வட இந்திய வணிகரிடமிருந்து நூறு கோடு கள்ளப்பணத்தை கொள்ளையடிக்க துடிக்கும் நால்வர்!

 

 



 

நூறு கோடி
தெலுங்கு
சேட்டன் குமார், ராகுல், ஏமிஎலா
இயக்கம் விராட் சக்ரவர்த்தி
இசை சாய் கார்த்திக்

பணமதிப்புநீக்கத்தை அடிப்படையாக வைத்து நிறைய கிரைம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் நூறு கோடி. மற்றபடி படத்தில் சொல்வதற்கு வேறு எந்த சிறப்பான விஷயங்களுமில்லை.

வட இந்திய வணிகர் பெரும் சொத்துக்காரர். ஆள் கருப்பாக இருக்கிறார். அவரை சேட்டு என்கிறார்கள். பட்ஜெட் காரணமாக சேட்டை தென்னிந்தியாவிலேயே பிடித்துவிட்டார்கள் போல. அவருக்கு ஓரிரவில் திடீரென பினாமியிடமிருந்து போன். வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறார்கள் என. இதனால், அவர் ரகசியமாக சுவற்றில் ஒளித்து வைத்திருந்த பணத்தை சுத்தி வைத்து உடைத்து திறந்து நூறுகோடி பணத்தை எடுத்து அதை கோணிப்பையில் கட்டி வேறு இடத்திற்கு மாற்ற முனைகிறார். அப்படி மாற்ற முயலும்போது, அவரது பணம் திடீரென வைத்த இடத்தில் இருந்து காணாமல் போகிறது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோகிறார். கொலைப்பழி அவரது இளம்காதலி மீது விழுகிறது. காதலி அங்கிருந்து தனது தோழி வீட்டுக்கு தப்பியோடுகிறார். இளம் காதலி, சேட்டின் பினாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் என மூவரும் நூறு கோடியை தேடி அலைகிறார்கள். அவர்கள் மூவருமே தொடக்கத்தில் இருந்தே கள்ளப்பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். ஆனால் நான்காவதாக ஒரு ஆள் வந்து பணத்தை திருடிக்கொண்டு போய்விடுகிறார். யார் அவர் என்பதுதான் கதை

நான்காவது ஆள்தான் நாயகன் என நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அவர் எப்படி திருடினார் என்பதை நாயகனுக்கான பில்டப், ஸ்லோமோஷன் காட்சி என வைத்து பொறுமையை சோதித்து சொல்லுகிறார்கள்.

பணமதிப்பு நீக்கம் என்பதுதான் அடிப்படைக் கதையின் திருப்புமுனை. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே பணம் மீது பேராசை கொண்ட மனிதர்கள். ஒருவர் கூட இயல்பானவர்களாக இல்லை. பினாமி, அத்தனை சொத்தும் தனக்கே சொந்தமாகவேண்டும் என நினைக்கிறார். சேட், வயதானால் கூட பேத்தி வயதான காதலியுடன் செக்ஸ் உறவை அனுபவிக்க தயாராக இருக்கிறார். அதற்காக ஏராளமாக செலவும் செய்கிறார். அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர், இவர் போலீசா, ரௌடியா என்ற சந்தேகம் அவரது உயரதிகாரிக்கே உள்ளது. காக்கி பேன்ட், கலர் சட்டை, தலைகொள்ளாத முடி, அதற்கு மேல் தொப்பி ஒன்றை அணிந்துகொண்டு வருகிறார். என்னவிதமான ஸ்டைலோ? கூடவே தாடி வேறு. அதற்கடுத்து நாயகன். இவர் ஒரு மெக்கானிக். இவரிடம் உள்ள அசிஸ்டெண்ட் கூட சவரம் செய்து பார்க்க பரவாயில்லை என்று இருக்கிறார். ஆனால் நாயகனோ எப்போதும் தலைகொள்ளாத முடி, தாடி என முக்கியமான காட்சிகளில் உணர்ச்சிகளை தேட வைக்கிறார்.

மெக்கானிக்கிற்கு எதற்கு பில்டப் என்று புரியவில்லை. அவர் தனது சேமிப்பாக இருபதாயிரம் ரூபாயை மட்டுமே வைத்திருக்கிறார். குற்றங்களை செய்யும் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆனால், ஸ்க்ரூவை திருகிக்கொண்டு இருக்கிறார். இந்த முரணை எப்படி புரிந்துகொள்வது? நாயகன், சேட்டு வீட்டை நோட்டம் விட்டு திருட முயன்று வருகிறார். அப்படித்தான் நூறுகோடியை திருடுகிறார். அப்படி திருடுபவர், சாமர்த்தியமாக செய்கிறாரா என்றால் இல்லை. அதையும் பணத்தை திருட முயலும் மூன்று நபர்களுக்கு தெரியும் வகையில் செய்கிறார். அடேங்கப்பா என்ன புத்திசாலித்தனம்.

படத்தின் முடிவு கூட ஆச்சரியத்தை தரவில்லை. பணத்தை திருட முயலும் மூன்று நபர்களை விட தன்னை புத்திசாலியாக நாயகன் தன்னைக் காட்டிக்கொண்டால் அதை சாமர்த்தியாக செய்திருக்கலாம். தனது புத்திக்கூர்மையால் எதிரிகளை அவமானப்படுத்துவது போல செய்திருக்கலாம். ஆனால், இறுதிக்காட்சியில் அவர் செய்யும் செயல், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மெக்கானிக்கை விட அந்தஸ்தில், அதிகாரத்தில் உயரமாக உள்ளவர்கள் அவனை வாழவிடுவார்களா என்ன?

படத்தின் கதையாக காகிதத்தில் நன்றாக இருக்கும் கதை. காட்சியாக மாறும்போது எந்த வித ஆர்வத்தையும் தரவில்லை. அடுத்த காட்சியையும் பார்க்கலாம் என தூண்டவில்லை. எந்த உணர்ச்சியையும், ஆர்வத்தையும் தூண்டாமல் வெறுமனே கடந்து செல்கிறது. வங்கி மேலாளராக வரும் சாக்சி சௌத்ரி, ரொம்பவே மெலிந்து பரிதாபமாக தெரிகிறார். நடிப்பிலும் வாய்ப்பு குறைவுதான். கையூட்டு வாங்கும் வங்கி மேலாளர்களில் அவரும் ஒருவர். அவரையும் நாயகன் தந்திரமாக ஏமாற்றுகிறார். இறுதியாக ஆர்பிஐ லாரியில் டிரக்கை மாற்றும் காட்சியெல்லாம் சாமி.... விட்டுடுங்கடா என்று தோன்றுகிறது.

படத்தில் எந்த பாத்திரங்களும் முழுமையாக எழுதப்படவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர், பினாமி, இளம் காதலி, மெக்கானிக், அவன் உதவியாளன், என்ஐஏ அதிகாரி என ஏதும் மிஞ்சவில்லை. சாய் கார்த்திக் இசைக்கு, திரில்லர் படம் பெரிதாக உதவவில்லை. படத்தின் பரிதாபமான பாத்திரம் என்றால், நாயகனுக்கு மாமன் மகளாக வருபவர்தான். எண்ணி மூன்றே காட்சிகள்தான். ஒருமுறை ஸ்கூட்டியில் வருகிறார். தனக்கு கல்யாணம் செய்யப்போகிறார்கள் என்கிறார். பிறகு ஒருமுறை வருகிறார். அடுத்து இறுதியாக ஒருமுறை காட்டி படத்தை முடிக்கிறார்கள். எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பாத்திரம். இவரை மட்டும் குறைசொல்லி ஒன்றுமில்லை. இதே தரத்தில்தான் நாயகன் பாத்திரமே உள்ளது. அப்புறம் சொல்லவா வேண்டும்?

பனியன் ஜட்டி விளம்பர மாடல்களைப் போல உள்ளவர்களை அழைத்து வந்து நடிக்க வைத்ததற்கு பதில் நன்றாக நடிப்பவர்களை தேர்ந்தெடுத்திருந்தால் கூட சில காட்சிகளேனும் நன்றாக இருந்து தொலைத்திருக்கும்.

ச்சே விருத்தி கேடு

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்