ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

 

 

 

மருந்து = நஞ்சு
ஓமியோபதி

ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும்.

தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது.
சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டேன். காசு என்ற வகையில் ஒரு முறைக்கு எழுநூறு ரூபாய் செலவானது. ஆனால், அவர்களின் மருத்துவர் நோயாளிகளைப் பற்றி பெரிதாக அக்கறைப்படுபவர் அல்ல. மாதச்சம்பளம் வரும்போது மட்டுமே வாழ்க்கையில் ஊக்கம் கொள்ளும் பாவம் கொண்டவர். எனவே, அங்கு சிகிச்சை செய்தவரையில் எனக்கு நோய் கூடியதே ஒழிய சற்றும் மாற்றம் தெரியவில்லை.

சித்த மருந்துகளை கைவிட்டபோதே உடலில் மீண்டும் ஒவ்வாமை அறிகுறிகள் கூடின. நோயும் அதிகரித்தது. கொப்புளங்கள் தோன்றி பொடிபோல உதிர்ந்து புண் உருவானது. இதற்கு ஓமியோபதியில் சாப்பிட்ட மருந்துகள் தொடக்கத்தில் நோயை வெகுவாக அதிகரித்தது. தலையில் இருந்து செதில் செதிலாக தோல் செல்கள் வந்தன. சீப்பை ஒருமுறை தலையில் வைத்து சீவினால் அதிலும் தலையில் இருந்து புண்ணில் காய்ந்த பொருக்கு போல நிறைய பொருட்கள் வந்தன. தலை, நெற்றி, தாடை, கழுத்து, மார்பு, வயிற்றின் இடது, வலது புறம், அடிவயிறு, தொடை, கணுக்கால், பாதம், விரல், கண் இமை, காதின் உட்புறத்தில் கூட கொப்புளங்கள் வெடித்து அதிலும் செதில்கள் உதிரத் தொடங்கின.

இதற்காக சாப்பிட்ட தாய் திராவகங்களைப் பார்ப்போம். அறிகுறிகளைப் பொறுத்து மருந்துகள் மாறின. சீசியம், உர்டிகா உரன்ஸ், சீனா ஆப், பிளான்டகோ எம் ஆகிய தாய் திராவகங்களை 15 மில்லி என்ற பாட்டிலில் மருத்துவர் கொடுத்தார். இந்த அரசு மருத்துவர் தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். எனவே, பெரிதாக இலவசமாக வருபவர்களுக்கு அக்கறை காட்டி பேசி மருந்துகளை கொடுக்க அவருக்கு நேரமில்லை. தொடர்ச்சியாக அவருக்கு போனில் அழைப்புகள் வந்துகொண்டேஇருக்கும். நாம் அறிகுறிகளை சொல்லும்போது போன் அழைப்பு வரும். நம்மைக் கைகாட்டி நிறுத்துபவர், மருந்து தர்றேன் நீங்க போய் வெயிட் பண்ணுங்க என்று சொல்லிவிடுவார். வாரத்திற்கு ஒருமுறைதான் மருத்துவரை பார்க்க முடியும். ஓமியோபதி ஏற்படுத்தும் பக்க விளைவுகளுக்கு பெரிய பதில்களை அவர் கூறவில்லை.

ஒவ்வாமைக்கான மருந்துகளை சாப்பிடத் தொடங்கியபோது, அதுவரை இருந்த நோய் மேலும் உக்கிரம் பெற்றது. கொப்புளங்கள் புதிதாக வெடித்து அதில் பொருக்கு தட்டி அடை அடையாக உதிரத் தொடங்கியது. கூடவே அரிப்பும் வந்தது. கூடுதலாக இரு கைகள், கால்கள் என இரண்டுமே மரத்துப்போகத் தொடங்கின. சிலசமயங்களில் மின்சாரம் பாய்வது போன்ற தாக்குதல்களும் இருந்தன. இதைப்பற்றி சொன்னபோது, மருத்துவர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. மருந்துகளை சாப்பிட்டபோது ஏதாவது பிரச்னை இருந்ததா என்று கேட்பது அவரது பேச்சு வழக்கம் என புரிந்துகொண்டேன். இப்படி கேட்டாரே என பதில் சொன்னாலும் அந்த பதில் அவருக்கு முக்கியமாக தெரியவில்லை. கேள்வி முக்கியம். காசு வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் ஊடக தொகுப்பாளர்கள் போல, கேள்வியிலேயே கடைசி வரை நின்றுவிட்டார்.

சொந்தக்கதை நீண்டுவிட்டது. இப்போது மருந்துகளைப் பார்ப்போம்.

காக்குலஸ் இண்டிகஸ்
இந்த மருந்து காக்கில் புஷ் என்ற செடியின் விதையிலிருந்து பெறப்படுகிறது. உடல் பலவீனம், தலைசுற்றல், குமட்டல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்தலாம். எங்காவது பயணம் செய்து திரும்பி வந்தால், தலைவலி, முதுகுவலி ஏற்படுவது, தூக்கமின்மை, புகையிலை பயன்படுத்துவது, மதுபானங்களை அருந்துவது, மாதவிடாய் வெளிப்பாடு, கோபம் என சூழல் இருந்தால் காக்குலஸ் இண்டிகஸ் மருந்தை பயன்படுத்துவதற்கான நோய் உருவாகும் என புரிந்துகொள்ளலாம்.

பலவீனம், தலைசுற்றல், வாந்தி என அறிகுறிகளை உள்ளவர்கள் கண்களை மூடி படுக்கையில் படுத்து இருந்தால் சற்று நிம்மதியை உணர்வார்கள். வயிற்றில் குமட்டல் இருப்பதால், உணவு வகைகளின் வாசம் வீசினாலே நோய் இன்னும் தீவிரமாகும். திறந்தவெளியில், இரவு நேரம் இருந்தால் நோயின் அறிகுறிகள் அதிகரிக்கும்.

கோலோசின்திஸ்
உலர்ந்த பழத்திலிருந்து எடுக்கப்படும் மருந்து. செரிமானப் பிரச்னையால் ஒருவர் வலியால் அவதிப்படுவார். வலி, அலை அலையாக இருக்கும். வயிற்றை நன்கு அழுத்திப் பிடித்தால் மட்டுமே மட்டுப்பட்டதுபோல தோன்றும். வலி ஏற்படுவதால், நோயாளி எப்போதும் எரிச்சலின் ஒட்டுமொத்த உருவமாக தோன்றுவார். வயிற்றுப்போக்கு, மாதவிடாய் வலி, கால்களில் வலி ஆகியவை உள்ளவர்கள் இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

டியோஸ்கோரியா வில்லோசா

சாப்பிடுவதால், அதிகம் தேநீர் அருந்துவதால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வில்லோசா மருந்தாக பயன்படுகிறது. டியோஸ்கோரியா என்ற மூலிகையின் வேரை எடுத்து மருந்து தயாரிக்கிறார்கள். வயிற்றில் ஏற்படும் நோய்த்தொற்று, மாதவிடாய் வலி ஆகியவற்றும் பயன்படுத்தலாம்.

ஓமியோபதியில் உளவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே,நிறைய உடல் நோய்களுக்கு மனதில் ஏற்படும் பாதிப்புகளே முக்கியமான காரணம். முக்கியமான உளவியல் பிரச்னைகளை சரி செய்தாலே உடலில் வரும் நோய்கள் தீர்ந்துவிடும்.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்