தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவர், தாவோயிச முன்னோடி வீரராக அடையாளம் கருதப்பட்டால்....
டீமன் இன் மவுண்ட் குவா
76 அத்தியாயங்கள்---
மங்காகோ.காம்
தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்த சியோம் என்பவரை மவுண்ட் குவா இனக்குழுவின் ஹான்வோ தோற்கடித்து சிறைபிடிக்கிறார். பின்னாளில், சியோம் சிறையில் இருக்கிறார் என்பதையே மவுண்ட் குவா இனகுழுவினர் மறந்துவிடுகிறார்கள். சியோம் திரும்ப மவுண்ட் குவா இனக்குழுவின் மூத்ததலைவர் என பொய் சொல்லி ஏமாற்றி, அக்குழுவினரை சக்தி வாய்ந்த இனக்குழுவாக எப்படி மாற்றுகிறார் என்பதே கதை.
சியோம், கைதி என்றாலும் தற்காப்புக்கலை கற்றதால் அவர் காயம்பட்டாலும் சாவதில்லை. தற்காப்புக்கலை அழிக்கப்பட்டாலும் அது மீண்டும் உயிர்பெறுகிறது. உடல்பயிற்சி, ஆன்ம ஆற்றல் தியானம்செய்து மீண்டு வருகிறார். வயதான தோற்றம் கூட மெல்ல இளமையாக மாறுகிறது. அதாவது முதிர்ந்தவராக இருந்த தோற்றம் நடுத்தர வயதுகொண்டவராக மாறுகிறது. வயது கூடுவதில்லை.
மவுண்ட் குவாவிலுள்ள சிறை, குகையில் உருவாக்கப்பட்டது. மழைபெய்ந்து பாறை அரித்து சிதைவடைகிறது. அதைப் பயன்படுத்தி பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார். வந்து பார்த்தால், அவருக்கு உணவு கொண்டு வந்த பையனே எழுபது வயதானவராக மாறியிருக்கிறார். ஆனால், சியோம் நாற்பது வயதுக்காரர் போலவே இருக்கிறார். அவருடைய எதிரி ஹான்கோ இறந்து பல்லாண்டுகள் ஆகியிருக்கிறது. இறந்தவனை எப்படி பழிவாங்குவது? எனவே, குகை சிறை உடைந்தாலும் அங்கேயே அப்படியே மரத்தின் அருகே உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு உணவு கொடுத்த சிறுவன் ஜின்மு வளர்ந்து புகழ்பெற்று இனக்குழு தலைவராக இருக்கிறார். அவருக்கே சியோம், தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியாது. தாத்தா என்று அழைத்து பழகுகிறார். எனவே, சியோம் தன்னை ஹான்வோ என பொய் சொல்லுகிறார். அதை மவுண்ட் குவா இனக்குழுவினரும் நம்பிவிடுகிறார்கள்.
சியோம் தன்னை ஹான்வோ என நம்பவைக்க மவுண்ட் குவா இனக்குழுவின் நூலகத்திற்கு சென்று நிறைய தற்காப்புக்கலைகளை ஃப்யூசன் செய்து புதிதாக அதை மேம்படுத்துகிறார். தானும் கற்றுக்கொண்டு தீயசக்தியை உடலில் சற்றே அடக்கி வைத்துக்கொள்கிறார். அவரே பரிதாபம் கொள்ளும்படி தாவோயிச தத்துவத்தை கடைபிடிக்கும் மவுண்ட குவா இனக்குழு உள்ளது. உண்ண உணவு, மாணவர்களுக்கு உடை கொடுக்க கூட நெருக்கடியான நிலை. அதை அவர் மாற்ற நினைக்கிற காட்சிகள் எல்லாம் நகைச்சுவையானவை. சியோம் பேசும் பேச்சுகள் எல்லாமே முரட்டுத்தனமான கொச்சையானவை. அவரை சுற்றியுள்ளவர்களுக்கு தாவோயிசம் கற்றவர் ஏன் இப்படி பேசுகிறார் என புரிவதில்லை. ஆனால்,சியோம் நடைமுறை தெரிந்தவராக இருக்கிறார்.
சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு போலவே உடல், மனம் என இரண்டையும் வலுவாக்கும் உடல்பயிற்சி ஒன்றை வடிவமைக்கிறார். அது ஒரு கழுகின் படம் போல உள்ளது. அதற்கடுத்து, இளைய மாணவர்களுக்கு என தனித்துவமான வாள் பயிற்சி முறையை உருவாக்கிக் கொடுக்கிறார். மூத்த மாணவர்களை தனியாக காட்டுக்கு அனுப்பி பயிற்சி எடுக்க சொல்கிறார். அவர்களோடு சியோமே நேரடியாக மோதி பயிற்சி கொடுக்கிறார்.
கதையில் சியோம் தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவர் பிறரை தேவையில்லாமல் அடிப்பதோ, உதைப்பதோ இல்லை. மரியாதை இல்லாதவர்களை அடித்து காலை தலைமீது வைத்து மண்ணில் அழுத்தி எடுக்கிறார். இப்படியாக மண்ணின் மீது கால்பதித்து நிற்க சொல்லிக் கொடுக்கிறார். அதேசமயம், நிதிநிலை மோசமாக இருக்க, மவுண்ட் குவாவில் பயிற்சி பெற்ற வெளி மாணவர்களை அழைத்து அவர்களால் முடிந்த நிதியை வழங்க கூறுகிறார். அப்படி தராதவர்கள் சிலரை பிடித்து தன்னுடன் வைத்துக்கொண்டு இனக்குழுவை மேம்படுத்த வேலைக்கு வைத்துக்கொள்கிறார்.
தற்காப்பு கலை கற்றவர்கள் காசு கொடுக்கவேண்டும். அல்லது தான் கற்றதை அங்கேயே விட்டுவிட்டு போகவேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறார். அப்படி பேசும் உரை சிறப்பானது. குற்றவுணர்வை மெல்ல தூண்டுவதை அடிப்படையாக கொண்ட எளிய பேச்சு.
சியோம், தன்னுடைய கடந்தகால நினைவுகளை அடிப்படையாக வைத்து செயல்படுகிறார். தீயசக்தி இனக்குழுவால், மவுண்ட் குவாவில் யாரும் இறந்துபோக கூடாது என நினைக்கிறார். அப்படி இருந்தும் சிலரின் பேராசை சூழ்ச்சியால் நிறைய மாணவர்கள் காயமுறுகிறார்கள்.. பியூங் என்ற மாணவன் கை வெட்டுபட்டு இறந்துபோகிறான். கோபம் கொள்ளும் சியோம். படுகொலைக்கு காரணமானவனை சம்பவ இடத்திலேயே அடித்து கொல்கிறார். அவனின் தலையை வெட்டி வாசலில் கட்டி தொங்க விடுகிறார். தெற்கு வாள் இனக்குழு, அதற்கு ஆதரவாக உள்ள இன்னொரு இனக்குழுவை முற்றாக அழித்தொழிக்கிறார். இப்படியான சண்டைகளுக்குப் பிறகுதான் மவுண்ட் குவாவின் பெயர் மெல்ல மீண்டெழுகிறது. இழந்த பழைய பெயரை மீண்டும் பெறுகிறது.
வாள் கடவுள் ஹாவோ திரும்ப வந்துவிட்டார் என்ற செய்தி பலருக்கும் பீதியைத் தருகிறது. எனவே, மவுண்ட குவாவை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதையெல்லாம் சியோம் எப்படி சமாளித்தார் என்பதே மீது கதை. அதிகாரம், வலிமை இல்லையென்றால் தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கும் இனக்குழு எப்படியான சூழ்நிலைகளை சந்திக்கும் என ஓரிடத்தில் சொல்கிறார். அதை ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். சியோம் தாவோயிசத்தை பற்றிய நூல்களை வாசிக்கும்போது எல்லாம் குப்பை, வேலைக்காகாது என நூல்களை தூக்கி எறிகிறார். அத்தகைய சம்பவங்கள் படக்கதையில் நிறையவே உள்ளன.
தீயசக்தி இனக்குழுவாக இருந்தாலும் கூட சியோம், மோசமான மனிதர் என்று கூறிவிடமுடியாது. நல்ல மனிதர். ஆனால், நன்மை வழியில் செல்வதாக கூறும் இனக்குழுவினர், தீயசக்தி இனக்குழுவை விட அதிக ஆபத்து கொண்டவர்களாக பேராசை, சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்குதான் வாசிப்பவர்களுக்கு கேள்வி எழுகிறது. நல்லவர், யார் கெட்டவர் யார், அதை எப்படி தீர்மானிப்பது ....
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக