்து அனைவருமே இறந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு கற்பலலை உள்ள இடத்தில் அம்பு, ஈட்டி, விஷம் என நிறைய பொறிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நாயகன் எப்படியோ தப்பி பிழைத்து சுரங்கம் போன்ற பாதை வழியாக ஊர்ந்து சென்று கற்பலகையை கண்டுபிடித்துவிடுகிறான். அதிலுள்ள வினோதமாக எழுத்துகளை தன் கையைக் கடித்து அந்த ரத்தம் மூலமாக எழுதிக்கொள்கிறான். கிரந்த எழுத்துக்கள் போல பார்க்க வினோதமாக படிக்க பொருளை அறியமுடியாதபடி இருக்கிறது கற்பலகையின் தொன்மை எழுத்துகள். அதை தொட்டு பார்க்கும்போது எதேச்சையாக விரலிலுள்ள ரத்தம் கல்லில் படுகிறது. உடனே கணினி உயிர் பெற்றதைப் போல குரல் ஒன்று ஒலிக்கிறது. நீங்கள் தற்காப்புக்கலை நூலகத்தில் நுழைவதற்கு பதிவு செய்திருக்கிறீர்கள் என்று குரல் கூறுகிறது. இக்கதை இப்படித்தான் தொடங்குகிறது.

ஹா சோகன் என்பது நாயகன் பெயர். அவனுடைய அம்மா, நோயுற்று இறந்துவிடுகிறார். அப்பா பெரிதாக எதையும் கண்டுகொள்ளாத ஆள். அவர்தான் குடும்பத்தலைவர். ஆனாலும் மகனுக்கு அவனது அம்மா சாரந்து ஆதரவு இல்லை. அவளது இனக்குழு அரசியல், பொருளாதார ரீதியாக தாழ்நிலை கொண்டது என்பதற்காக அவனை ஹா குடும்ப ஆட்களே தள்ளி வைத்து பழைய வீட்டை ஒதுக்கி தந்து வசிக்கச் செய்கிறார்கள். ஹா சோகனுக்கு பிறக்கும்போதே தற்காப்புக்கலை கற்கும் உடல் அமைப்பு கிடையாது. அதாவது தாண்டியன் என சக்தியை சேகரித்து வைக்கும் அமைப்பு இல்லை. இச்சூழ்நிலையில் தற்காப்புக்கலையை அவன் கற்றால், ஆயுள்சக்தியை பயன்படுத்தவேண்டும். அப்படி செய்தால், ஆயுள் குறைந்துபோவதோடு, விரைவில் இறந்தும்போய்விடுவான்.

அவனுக்கு தற்காப்புக்கலை தெரியாத காரணத்தால் அவனுடைய தம்பி ஒருவன் அவனை அடித்து சித்திரவதை செய்கிறான். அதை தட்டிக்கேட்கும் பாதுகாவலர் ஒருவரை குடும்ப ஆட்கள், ஆபத்தான வேலைக்கு அனுப்பி படுகொலையாகும்படி செய்கிறார்கள். பிறகு சித்திரவதை தாங்க முடியாத ஹா சோகன். வீட்டை விட்டு வெளியேறி கூலிப்படை அமைப்பில் சேர்ந்து சுயாதீனமாக கிடைக்கும் வேலையை செய்து வாழ்கிறான். அப்படியான நாள் ஒன்றில் முரிம் கூட்டணி வேலை கிடைக்கிறது. அவனுக்கு சிறுவயதில் நடந்த கசப்பான உணர்வு காரணமாக குடும்பம், தந்தை என எந்த பாசமும் இருப்பதில்லை. இப்படியான சூழ்நிலையில், தற்காப்புக்கலை நூலகம் அவனுக்கு மீண்டும் அவனது வாழ்வை வாழும் வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, திரும்ப இறந்தகாலத்திற்கு செல்கிறான் நாயகன். அங்கு பாதுகாவலர் உயிரோடு இருக்கிறார். கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் தனக்கு பிடித்தவர்களை விரும்புகிறவர்களை விட்டுவிடக்கூடாது என உறுதி பூணுகிறான்.

அந்த தற்காப்புக்கலை நூலகத்தில் ஒருவர் உறுப்பினரானால், உலகிலுள்ள ஏராளமான தற்காப்பு கலைகளை கற்க முடியும். நூலகத்தில் நூலை எடுத்தால் பதினைந்துநாள் படிக்க தவணை உண்டு அல்லவா? அதேதான். ஆனால் இங்கு ஒருமாதம் தவணை கொடுக்கிறார்கள். நூலை படிக்க கொடுப்பதும் மாறுகிறது. அதாவது, தற்காப்புக்கலை அறிவை நேரடியாக மூளையில் பதிய வைக்கிறார்கள். ஒருமாதம் அந்த பயிற்சி மூளையில் இருக்கும். பிறகு அழிந்துவிடும். அதற்குள் நாயகன் அதை முறையாக பயிற்சி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மூளையில் பதியப்பட்ட நூல் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். ஹெவன்லி டீமன் ஆர்ட்ஸ் எனும் கலையை, தாண்டியன் இல்லாமல் கற்க வாய்ப்புண்டு என்பதால் அதை தேர்ந்தெடுக்கிறான். இதன் மூலம், தன்னை இறந்தகாலத்தில் சித்திரவதை செய்த தம்பியை அடித்து வீழ்த்துகிறான். பிறகு சுப்ரீம் ஸ்வோர்ட் ஆர்ட் என்ற வாள்வீச்சு கலையை பயில்கிறான்.

நாயகனுக்கு உடலில் தற்காப்பு்க்கலை ஆற்றலை சேமிப்பதற்கான உடல் பாகம் கிடையாது. எனவே, குறைந்த ஆற்றலை உள்ளே சேகரிக்க முடியும். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை நூலகத்தில் உள்ள இளம் பெண்மணி ஹூவாயூன் தீர்க்கிறார். சிலசமயம் அவரே நூலகத்தில் இருந்து வெளியே வந்தும் உதவுகிறார். நூலகத்தில் யார் எல்லாம் உறுப்பினர் ஆகிறார்களோ, அவர்கள் போடும் சண்டையை நூலகம் பதிவுசெய்து வைத்துக்கொள்கிறது. கற்கும் கலையையும் நூலாக்கி வைக்கிறது. இதற்கு பரிசாக வீரருக்கு தேவையான மருந்து, மாத்திரை, நூல்கள் உதவி ஆகியவற்றை வழங்குகிறது.

நாயகனுக்கு திரும்ப இறந்த காலத்தை வாழும் வாய்ப்பு கிடைக்கிறது. போனமுறை அவனுக்கு தற்காப்புக்கலை தெரியாது. அடியும் உதையும் வாங்கி சித்திரவதைப்பட்டான். ஆனால், இந்தமுறை அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அவனுக்கு தன்னுடைய எதிரிகள் யார், துரோகிகளாக மாறப்போவது யார், ஹா இனக்குழு தலைவரின் நோக்கம், அவரை சுற்றியுள்ளவர்கள் சுயநலம் என அனைத்துமே அவனுக்கு தெரிகிறது. எனவே, தன்னை வளர்த்துக்கொள்ள நூலகத்தின் உதவியை நாடுகிறான். மற்றபடி குடும்பத்திலுள்ள யாரையும் அவன் நம்புவதில்லை. தன்னை மட்டுமே நம்புகிறான். ஏனெனில் அவனது அம்மாவின் அரசியல் சமூக பொருளாதார நிலை குலைவு காரணமாக அவனை தேவடியாள் பயல் என்றே குடு்ம்பத்தினர் அழைக்கிறார்கள். இப்படிப்பட்டவன், இனக்குழுவைப் பற்றி என்ன நினைப்பான். தான் சற்று வலுவானதும் இனக்குழுவை விட்டு வெளியே போகவேண்டும் என யோசித்துக்கொண்டு இருக்கிறான். முதல் வாழ்க்கையில் எதுவுமே எளிதாக இருக்கவில்லை. பசி தாங்காமல் கடையில் உள்ள டம்ளிங் என்ற தின்பண்டத்தை திருடி தின்று அடிவாங்குகிறான். அப்போது அவனுக்கு தற்காப்புக்கலை வீரர் உதவுகிறார். அவனுக்கு சில சண்டை உத்திகளை சொல்லிக் கொடுக்கிறார். அதனால்தான் அவனால் கூலிப்படையில் வேலையை தேடிக்கொள்ள முடிகிறது.

தற்காப்புக்கலை நூலகம் மூலம் கிடைத்த வாய்ப்பில், நாயகன் ஹா சோகன் தன்னை வதைத்த சித்திரவதை செய்த பலரையும் போட்டுப் பொளக்க முடிவு செய்கிறான்.அதேபோல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்கிறான். குடும்பத்தினர், சிறுவயதினரின் தற்காப்புக்கலையை அறியும் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள். அதில், நாயகன், அவனது தம்பி எப்படி மோசடி செய்து இறந்தகாலத்தில் வெல்வான் என்று தெரிந்துகொண்டு அதை முறியடித்து நிறைய இலச்சினைகளை சேகரிக்கிறான். கூடவே, அதை செய்யும்போது அவனது மாமா ஒருவர் சண்டைக்கு வருகிறார். மாமாவாவது மயிராவது என நேருக்கு நேர் சண்டை போட, எதிராளி திகைத்துப் போகிறார். ஒருகட்டத்தில் அவர் தன்னிலை மறந்து நாயகனை கொல்லும் நிலைக்கு செல்கிறார். அப்போது அங்கு டாங் குடும்ப முதியவர் வருகிறார். அவர்தான் ஹா குடும்ப போட்டியில் வழங்கும் இரு பரிசுகளை வழங்கியவர். அவருக்கு என்னவென்றால், வலிமையான தற்காப்புக்கலை வீரனை சும்மானாச்சிக்குமேனும் தனது பேத்திகளில் ஒருத்திக்கு கட்டி வைத்துவிட ஆசை. அவருக்கு அவரது குடும்பத்தை வலுவாக்க ஆசை. வாள் வீரன் ஒருவன் மருமகனாக இருந்தால், யாரும் அவரது குடும்பத்தை உடனே சீண்டிப்பார்க்க முடியாது அல்லவா?
நாயகன் ஹா சோச்சனின் திறமையை தூரத்தில் இருந்து பார்த்து புரிந்துகொள்கிறார். நல்ல சாமர்த்தியசாலி. பேத்திகளில் ஒருத்திக்கு கல்யாணம் செய்துவைத்துவிடலாம் என நினைக்கிறார். ஆனால், நாயகனுக்கு தெரியும். அவன் யார், அவனை மணந்துகொள்வதாக கூறும் விஷ பேரரசி எனும் புகழ்பெற்ற இளம்பெண் யாரென? இத்தனைக்கும் நாயகன் ஹா சோகனுக்கு எதிர்காலத்தில் அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கப்படும் பெண் எப்படிப்பட்ட வீராங்கனை ஆவாள் என்று தெரிந்திருப்பதால், அவன் டாங் முதியவரிடம், அய்யா, பொம்மைக்கல்யாணம் வேண்டாம். உங்களுடைய பேத்தியின் திறமை பற்றி எனக்குத் தெரியும். இப்போது எனக்கு வயது பனிரெண்டுதான் என மறுத்துவிடுகிறான். அவருக்கு அவன் நேரடியாக மறுத்தது வருத்தமாக உள்ளது. ஆனால், அவனைப் பற்றிய மதிப்பீட்டில் அவர் சற்றும் தவறு இழைக்கவில்லை.

அன்றைய சீனத்தில் திருமணம் என்பது மாப்பிள்ளை வீடு இளப்பமாக செல்வாக்கு இல்லாமல் இருந்தால் மாப்பிள்ளையை பெண் வீடு, தன்னுடைய குடு்ம்பத்தில் சேர்த்துக்கொள்ளும். அவன் அங்கு அடிமை போல இருக்கவேண்டும். பெரிய மரியாதை இருக்காது. பெண்ணை, மாப்பிள்ளை தனது இல்லத்தில் வைத்து பார்த்துக்கொள்வதுதான், இல்லறம் நடத்துவதுதான் அங்குள்ள கலாசாரம், மாப்பிள்ளைக்கான லட்சணம் கூட.

நாயகன் ஹோ சோச்சன், திருமண மறுப்பை பணிவாகவே கூறுகிறான். அவனது சண்டை போடும் திறமையைப் பார்த்த மாமா ஒருவர், அவனுக்கு தான் பத்து ஆண்டுகளாக கடினப்பட்டு போராடி உருவாக்கிய ஓட்டமுறையை சொல்லிக்கொடுக்க நினைக்கிறார். அவர்தான் ஹோ மூச்சல். சண்டை போடும் வெறி மிக்கவர். தன்னிலை இழப்பவர். முதல் வாழ்க்கையில் அவர் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டுவிடுவார். எனவே, நாயகன் அதை தடுக்க முயல்கிறான். மாமா மூச்செல், சிறந்த வீரர்தான். ஆனால் பேச்சில் செயல்பாட்டில் சிறுகுழந்தை போன்ற பிடிவாதமும், கோபமும் கொண்டவர். நாயகன், அவரின் ஹெவன்லி ஸ்டெப்ஸ் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டு உடனே செய்துகாட்ட மாமா மலைத்துப்போகிறார். நாயகன் ஹோ சோகனுக்கு பின்னணியில் நூலகம் இருப்பது அவருக்கு எப்படி தெரியும். புதிய கலையை நூலகம் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.

தற்காப்புக்கலை நூலகத்தின் முதல்தள நிர்வாகி, இளம்பெண் ஹூவாயூன், நாயகன் ஹோ சோச்சனுக்கு கற்கும் கலையில் அய்யம் தோன்றும் போதெல்லாம் வந்து உதவி செய்கிறார். அவருக்கு, நாயகன் மீது உணர்ச்சிகரமான பிடிப்பு உருவாகிறது. நாயகன், ஹூவாயூனைப் பற்றி நினைக்கும் அனைத்து விஷயங்களையும், அவன் சொல்லாமலேயே அப்பெண் அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர். இதனால், அவன் ஹூவாயூன் முன்னிலையில் மனதில் ஏதேனும் யோசித்தாலே போதும். இளம்பெண் உடனே அதற்கு தேவையான பதிலைக் கூறுகிறார்.

தற்காப்புக்கலை நூலகத்தில் அடுத்த தளங்களுக்கு செல்ல, தற்காப்புக்கலையை நிரூபித்து சண்டை போட்டு காட்டி எதிரியை வெல்லவேண்டும். அப்படி வென்றால், அடுத்த தளத்திலுள்ள நூலகத்திற்கு இன்னொரு நிர்வாகியை சந்தித்து பேசி நூல்களை வாசிக்கலாம். முதல் தளத்தில் சண்டை போட்டு ஏழுவயது சிறுமியை வெல்கிறான். சண்டையின் இடையேதான் இளம்பெண் ஹூவாயூன், ஏழுவயது சிறுமி ஆகியோர் இருவரும் ஒருவரே என புரிந்துகொள்கிறான். தான் கற்ற கலையை ஒன்றாக்கி இணைத்து போட்டியிட்டு வெல்கிறான். தன்மேல் நம்பிக்கை வந்தபிறகு, சரி வெளியே சென்று உலக அனுபவம் பெறுவோம். கூடுதலாக மாப்பிள்ளை கேட்ட டாங் குடும்பத்தினரை மூன்று ஆண்டு கழித்து சந்திக்க வாக்கும் கொடுத்திருப்பதால் அதை நிறைவேற்ற இனக்குழு தலைவரிடம் அனுமதி கேட்கிறான். அவரும் அனுமதி கொடுக்கிறார். ஆனால், அவருக்கு ஹோ சோச்சன் எப்படி தற்காப்புக்கலை கற்று சண்டை போட்டான் என திகைப்பாக இருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அவனை கண்காணிக்கிறார்.

முதல்தளத்தில் போட்டியில் வென்று விடுவதால், அடுத்த தளத்திற்கு செல்கிறான். அங்குள்ள மாஸ்டர், கைகளால் சண்டை போடுபவர். அதாவது, சுப்ரீம் வாள்வீச்சு முறையை உருவாக்கியவர். உனது உடலை வலுவாக்கினால்தான் அடுத்த வாள் பயிற்சி முறை என்று உறுதியாக கூறிவிடுகிறார். அவனை மூன்றாண்டு பயிற்சிக்கு உட்படுத்தி, வாள் பயிற்சிக்கு ஏற்றபடி உடலை மாற்றுகிறார். பிறகுதான் அவனுடை டாங் குடும்ப சந்திப்பிற்கான பயணம் தொடங்குகிறது. அவனுடன் அவனுடைய உறவுக்கார தங்கை ஒருத்தியும் சேர்ந்துகொள்கிறாள். அவள் நாயகனுக்கு நெருக்கமானவள் கிடையாது. அவளுடைய தாத்தாவின் நோயை தீர்க்கும் தெய்வீக மருத்துவர் டாங் குடும்பத்தினர் வாழும் சிச்சுவானில் இருப்பதை அறிவதால், அண்ணனின் அனுசரணையை நாடுகிறாள். நாயகன் தான் அதில் பெரிய உதவி செய்யமுடியாது. நீ கேட்டால் உடனே வந்து அவர் எந்த உதவியும் செய்யமாட்டார். அவர் செய்யவேண்டுமென நினைத்தால் செய்வார் என கூறி கிளம்புகிறான்.

இதற்குப்பிறகுதான் நாயகன் ஹோ சோச்சன் கோடரி கொள்ளைக்கூட்டம், கருப்பு இனக்குழு ஆகிய இரண்டையும் அழிக்கிறான். சிவப்புக்கண் டீமனின் வலது கையை சண்டைபோட்டு வெட்டி எறிகிறான். டீமன் வாளை நூலகத்தில் ஆய்வுக்கு கொடுக்கிறான். அவனது மாமாவையும் டீமன் இனக்குழு தலைவரோடு சண்டைபோடும்போது சந்திக்கிறான். கதை அத்தோடு நின்றுபோகிறது. இதற்குப்பிறகு எழுத்தாளர் எழுதினால்தான் படிக்கமுடியும்.

இதில் வரும், தற்காப்புக்கலை நூலகம் சரிதான். ஆனால், அதை கணினி போல உருவகப்படுத்தி காட்டியது சரியாக இல்லை. எரிச்சலூட்டும்படி ஆகிவிட்டது. அதாவது கதை, இரண்டு வித காலகட்டங்களில் பயணிக்கிறது. கூலிப்படை ஆளாக ஒரு இடத்திற்கு வந்து கல்லைத் தொட்ட காரணத்தால், நாயகன் அவனது கடந்த கால வாழ்க்கைக்கு போகிறான். அப்போது அவனது நிகழ்காலம் என்னவானது? அவனை காசு கொடுத்து அனுப்பிய முரிம் கூட்டணி அவனைத் தேடியதா? அதாவது கற்பலகையை தேட வேறு ஆட்களை அனுப்பினார்களா, அங்கு என்ன மாதிரியான நிலைமை உள்ளது என கதையில் கூறவே இல்லை.

கதையில் திருப்புமுறை என்பது அவன் டீமன் வாளை கைபிடித்து எடுத்து ரத்த இனக்குழு பெண் ஒருவரின் ஆன்மாவை சந்திப்பதுதான். அதாவது, அந்தப்பெண்ணை ரத்த இனக்குழுவைச் சேர்ந்த, அதுதொடர்பானவர்கள் மட்டுமே பார்க்கமுடியும். அவருடன் உரையாட முடியும். இந்த நேரத்தில்தான் நாயகனுடை அம்மா தரப்பு யார் என்ற கேள்வி வருகிறது.

வெறும் பழிவாங்கும் கதை போல தொடங்கினாலும் மனவலிமை, மன உறுதி என்ற விஷயத்தில் நாயகன் ஹோ சோச்சன் காட்டும் வேகம் புதிய பரிணாமம் கொண்டது. குறிப்பாக தொன்மை முன்னோர் வழிபாட்டு விளையாட்டு போட்டியில், பொறியமைத்து மூன்று பெண் வீரர்களோடு சண்டையிட்டு அவர்களை அடித்து உதைத்து கட்டிப்போடும் உத்தி, மாமா ஹோ மூச்சோலோடு உறுதியாக நின்று பின்வாங்காமல் சண்டை போடுவது, திருமணம் பற்றி உறுதியாக தனது நிலைப்பாட்டை தெரிவிப்பது என நாயகன் தன்னம்பிக்கை கதை நெடுக மீட்டருக்கு மேலேதான் உள்ளது. எழுத்தாளர், ஓவியர் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள்.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்