அதிகாரமும், பணபலமும் கொண்ட இனக்குழுக்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் தொன்மை தற்காப்புக்கலை ஆன்மாவைக் கொண்ட இளைஞன்!

 

 


 

தி ஆன்சியன்ட் சோவரின் ஆப் எடர்னிட்டி
காமிக்ஸ்

ஃபெய் குய்ஃபெங் என்பவர் ரிஃபைனர் எனும் மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் திறமை பெற்றவர். இவரின் ரேங்க் ஒன்பது. இந்த நிலைக்கு ஒருவர் செல்வது கடினம். இப்படி புகழ்பெற்றவராக இருந்தவர், ஒரு பெண்ணின் ஒருதலைக்காதலால் ஏற்பட்ட தகராறில் சிக்குண்டு காணாமல் போகிறார். தற்காப்புக்கலை, மாத்திரைகளை தயாரிப்பது சார்ந்து நிறைய கண்டுபிடிப்புகளை செய்தவர். அவரின் சீடர் யாங் டி அந்தளவு திறமையானவர் அல்ல. குய்ஃபெங்கின் ஆன்மா, திடீரென லீ குடும்ப வாரிசு ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. அவர்தான் கதையின் நாயகன்.

இவருக்கு உடலில் தற்காப்புக்கலையைக் கற்க முடியாதபடி பிரச்னைகள் இருக்கின்றன. அதை ஃபெங் குய்ஃபெங்கின் ஆன்மா உணர்ந்து சரி செய்கிறது. நாயகன் லீ படிக்கும் தற்காப்புக்கலை பள்ளியில், குய்ஃபெங்கின் நினைவாக பெரிய சிலை ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

இப்போது நாயகன் லீக்கு உள்ள பொறுப்பு, தன்னை வலிமையாக்கிக்கொள்வது மட்டும்தான். அதற்காக அவன் மாத்திரைகளை தயாரிக்கும் சங்கத்திற்கு செல்கிறார். அங்கு ஒருவரைப் பார்க்கிறான். அவன், தரக்குறைவாக பேசுகிறான். அவனிடம் லீ சொல்வது சில வார்த்தைகள்தான். நீ எனக்கு உதவி செஞ்சீனா, உனக்கு சில தற்காப்பு கலை சொல்லித் தருவேன். அதை வெச்சு உனக்கு இப்ப இருக்கிற நோயை சரி செஞ்சுக்கலாம். பதிலுக்கு எனக்கு வேணுங்கிற மூலிகைகளை வாங்கிக்கொடு என்கிறான். அந்த நோயுற்ற மாத்திரை தயாரிப்பவர் திகைத்துப் போகிறார். அவர், பேராசிரியருக்கான தேர்வில் செய்த கோல்மால் காரணமாக உடலில் காயம் ஏற்பட்டு நோயாக மாறிவிட்டது. அதை அவர் பிறருக்கு தெரியாமல் மறைத்து வந்ததை, பள்ளிச்சிறுவன் எப்படி கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. இவர்தான் லீக்கு பணியும் முதல் வேலைக்காரர்.
அடுத்து, லீக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியை ஒருவர், அவனது திறமையைக் கண்டு வியக்கிறார். அவன் கொடுக்கும் வழிகாட்டல் மூலம் அவரும் பேராசிரியர் பதவிக்கு முன்னேறுகிறார். அவருக்கு குய்ஃபெங் மீது மட்டற்ற மரியாதை, காதல் எல்லாமே இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? குய்ஃபெங்கை ஒருதலையாக காதலித்துவிட்டு, பதிலுக்கு அவர் காதலிக்காத காரணத்தால் கோபம் கொண்டு அவரை பழிவாங்க திட்டமிட்ட பெண்மணி ஆசிரியையின் குருதான்.

குய்ஃபெங்கைப் பொறுத்தவரை வாழ்ந்த காலத்திலேயே அவரைக் காதலிக்க போட்டியிட்டு அலைந்த பெண்கள் அதிகம். எனவே, அவர் பள்ளி ஆசிரியை பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. லீ உடலில் இருந்துகொண்டு தன்னுடைய தற்காப்புக்கலையை மேம்படுத்திக்கொள்ள முயல்கிறார். இதேநேரத்தில் வலுவான லீ, பள்ளியில் அவனுக்கு உள்ள எதிரிகளை மெல்ல களைந்து எறிகிறான். அதேநேரத்தில் அவர்களிடமுள்ள செல்வத்தை மெல்ல பந்தயம் வைத்து பிடுங்கி தன்னை வளர்த்துக்கொள்கிறான். தொடக்கத்தில் தன்னை மட்டும் வளர்த்துக்கொண்டு முன்னேறி செல்லத்தான் நினைக்கிறான். ஆனால், அவனை வளர்த்த லீ குடும்பம் தாழ்நிலையில் சென்றுகொண்டிருக்க அதை மேம்படுத்த முயல்கிறான். தியான்யு நாட்டின் அரசர், தனது அதிகாரத்தை தக்க வைக்க லீ குடும்பத்தை வேண்டுமென்றே பிற குடும்பங்களை வைத்து அழுத்திக்கொண்டிருப்பதை லீ கண்டுபிடிக்கிறான். எதிரிகளை திட்டமிட்டு சதி செய்து சிக்கவைக்கிறான். தனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்கிறான். இந்த நேரத்தில் அரசரின் இரு மகன்கள் அரியணைக்கு மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதில், இரண்டாவது இளவரசர் தன்னை ஆதரிக்க லீயைக் கேட்கிறார். லீயும் தனது குடும்பத்தைக் காக்கவேண்டுமென்று பதிலுக்கு கேட்டுக்கொண்டு ஒப்புக்கொள்கிறான்.

கதையை முழுக்க விளக்கிக் சொல்ல முடியாது. இக்கதை, லீ என்ற நாயகனின் நல்லது, அல்லது என்பதைக் கடந்து தன்னை அவன் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் கதை. அவன் நல்லவனும் அல்ல. கெட்டவனும் அல்ல. தனக்கு லாபமாக இருப்பதை செய்கிறான். அவ்வளவுதான். குய்ஃபெங்கின் ஆன்மா இருப்பதால், லீக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. ஓரிடத்தில் மாத்திரைகளை தயாரிக்கும் போட்டியின் இடையில், என் வாழ்க்கையில் நான் போட்ட சண்டையில எதிலயும் நான் தோத்தது கிடையாது என தன்னம்பிக்கையோடு சொல்கிறார். இதைக் கேட்பவர், அந்த வார்த்தையை தன்னுடைய இளமைக் காலத்தில் கேட்டிருப்பதாக நினைவுகூர்ந்து குய்ஃபெங்கை அடையாளம் கண்டு கொள்கிறார். வியந்து போகிறார்.

லீயைப் பொறுத்தவரை அவன் யாரைப் பார்த்தும் வியப்பது இல்லை. அப்படியா என்று தான் பார்க்கிறான். ஏனெனில் குய்ஃபெங் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர். எனவே, அவர் பல நூறு மனிதர்களை, வரலாற்று சம்பவங்களை, மகிழ்ச்சியை வேதனையைப் பார்த்தவர். லீயின் உடலில் அவர் மீண்டும் வளர்ந்து வரும்போது, தன்னுடைய செயல்களின் விளைவு எப்படி மாறியிருக்கிறது என பார்க்கிறார். சில செயல்கள் மகிழ்ச்சியையும், சில செயல்களை வருத்தத்தையும் தருகிறது.

கதையில் வரும் முக்கிய திருப்புமுனை, லீக்கு அவர்களது பொக்கிஷ அறையில் இருந்து காட் மானுமென்ட் எனும் பொருள் கிடைப்பதுதான். இதில் தனி உலகை உருவாக்கிக்கொள்கிறான். இதை வைத்து சில எதிரிகளை நசுக்கிக் கொல்கிறான். டீமன் இனக்குழுவின் யூ என்பவனோடு போடும் சண்டை மட்டுமே சவாலாக இருக்கிறது. இறுதியில் அதிலும் வெல்கிறான். அவனுக்கு கோபம் தரும் சூழலாக ஒரே சூழ்நிலை அமைகிறது. மார்சியல் சிட்டி எனும் நகரின் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்கிறான். அப்போது, அங்குள்ள அரசியல் வலிமை கொண்ட குடும்பங்கள் தேவையில்லாமல் வம்புச்சண்டைக்கு வருகின்றன. லீ எதையும் அதிகம் யோசிப்பவனல்ல. ஆனால், திட்டமிடாமல் ஆபத்தில் சிக்குபவனுமல்ல. வலிமை வாய்ந்த குடும்பங்களை தாக்கி வீழ்த்துகிறான்.  அவனது மாமா, அவனுக்காக தன்னை தியாகம்  செய்து உயிரை விடுகிறார். அந்த சம்பவத்தில் லீயின் தாத்தாவும் உடைந்து போகிறார். லீ, அதற்கென ஒரு திட்டத்தை வளர்த்து அரசியல் வலிமை வாய்ந்த குடும்பத்தை நிதானமாக வலை பின்னி வீழ்த்துகிறான். அந்த பழிவாங்கலை பலரும் பீதியுடன் பார்க்கிறார்கள். அதுதான் குடும்பத்தை அழித்த இடத்தில் பனியாலான பெரிய பூ வளர்ந்து நிற்கிறது.

அதுபோலவே, தியான்யு அரசரின் மகளை சூஜ் குடும்ப வாரிசு கூட்டிவந்து அடைத்து வைத்து விடுகிறான். அவனையும் லீ நூதனமாக பழிவாங்கி பகிரங்கமாக அவமானப்படுத்துகிறான். அந்தக்குடும்பத்தை ஊரே காறித் துப்பும்படி செய்கிறான். கூடுதலாக, இனக்குழுவின் மூத்தவர் ஒருவருக்கு விஷம் வைத்துக் கொல்கிறான்.

காமிக்ஸ் கதையில் பழிவாங்கும் சம்பவங்கள் புத்திசாலித்தனத்துடன் எழுதப்பட்டுள்ளன. சூழ்ச்சியை அதேயளவு சூழ்ச்சி, தந்திரத்துடன் எதிர்கொண்டு வீழ்த்துவது என்பதை இக்கதையில் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம். தன்னை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களை முழுக்க சுரண்டி அவர்களே பீதியாகும்படி பயந்து ஓடும்படி செய்வது என லீ செய்வது அனைத்துமே ஒருவர் யோசிப்பதற்கும் மேலே.. அதுக்கும் மேலேதான்.

ஒருவருக்கு என்ன தேவை, அவரை எப்படி வளைப்பது என பலவற்றையும் யோசித்து தன்னை நோக்கி இழுப்பதில் கதையில் லீயை விட வேறு யாரும் திறமைசாலிகளே கிடையாது. ஒருகட்டத்தில் லீ குடும்பத்தினரே அவனைப் பார்த்து திகைத்துப் போய் விடுகிறார்கள். அவனது தாத்தா, அப்பா எல்லோருமே அவனை புரிந்துகொள்வதை கைவிட்டு, அவன் சொல்வதை அப்படியே பின்பற்றத் தொடங்கிவிடுகிறார்கள். அதிலும், லீ ஒருமுறை சண்டைபோட்டு பாம்பு மனிதனை அடித்து உதைத்து இறுதியாக மாத்திரை ஆக்கி அதை தளபதி ஒருவருக்கு சாப்பிடத் தந்துவிடுகிறான். அதை நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள். கதை முழுக்க நகைச்சுவை என்பது துண்டுபட்டுவிடாமல் தொடருகிறது. லீயை சின்னப்பையன் என நினைத்தவர்கள் எல்லோருமே இறுதியாக கோமாளியாகிறார்கள்.

லீ இக்கதையில் காசு சம்பாதிக்க செய்யும் கோணங்கித்தனங்கள் எல்லாமே நகைச்சுவையானவை. அதேசமயம் வியக்க வைப்பவையும் கூட. அதை அவனைச் சுற்றியுள்ளவர்கள் முதலில் கேள்வி கேட்கிறார்கள். குறிப்பாக படையெடுத்து் செல்லும் இடத்தில் நகரங்களில் கொள்ளையடிப்பது பற்றி. ஆனால் இறுதியாக அனைவருக்கும் லாபம் பிரிக்கப்படும் என கூற, எல்லோருமே கொள்ளைக்காரர்களாகிறார்கள். மனிதர்களின் பேராசையை லீ எளிதாக புரிந்துகொள்கிறான். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான். தந்திரம் செய்து சதி செய்பவர்களை அவன் எளிதாக விட்டுவிடுவதில்லை. எந்தளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அந்தளவு பயன்படுத்துகிறான். தன்னை வம்புச்சண்டைக்கு அழைக்கும் இளவரசின் பாதுகாவலின் உடலில் இலச்சினை ஒன்றை பதித்து தற்காப்புக்கலை சக்தியை கட்டுப்படுத்தும் உத்தி சாதாரண பழிவாங்கலா என்ன?

தொன்மையான ஆன்மா. ஆனால், காலத்திற்கேற்ப கறாராக மாறி வணிகமயமாகிறது. ஆனால், அப்படியும் பார்க்க லீயின் ஆளுமை நன்றாகத்தான் இருக்கிறது. தன்னம்பிக்கையும் திமிரும் கலந்த வடிவம்.

இந்த காமிக்ஸ் கதையில் ஒருவர் நம்பிக்கை கொண்ட அழ, மகிழ, துயருற நிறைய இடங்கள் உள்ளன.ம அதற்கான வாய்ப்புகளையும் எழுத்தாளர், ஓவியர் கொடுத்திருக்கிறார்கள். கதை இன்னும் முடியவில்லை. நாடு, கடல், கடலுக்கு கீழ் என பல்வேறு வகையாக கதை மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால், நீண்டு செல்லும் இக்கதை பெரிதாக சுவாரசியம் குன்றவே இல்லை. கதையில் நிறைய சுவாரசியங்கள் உள்ளன. உதாரணமாக, விண்வெளியில் தற்காப்புக்கலை பயில்வது, ஒரு பெரிய பலகையில் எதிரிகளுடன் நின்று சதுரங்கம் விளையாடுவது, பாலைவனம் ஒன்றில் காயம்பட்ட நிலையிலும் ஒருவருடன் சரிக்கு சரியாக வாதிட்டு பொருட்களுக்கு விலை பேசுவது என நிறைய காமிக்ஸ் கதை சம்பவங்கள் திகைப்பூட்டுபவையாக உள்ளன. கதை, அதை எடுத்துக்கொண்டு ஆசிரியர் விரிவாக்கியுள்ளது பாராட்டத்தக்க விதமாக உள்ளது.

கோமாளிமேடை குழு


 



















 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்