அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!

 

 







 


ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள்

இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன.

இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை.

இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் நடைபெற்ற மாற்றங்களாக கூறலாம். எண்பதுகளில் ஊடகம் என்பது பத்திரிகைகள் மட்டுமே. அதைக்கடந்து தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ என இரண்டு ஒளி, ஒலி ஊடகங்கள்தான் இருந்தன. இன்று ஊடகம் என்பதற்கு பத்திரிகை, டிவி சேனல்களோடு, வானொலி மட்டுமல்ல இணைய வலைத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் உள்ளன. மரபான ஊடகங்களுக்கு போட்டி என்று கூட சமூக வலைத்தளங்களைக் கூறலாம். அப்சர்வர் நாளிதழின் பத்திரிகையாளர் கரோல் கேட்வாலடர், இப்போது, சமூக வலைத்தளங்கள்தான் ஊடகமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்துதான் உலகம் இன்று செய்திகளை அறிந்துகொள்கிறது என்று கட்டுரையில் எழுதினார்.

நாளிதழ்கள், தொலைக்காட்சி குழுமங்கள், வானொலிகளை பெரும் வணிகர்கள் தொடங்கி நடத்தினர். இதில், பெரிய லாபம் வரவில்லை என்றாலும் அரசு வணிகர்களை அச்சுறுத்தினால் அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள நாளிதழ்களை பயன்படுத்தினர். இவற்றின் வழியாக பல்வேறு விமர்சனங்களை கண்டனங்களை தெரிவிக்க முயன்றனர். இப்படியான அழுத்தங்கள் இருந்தாலும் கூட ஊடகங்கள், எண்பதுகளில் ஆட்சியாளர்களை தைரியமாக நெஞ்சுரத்துடன் நின்று கேள்வி கேட்டன. குறிப்பாக 1975ஆம் ஆண்டு நடைபெற்ற அவசரநிலை காலகட்டம், அப்போது நடைமுறைக்கு வந்த தணிக்கை முறையை, ஊடகங்கள் எதிர்த்து நின்றன. அந்த சூழலில்தான் ஊடகங்களுக்கு, பத்திரிகை சுதந்திரம் என்பது யாராலும் வழங்கப்படுவதில்லை. அதை நாமேதான் போராடி பெறவேண்டும் என்று புரிந்துகொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர்கள், வரதட்சிணை கொலைகள், ஆள்கடத்தல், ரவுடித்தனங்கள் ஆகியவற்றை பற்றி ஊடகங்கள் எழுதின. குறிப்பாக இன்றுவரை போபால் விஷவாயு கசிவு விவகாரத்தை ஊடகங்கள் முழுமையான விவரங்களோடு விளக்கமாக எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அந்த விவகாரத்தில் அரசுக்கு உள்ள பொறுப்பை ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

பெண்களின் உரிமைகள், அவர்களைப்பற்றிய கதைகளை எழுதிய கட்டுரைகள் வெளியாகத் தொட்ங்கி நாற்பது ஆண்டுகள் இருக்கும். பெண்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என ஆதரிக்கும் போராடும் நிறைய அமைப்புகள் உள்ளன. போபால் விஷவாயு கசிவு, சூழல் பற்றிய அக்கறையை அனைவருக்கும் கொண்டுபோய் சேர்த்தது. தொழிற்சாலைகளின் மாசுபாடு கிராமத்திலுள்ள மக்களை பாதித்து, அடுத்துவரும் தலைமுறையை அழிக்கிறது என ஊடகங்களே எடுத்துக்காட்டினர். அரசு நர்மதா அணையை கட்டியபோது, அதனால் ஏற்படும் அபாயகரமான சூழல் விளைவுகளை நாளிதழ்களும், வார, மாத இதழ்களும் விரிவாக எழுதின. அணு உலை அமைப்பதால், கிராம மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை நீங்கள் எப்படி அறிந்தீர்கள். நாளிதழ் அல்லது டிவி வழியாகத்தானே?

1987ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியாகும் ஆங்கில தேசிய நாளிதழான தி இந்து, போஃபர்ஸ் பீரங்கி ஊழலைப் பற்றிய செய்திகளை வெளியிட்டது. பீரங்கிகளை வாங்குவதற்காக இடையிலுள்ள தரகர்களுக்கு கொடுத்த லஞ்சம் பற்றியதே வழக்கு. அப்போது இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியிருந்தது. இந்திராகாந்தி, 1984ஆம் ஆண்டு சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறப்பு காரணமாக எழுந்த மக்களின் அனுதாப வாக்குகளைப் பெற்று ராஜீவ் வென்றார். பிரதமர் ஆனார். போஃபர்ஸ் ஊழல், அரசின் உயர்மட்ட அதிகாரிகள், தலைவர்கள் தொடர்புடையதாக இருந்தது. இதைப்பற்றி எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசியதால், 1989ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

இப்போது இந்தியாவின் மதவாத பிரதமரை ஆண்டுகொண்டிருக்கும் வணிகரின் விவகாரத்திற்கு வருவோம். வணிகர் செய்த ஊழலை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படையாக பேசினாலும் கூட இந்திய ஊடகங்கள், ஆட்சித்தலைவருக்கு நெருக்கமான இரு வணிகர்களின் மூலமே இயங்குவதால் ஊழல் செய்திகள் தடுக்கப்பட்டன. மரபுவழியிலான ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகளை மின்னூடகங்களான வலைத்தளங்கள், யூட்யூபர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். தொண்ணூறுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, ஆந்திரத்தைச் சேர்ந்த பிவி நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். அப்போது நிதியமைச்சராக மன்மோகன் சிங் அவர்கள் இருந்தார். இருவரின் மூலமாகவே தனியார் முதலீட்டுக்கு ஏற்றவகையில் நாடு திறந்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் தனியார் ஊடகங்கள் வேகமாக தொடங்கப்பட்டன. அதன் மூலம் பணமும் சம்பாதிக்க முடியும் என உணரப்பட்டது. அப்போது வெளிவந்த நூலான பேப்பர் டைகர்ஸ் - தி லேட்டஸ்ட் கிரேட்டஸ்ட் நியூஸ்பேப்பர் டைகூன்ஸில், மூன்று ஊடக முதலாளிகளை பேட்டி கண்டிருந்தார் நூலாசிரியர். டைம்ஸ் குழுமத்தின் சமீர் ஜெயின், இந்தியன் எக்ஸ்பிரஸைச் சேர்ந்த ராம்நாத் கோயங்கா, ஏபிபி குழுமத்தைச் சேர்ந்த அவீக் சர்க்கார் இவர்கள்தான் அந்த மூவர்.

நாளிதழ் என்பது வெறுமனே தரமாக இருந்தால் மட்டுமே போதாது. அதை நடத்துவது என்பது போர் போலத்தான் இருக்கும். ஒருவருக்கு கண் போகும், இன்னொருவருக்கு கை போகும். ஆசிரியர் திடீரென வெளியேறுவார். பதிலுக்கு இன்னொரு எழுத்தாளர் எழுதுவதற்கு வருவார். சந்தையில் இருந்து வருமானத்தை நீங்கள் முற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். போட்டியாளருக்கு வருமானம் போய்விடக்கூடாது என்று சமீர் ஜெயின் கூறினார்.

சந்தைக்கு தேவையான செய்திகளை ஒருவர் வெளியிட்டால் அதை ஆக்ரோஷமாக சந்தைப்படுத்தி விற்கவேண்டும். வறுமை, உரிமை, ஒடுக்குமுறை என செய்திகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பத்திரிகைகளுக்கு பிறகு தொலைக்காட்சி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன. பொழுதுபோக்கு, செய்திகள், பாடல்கள், கார்ட்டூன்கள் என தொலைக்காட்சி நிறுவனங்கள் நிறைய உருவாயின. இவற்றுக்கு இடையில் விளம்பரங்களை பங்கீடு செய்துகொள்வது பெரும் போட்டியாக, சண்டையாக மாறியது. அப்படித்தான் இன்று செய்தி தொலைக்காட்சிகளின் விவாத மேடை, கடும் இரைச்சல் கொண்டவையாக மாறியுள்ளன.

அரசு நிறுவனம் அல்லாது தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்தியாவில் 900 என்ற எண்ணிக்கையில் உள்ளன. சமூக வலைத்தளங்கள், யூட்யூபுகள் இவற்றை எட்டிப்பிடித்துவிடும் வேகத்தில் வளர்ந்து வருகின்றன. பெரும்பாலான வீடுகளை தொலைக்காட்சி நிறுவனங்களே எளிதாக அடைகின்றன. இருபது மொழிகளில் 1,40,000 பத்திரிகைகள் வெளியாகின்றன. மக்களில் எழுபது சதவீதம் பேர் இணையவழியில் வரும் செய்திகளை அணுகிவருகின்றனர் என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதப்படி 833 மில்லியன் மக்கள் இணையத்தை அணுகியுள்ளனர்.
தாராளமயம் காரணமாக குறிப்பிட்ட ஊடக குழுமங்கள் தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், மாத இதழ், வலைத்தளங்கள் என பல்வேறு நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. அரசு, தனக்கு தேவையானபடி நடக்க சில ஊடக குழுமங்களை அச்சுறுத்தினாலே போதுமானது. அந்த குழுமத்தின் அனைத்து ஊடக பிரிவுகளும் அதற்கேற்படி செய்திகளை மடைமாற்றி மக்களுக்கு காட்டத் தொடங்கிவிடுவார்கள். இப்போது இந்தியாவில் நடைபெறுவதும் இதே வழியில்தான் நடக்கிறது.

மதவாதத்தை ஆதரிக்கும் பிரதமர் ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. 2013ஆம் ஆண்டு வலதுசாரிகளுக்கு ஆதரவான தலைவர் அன்னா ஹசாரே, ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நடத்தினார். இதைத்தொடர்ந்து பல்வேறு ஊழல் புகார்களை ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுப்பின. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி வலதுசாரி மதவாத கட்சி, அதன் தாய் அமைப்பான தீவிர இந்து மதவாத இயக்கத்தின் தொண்டர்கள் அனைவருமாக வெற்றி பெற்றனர். இதற்குப் பிறகு ஊடகங்கள், செய்திகளை வெளியிடுவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், சுயமாக அவர்களே தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக அதை கோபப்படுத்தாத அளவில் செய்திகளை வெளியிடத் தொடங்கினர். அதிகாரத்தின் முன் பிழைப்புக்காக, அவர்களாகவே மண்டிபோட்டுவிட்டனர்.

மதவாத பிரதமர், பொதுவாகவே ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதில்லை. அளித்தாலும் முதலிலேயே கேள்விகளை தயாரித்து வைத்து அவருக்கு உகந்த மதவாத கருத்தியலை ஆதரிக்கும் நடிகர்கள், அல்லது ஊடக தொகுப்பாளர்கள் தொந்தரவு தராத இனிய கேள்விகளை கேட்டு மகிழ்வார்கள். மதவாத பிரதமர், தன்னை ஊடகத்தில் எப்படி காட்டிக்கொள்ளவேண்டும் என்று கருதினாரோ, அதற்கான விளம்பர பணியை ஊடகங்கள் செய்துகொடுத்தன. இதன் வழியாக மதவாத அமைப்புகள் வலிமை பெற்றன. அதன் செல்வாக்கு பெருகத் தொடங்கியது. மதக்கலவரங்கள், அநீதிகள் இயல்பாகத் தொடங்கின.

அதுவரை பத்திரிகை தொழிலை அர்ப்பணிப்பாக செய்த செய்தியாளர்களுக்கு வேலை பறிபோனது. அவர்கள், நேரடியாகவே இந்து மதவாத குண்டர்களால் மிரட்டப்பட்டனர். அடித்து உதைக்கப்பட்டனர். கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் போன்றவர்கள் மதவாதத்தை எதிர்த்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் இக்குற்றவாளிகள் வெளியே வந்தபோது, இந்து தீவிரவாத இயக்கத்தினரால் மாலை போட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கும் விவகாரத்தில், அதை கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படியான கைது நடவடிக்கை உ.பி, சத்தீஸ்கர், ஹரியானா, பீகார், கேரளம், தெலங்கானா, ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. தங்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை அடித்து உதைத்து மிரட்டுவதோடு, பத்திரிகைகளுக்கு, விளம்பரங்களை கொடுப்பதையும் நிறுத்தி வைத்தனர். இப்படியாக தங்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை சித்திரவதை செய்து வழிக்கு கொண்டுவர முயன்றனர். தனிநபர்கள் என்றாலும் அவர்களின் வருமான வாய்ப்புகளை விலக்கி, பணிய வைக்க முயன்றனர்.

தொடக்கத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டனர். அரசின் எதிர்ப்பால், வருமானம் இல்லாமல் தடுமாறி பிறகு அதன்பக்கம் வந்தனர். மதவாத குண்டர்கள், சிறுபான்மையினரை தாக்கி வழிபாட்டுதலங்களை இடித்தால், அதைப்பற்றிய செய்தி ஊடகங்களில் வராது. வந்தாலும் சிறுபான்மையினர்தான் குற்றவாளிகள் என்று முன்முடிவுகளோடு செய்திகள் காட்டப்பட்டன. அரசு மதவாத அடிப்படையில் செய்த அனைத்து வன்முறைகளும் நியாயப்படுத்தப்பட்டன. மதவாத கட்சியினர் செய்த குற்றங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டன. இப்படியாக தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், அரசு ஊடக நிறுவனங்களாக மாறின. மாறியதில் சிக்கல் என்னவென்றால், அதன் ரத்தத்தில் ஸ்டெராய்ட் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது.

பத்திரிகைகளில் புலனாய்வு செய்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன, வலதுசாரி இந்துத்துவ ஆதரவாளர்கள் வெகுசன பத்திரிகைகளில் நிறைய பத்திகளை எழுதிவருகிறார்கள். உண்மைகளை எழுதுபவர்களுக்கான இடம் குறைந்துவிட்டது. சமூக வலைத்தளங்கள், வளரத்தொடங்கி மக்கள் அதில் செய்திகளை காணத்தொடங்கினர். இதை அடையாளம் கண்ட மதவாத கட்சி, அதில் இயங்கும் உண்மைகளை பேசும் பத்திரிகையாளர்களை விரட்ட தகவல் ஒளிபரப்பு மசோதாவை உருவாக்கியது. இதன் வழியாக, வலைத்தளங்கள், யூட்யூப் சேனல்களை எளிதாக கட்டுப்படுத்தி இணங்க வைக்கலாம். அல்லது எதிராக உள்ளவற்றை முற்றாக அழிக்கலாம்.

இன்று உண்மைகளை உரக்கப்  பேசும் ஊடகங்கள் அனைத்துமே மக்களிடம் வாசகர்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நடக்கிறது. விளம்பரங்களை எவரிடமும் பெறுவதில்லை. பத்திரிகைகளின் வணிக மாடலே இப்போது மாறிவிட்டது. சமூக வலைத்தளங்களில் இந்து மதவாத தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்புகளின் உதவியால், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு, போலிச்செய்திகள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவைக் கூட நாடுகிறார்கள். நம்பிக்கைக்கு உரிய ஊடகங்கள் குறைவாகிவிட்டன. அரசு, ஊடக சுதந்திரத்தை நம்புவதில்லை. அதை முற்றாக அழித்துவிட்டது என்பதற்கு இன்று வரும் பல்வேறு வெறுப்பு செய்திகளே சாட்சி.

நீங்கள் எழுதிய செய்தியைப் பற்றி பயமுற்று, வருத்தப்பட்டால், அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தண்டிக்குமோ என்று யோசித்தாலே அங்கு அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்று அர்த்தம். உங்கள் சிந்தனை, செயல்பாடு, உரிமை மீது அரசு தாக்குதல் நடத்தி நீங்கள் அதுவரை எதிர்த்த ஒருவரை ஆதரிக்க முயன்றால், இனி நீங்கள் சுதந்திரமாக இயங்கமுடியாது என்று அர்த்தம் என பத்திரிகையாளர் மைக்கேல் ஸ்மித் கூறினார். இவர் நியூயார்க் டைம்ஸில் பணியாற்றுபவர். இவர் குறிப்பிட்டது, அவரது நாட்டில் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றது பற்றித்தான். ஆனால், அதில் இந்தியாவின் எதிர்காலம் பற்றியும் கூறப்பட்டுள்ளதை நீங்கள் உணரமுடியும்.


பிரன்ட்லைன் - கல்பனா சர்மா 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்