வெப்ப அலை என்றால் என்ன?

 

 


 

 

அறி்வியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

வெப்ப அலை என்றால் என்ன?

1935-1975 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதலில், பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் இறந்துபோனார்கள். எண்பதுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரத்து ஐந்நூறு பேர் இறந்துபோனார்கள். சூரிய வெப்பம் நாற்பது அல்லது நாற்பது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்வதே வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம். காற்றோட்டமான இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் அதிக மரணங்கள் ஏற்படாது. அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் முதியோரே வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெப்பஅலை பாதிப்பை அரசு அறிவித்துவிட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெப்பநிலை தொகுப்புபட்டியல் என்றால் என்ன?
சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது, காற்றின் வெப்பநிலை மாறும். வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸ் என அதிகரிக்கும்போது, மனிதர்களுக்கு நீர்ச்சுருக்கம், வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவது ஆகிய சிக்கல்கள் ஏற்படும். இதைக் கணிக்க பயன்படுவதே வெப்பநிலை தொகுப்புபட்டியல்.

1816 என்ற ஆண்டை கோடைக்காலமே இல்லாத ஆண்டு என ஆய்வாளர்கள் கூறுவதற்கு என்ன காரணம்?
1815ஆம் ஆண்டு நடந்த எரிமலை வெடிப்புதான் முக்கியமான காரணம். தம்போரா என்ற எரிமலை வெடித்து சாம்பல், இந்தோனேஷியா முழுக்க பரவியது. இப்படி பரவிய எரிமலைச்சாம்பல் உலக நாடுகளின் காலநிலை மாற்றத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு பனி பெய்யத் தொடங்கியது. நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் விளையாமல் அழிந்தன. இச்சூழ்நிலை 1817ஆம் ஆண்டு மாறியது.

பிஷப் ரிங் என்றால் என்ன?
சூரியனைச் சுற்றி தெரியும் வளைய அமைப்பு. பொதுவாக சிவப்பு நிறத்தில் தெரியும். எரிமலை வெடிப்புகளால் உருவான தூசிகளால் அமைக்கப்பட்டது.

மேகங்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியவர் யார்?

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் ஜீன் லாமார்க் என்பவர், 1802ஆம் ஆண்டில் வானிலுள்ள மேகங்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதினார். ஆனால், அவரது ஆய்வு பரவலாக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. ஓராண்டுக்குப் பிறகு ஆங்கிலேயரான லுக் ஹோவர்ட் என்பவர், மேகங்களைப் பற்றி ஆய்வு செய்து கருத்துகளை அறிக்கையாக்கி வெளியிட்டார். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதோ இன்று வரை நாம் அதை பயன்படுத்தியும் வருகிறோம். நிலத்தில் இருந்து மேகங்கள் அமைந்துள்ள உயரம், அவற்றின் தோற்றம் பொறுத்து அவற்றுக்கு பெயர்கள் லத்தீனில் வழங்கப்பட்டன.

2

கிளவுட் சீடிங் என்றால் என்ன?

மேக விதைத்தல் என அப்பட்டமாக மொழிபெயர்த்தால் கோளாறாக பொருள் வந்து தொலையும். மேக தூவல் அல்லது விதைத்தல் என்று பொதுவாக கூறலாம். நீர்த்திவலைகள் கொண்ட மேகத்தின் மீது வேதிப்பொருட்களை தூக்கி மழையை கட்டாயப்படுத்தி வரவைப்பதே மையப்பொருள். கார்பன் டையாக்சைடு, சில்வர் அயோடைடு ஆகிய வேதிப்பொருட்கள் மேகங்களில் தூவி மழையை ஆய்வாளர்கள் பெய்ய வைக்கிறார்கள். இதற்காக விமானங்களை பயன்படுத்துகிறார்கள்.

மின்னல் ஏற்பது பொதுவானதுதானா?
நாடு அமைந்துள்ள நிலப்பரப்பைப் பொறுத்து மின்னல் ஏற்படுவது கூட மாறுபடலாம். இடி, மின்னல் என்பது மழை பெய்யும்போது ஏற்படுகிற பொதுவான சமாச்சாரங்கள்தான். அமெரிக்காவில் மின்னல் உருவாவதைக் கண்டுபிடித்து அதை பதிவு செய்யும் அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அங்கு இருபத்தைந்து மில்லியன் மின்னல்கள் உருவாகிறது என்று கணக்கு சொல்கிறார்கள்.

மின்னலின் நிறம் என்ன?

ஹே மின்னலே என பண்பலைகள் அலறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மின்னலின் நிறத்தைப் பற்றி ஆராயப்போகிறோம். பொதுவாக மின்னல் தோன்றுவது மழை பெய்யும்போதுதான். அப்போதுள்ள தட்பவெப்பநிலை மாற்றங்களைப் பொறுத்து மின்னல் நிறம் மாறும். நீலம், சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என நிறங்களில் மின்னல்கள் வானில் வலம்வருவதுண்டு. ஆலங்கட்டி மழை வருகிறபோது வரும் மின்னல் நீலநிறத்திலும், மழைவருவதுபோல உள்ள சூழ்நிலையில் மேகத்தில் சிவப்பு நிற மின்னல்களை பார்க்கலாம். காற்றில் அதிகளவு தூசி, துப்பு இருந்தால் ஆரஞ்சு நிற மின்னல்கள் கண்ணுக்குத் தெரியும். காற்றில் குறைந்த ஈரப்பதம் இருந்தால் தும்பைப்பூ நிற மின்னல் கண்ணில் வெட்டும்.

மின்னலின் வெப்பம் எந்தளவு இருக்கும்?

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை விட ஆறுமடங்கு அதிகம். துல்லியமாக சொல்ல வேண்டுமா? 30,000 டிகிரி செல்சியஸ். பத்து முதல் நூறு மில்லியன் வோல்ட் மின்சார சக்தி உண்டு. தோராயமான மின்னல் 30,000 ஆம்பியர் அளவில் இருக்கும்.

மின்னலின் நீளம் எந்தளவு இருக்கும்?

தட்டையான நிலப்பரப்பில் மின்னலின் நீளம், 6.5 கி.மீ. அளவுக்கு இருக்கும். மலைப்பகுதி என்றால் மின்னல் 273 மீட்டர் அளவுக்கு செல்லும். பொதுவாக நீளம் என்றால் 1.6 கி.மீ தொடங்கி 32 கி.மீ தொலைக்கு மின்னலை ஒருவர் பார்க்க முடியும். நொடிக்கு 161-1610 கி.மீ வேகத்தில் வானில் தோன்றும்.

நன்றி
ஹேண்டி சயின்ஸ் புக்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்