சாமுவேல் ஹானிமன் எழுதிய ஆர்கனான் ஆஃப் மெடிசின் தமிழில்... நூல் விமர்சனம்

 

 


ஆர்கனான்
சாமுவேல் ஹானிமன்
தமிழில் வி ஆர் மூர்த்தி, எஸ்என்கே மூர்த்தி
கும்பகோணம் ஓமியோபதி இன்ஸ்டிடியூட்
விலை ரூ.3

தமிழ்நாடு அரசின் மின்னூலகத்தில் கிடைத்த ஓமியோபதி நூல். நூலை தரவிறக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், கோப்பின் அளவுதான் அதிகமாக உள்ளது. அதை நிர்வாகம் சற்று குறைத்தால், அல்லது வேறு கோப்பு வடிவில் நூல்களை வழங்கினால் நன்றாக இருக்கும். டேட்டா செலவு சற்று குறையும்.

நூலைப் பார்ப்போம். இந்த நூல், ஜெர்மனியைச்சேர்ந்த ஓமியோபதியின் தந்தையாகிய சாமுவேல் ஹானிமன் எழுதியது. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதற்கு ஆறு திருத்தப்பட்ட பதிப்புகள் வந்துவிட்டன. அதாவது, அவரது ஆயுள்காலத்திலேயே.. அந்த நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நூலின் மொழி, எழுதப்பட்ட காலத்தில் உள்ள வடமொழி, தமிழ் சங்கமமாக உள்ளது சிலசமயங்களில் உறுத்தலாக உள்ளது. மறுக்க முடியாது. ஆனால், நூலின் அடிப்படை விஷயத்தை மருத்துவர் ஹானிமன் கூற விரும்பியதை அறிந்துகொள்வது அந்தளவு கடினமாக இல்லை.

நூலில், ஓமியோபதி மருத்துவத்தின் அடிப்படை என்ன, அது எப்படி செயல்படுகிறது., நோயைத் தீர்க்கிறது, அதற்கான மருந்துகளை எப்படி உருவாக்கிக்கொள்வது என நிறைய விஷயங்களைக் கூறுகிறார். தேவையான மருந்துகளை மருத்துவர் தானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என ஓரிடத்தில் சொல்கிறார் அது மருந்தின் தூய்மை, வீரியத்திற்கான வார்த்தைகள் என நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

ஓமியோபதி இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியா போன்ற மூடநம்பிக்கை, மதவாதம் கொண்ட நாட்டில் ஆங்கில மருத்துவமுறையை விட ஓமியோபதியை நாடுவதற்கு விலை குறைவான மருந்துகள் மட்டுமே காரணம். வட இந்தியாவில் உள்ள அரசுகள் ஓமியோபதி மருத்துவமனைகளை நடத்தி வருகின்றன. ஓமியோபதி மருத்துவக்கொள்கையில் ஆன்மா, உடல், சோரா, மியாசம், சிபிலிஸ் ஆகியவற்றுக்கு முழுமையான விளக்கம் இல்லை. அவற்றை வேறு நூல்களை வைத்து தேடித்தான் அறியவேண்டும். மனதில் ஏற்படும் நோய்களுக்கு சிறப்புக்கவனம் கொடுத்திருக்கிறார்கள். ஹானிமன் ஆங்கில மருத்துவமுறையை எதிர்க்கவில்லை. ஆனால், அதிலுள்ள குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளார். நோயாளிக்கு தேவைப்பட்டால் அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவமுறையை நாடுவது பற்றியும் எழுதியிருக்கிறார்.

ஆங்கில மருத்துவமுறை, ஓமியோபதிக்கு எப்போதுமே பற்றி எரியும் பகை,வன்மம் உண்டு. நாம் இதை நோயாளிகளை எப்படி ஒருவர் குணப்படுத்துகிறார் என்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இருநூறுக்கும் மேற்பட்ட அறிவுறுத்தல்களை ஹானிமன் நூலில் கூறியுள்ளார். அதற்கான தமிழ் விளக்கமும் மோசமில்லை.நன்றாக உள்ளது. சோரா பற்றி சற்று கூடுதலாக விளக்கியிருக்கலாம். கும்பகோணம் இன்ஸ்டிடியூட் அந்த காலத்திலேயே நிறைய ஓமியோபதி நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். என்ன காரணத்தினாலோ, பின் வந்த காலத்தில் ஓமியோபதி வீழ்ச்சியை சந்தித்து இப்போது மெல்ல வளர்ச்சியைக் காணத்தொடங்கியுள்ளது.

ஓமியோபதி மருந்துகளை ஒருவர் சாப்பிடுவதற்கு முன்னர் ஆர்கனான் நூலை வாசிப்பது அவசியம். அப்போதுதான் மருத்துவமுறையை அறிந்து அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள முடியும். அல்லாதபோது, கசப்புணர்வுடன் ஓமியோபதியை கைவிடுவதாக சூழல் அமையும். அண்மையில் டிடபிள்யூ டிவி என்ற ஜெர்மனி தொலைக்காட்சி, ஓமியோபதி இந்தியாவில் பரவலாவதற்கான காரணங்கள் பற்றிய வீடியோ ஒன்றை யூட்யூபில் வெளியிட்டது. ஒரு நாட்டின் அரசு தொலைக்காட்சி, தனது நாட்டில் உருவான மருத்துவமுறையைப் பற்றி விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுவதை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு புரிந்துகொள்வது கடினமானது. அந்தளவு இங்குள்ள மக்களுக்கு சகிப்புத்தன்மையோ, சுதந்திர இயல்போ, கல்வி அறிவோ கிடையாது. அந்த வீடியோவில் ஆங்கில மருத்துவர்களின் தட்டுப்பாட்டினால் வட இந்தியாவில் ஓமியோபதி பரவலாவதாக கருத்து கூறினார். அந்த வீடியோவில் கூறிய கருத்து சரியென்றால், அது மக்களுக்கு பயன் அளிக்க கூடியதல்ல.

ஆர்கனான் ஆப் மெடிசின் என்ற நூல் ஓமியோபதி துறையில் அடிப்படை நூல். அதை மருத்துவர்கள், பின்பற்றுபவர்கள் பலரும் வாசித்திருப்பார்கள். நோயாளிகளும் வாசிப்பது நல்லதே..

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்