மறுவாழ்வுக்கு முயலும் ரௌடியை தடுக்கும் அதிகார சக்திகள்!
நகரம்
ஶ்ரீகாந்த், ஜெகதிபாபு, காவேரி ஜா
இயக்கம் சிசி சீனிவாஸ்
இசை சக்ரி
தமிழில் தெலுங்குப்பட மோகம் கொண்ட சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தின் ரீமேக். ரைட் என்ற முன்னாள் ரௌடி தனது நண்பன் இறந்தபிறகு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், அதை தடுக்க காசிம்பாய், இன்ஸ்பெக்டர், அரசியல் தலைவர் ஆகியோர் முனைகிறார்கள். இறுதியில் என்னவானது என்பதே கதை.
முஸ்லீம் என்பவர் மாஃபியா தலைவராக, கொலை, கொள்ளை, கடத்தலை செய்பவராக இருக்கிறார். இதெல்லாம் எண்பதுகளில் வந்த படத்தின் அடையாளம். அதேதான். பெரிய மாறுபாடு இல்லை. ஒருவரிடம் வேலை செய்பவன், சுயமாக யோசித்து தன் இஷ்டப்படி இருப்பதாக கூறுவது சற்று வினோதமாக உள்ளது. நாயகனுக்கு, காசிம் பாயின் மகனுடன் விரோதம் உருவாகிறது. நாயகன் கொலை செய்யும் உத்தி, திறமை காசிம் பாயின் மகனுக்கு வருவதில்லை. அவனது திறமை சூழ்ச்சி, சதி. அதை நம்புகிறான்.
நாயகனைப் பொறுத்தவரை தனது குழுவினர் அனைவரையுமே திட்டத்தில் ஈடுபடுத்தி கொலையை கூட்டுத்திட்டமாக மாற்றுகிறான். அனைவருக்கும் கொலையில் முறையான பங்களிப்பு இருக்கிறது. படத்தில் வரும் தொடக்க காட்சி கொலை, உத்வேகம் தரக்கூடியது. ஆனால் என்னமோ படத்தில் தொலைந்துபோனது போல உள்ளது.அதுதான் அடிப்படையான ஆன்மா. ஜெகபதி பாபுவை, பிரியா பவானி சங்கர் ஆகியோரை துரதிர்ஷ்ட அடையாளமாக தமிழ் யூட்யூபர்கள் அடையாளப்படுத்த தொடங்கிவிட்டனர். இப்படத்தில் ஜெகபதி பாபு, சட்டம் மீது பெரிய நம்பிக்கையில்லாத ஐபிஎஸ் அதிகாரி. குற்றவாளிகளை அவரே கொன்றுவிட்டு, வேறு யாரோ கொன்றுவிட்டார் என வழக்குகளை திசைதிருப்பி முடித்துவிடுகிறார். இதில் அவரின் நடிப்பு பாணிதான் உறுத்தலாக உள்ளது. அடிக்கடி உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை.
இரண்டாவது பகுதியில் வரும் ரைட்டின் தங்கை வல்லுறவு காட்சி, படத்திற்கு தேவையில்லாத ஒன்று. அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதில் நடித்துள்ள நடிகை இதுமாதிரியான நிறைய காட்சிகளில் பயன்படுத்தப்படும் டைப்காஸ்ட் நடிகை. இதைப்போல குடிகார நடிகர் என்றால் தாகுபோத்து ரமேஷ் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். நல்ல நடிகர்களைக் கூட ஒரே மாதிரி நடிக்க வைத்து வீணடிக்கிறார்கள். நண்பர்கள் படுகொலையாகி, தங்கை இரண்டு கான்ஸ்டபிள்களால் வல்லுறவு செய்யப்பட்ட பிறகுதான், நாயகனுக்கு தான் ரௌடி என்பதே நினைவுக்கு வருகிறது. துப்பாக்கியை கையில் எடுக்கிறார். வல்லுறவு செய்தவர்களைக் கொல்கிறார். அடுத்து, காசிம்பாயை வீழ்த்துகிறார். நகரத்தை தனது கையில் வைத்துக்கொண்டு காவேரி ஜாவோடு குத்தாட்டம் போடுகிறார் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ளலாம்.
படம் நெடுக ஶ்ரீகாந்த் இந்த பாத்திரத்தை எப்படி நடிக்கலாம் என்ற யோசனையிலேயே இருக்கிறார் போல. ஒரு மாதிரியாக சோர்வாக தெரிகிறார். அவரின் பாத்திரம் கூட சரியாக உருவாக்கப்படவில்லை. அதோடு பார்வையாளர்கள் இணையவே முடியவில்லை. படத்திலுள்ள சண்டைப்பயிற்சிகளை ஜிம்னாஸ்டிக் என்றுதான் கூறவேண்டும். அதிலும் இறுதியாக காசிம்பாயை கொல்லும் காட்சியெல்லாம்.. அடடா, அப்பப்பா...
கலாபவன் மணிக்கு குறைந்த நேரம்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர் பணத்தாசை பிடித்தவர் என்பதைக் காட்ட பின்னணி இசையிலேயே மணி மணி என சேர்த்துவிட்டனர். எதற்காக இந்த அவசரம்? காவேரி ஜாவுக்கு கொடுத்த காட்சிகளை கலாபவனுக்கு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படம் மிகவும் மேலோட்டமாக இருப்பதற்கு ரீமேக் காரணமல்ல. அந்த பாத்திரங்களை உணர்வுபூர்வமாக மாற்ற இயக்குநர் மெனக்கெடவில்லை. அதனால் பாத்திரங்கள் அனைத்தும் எந்தவித உணர்வுப்பூர்வமான எண்ணங்களையும் பார்வையாளர்களுக்கு உருவாக்கவில்லை. காவேரி ஜா, கவர்ச்சி ஊறுகாய். அதையே முழு சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட முடியாதே? ஜெகபதி பாபுவுக்கு நீளமான பில்டப் காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எதற்கு என்றே புரியவில்லை. அவர் இடுப்பில் துப்பாக்கி சொருகி வைத்துள்ளதைப் பார்த்தால் நமக்குத்தான் எங்காவது வெடித்தால் டாய்லெட் போக முடியுமா என பயம் வருகிறது. படம் முடிந்தபிறகும் கூட விடாமல் இயக்குநர் ஏதோ மெசேஜ் வேறு சொல்கிறார். இரண்டரை மணிநேரம் பத்தவில்லையா இயக்குநரே?
கிளிஷே , கிரின்ஞ்ச், அதே டெம்பிளேட்.. ராட் சினிமா.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக