பழங்குடி மாணவன், தன் இன முன்னேற்றத்திற்காக படிக்க வந்து காதலில் வீழ்ந்து பின் வெல்லும் கதை!
விஜயம்
ராஜா, கஜாலா
சிங்கீதம் சீனிவாச ராவ்
இசை ஶ்ரீலேகா
பழங்குடி மாணவன் கல்லூரி தேர்வில் தங்கப்பதக்கம் வாங்க நினைத்து படித்து, பிறகு காதலில் விழுந்து அதில் இருந்து மீண்டெழுவதே கதை.
சுரேஷ் பாபு தயாரித்துள்ள படம். ஆனால், மிகவும் வணிகமாக இருக்கிறது. படத்தில் ஒரே ஆறுதல், பழங்குடிகளின் உரிமைக்காக போராடுபவராக வரும் பாத்திரம் மட்டுமே. அப்பாத்திரம் மட்டுமே, மூடநம்பிக்கையை ஒழித்து பழங்குடி இனத்தை முன்னேற்ற வேண்டும் என நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக பிடித்து நிற்கிறது. நாயகன் ராஜூ, நாயகி, நாயகனின் நண்பர்கள் பாத்திரம் என அனைத்துமே ஒருகட்டத்தில் நகைச்சுவை, பாடல்கள், சுயநலமான எண்ணம் என மாறிவிடுகின்றன.
படத்தில் வரும் கஜாலா பாத்திரம் லூசு நாயகிக்கான அத்தனை அம்சங்களைக் கொண்டது. அதை சற்று மாறுபட்டதாக அமைத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கலாம். இயல்பான கதாபாத்திரங்கள் அமையவே கூடாது என இயக்குநர் முடிவெடுத்தபிறகு ஏதும் சரியாக அமையவில்லை. கடைத்தெருவில் தொப்புள் தெரிய நாயகி உடையணிந்துகொண்டு சித்து பாத்திரத்தோடு வருவது, அதேநேரம் தற்செயலாக நாயகன் ராஜூ வந்து நாயகியை குழாய் ஒன்றில் காப்பாற்றி அவள் உடலோடு நெருக்கமாகி காதலைச் சொல்வது, வெடிகுண்டில் சிக்கினாலும் நாயகன் உயிரோடு இருப்பது, அந்த நேரத்தில் நாயகி தனது காதலை நாயகனிடம் சொல்வது என எந்த இடத்திலும் நம்பகத்தன்மை வரவில்லை. மேற்சொன்ன காட்சி, காதல் காட்சி என பார்வையாளர்கள் நம்பவேண்டும்.
பழங்குடி மாணவன், ஆந்திரா போன்ற சாதி, மத வேறுபாடுகள் அதிகம் உள்ள சமூகத்தில் நிறைய பிரச்னைகளை சந்தித்து வந்திருக்கவேண்டும். அவனுக்கு எதுவுமே யாருமே கையில் கொண்டு வந்து கொடுக்கமாட்டார்கள். பதிலாக, அவனுக்கு சொந்தமான நிலம், நீச்சு, விற்பனைப் பொருள் என அனைத்தையுமே தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள துடிக்கும் மக்களே அதிகம். அப்படியாக இருக்கும்போது, காதலை நாயகியிடம் சொல்லிவிட்டு அதை அவள் ஏற்காவிட்டால் என்ன செய்வது ஓடிவிடுகிறான். இதை நம்புவதே கஷ்டமாக இருக்கிறது.
இதே கூச்சம் கொண்ட நாயகன், கல்லூரி பெண்கள் குளிப்பதை உடை மாற்றுவதை டெலஸ்கோப் வழியாக பார்க்க சக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து காசு சம்பாதிக்கிறான். எலி பந்தயம் நடத்துகிறான். இப்படியான செயல்களின்போது எந்த கூச்சமும் வருவதில்லை. ஆச்சரியம்தான்.
நாயகி, பணக்காரி, நாயகன் ஏழை, பழங்குடி மாணவன். நாயகன் வசதியானவன் என்று பொய்யைக் கூறிய பிறகுதான் நாயகிக்கு நம்பிக்கை வருகிறது. காதல் பிறக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் அவன் வசதி, தங்கியுள்ள கல்லூரி விடுதி பற்றி அவள் கேள்வியே கேட்பதில்லை. நாயகன் எதிர்பாராமல் சொல்லும் பொய் காரணமாக நாயகின் அப்பா, அவனை வசதியான வீட்டுப்பையனாக நினைக்கிறார். நாயகி அவனோடு பழகுவதை ஏற்கிறார். நாயகிக்கு, ராஜூவோடு வெளியில் சுற்றுவதே வேலை. மற்றபடி அவனுடைய சூழல் என்ன, படிப்பு பற்றியெல்லாம் அவளுக்கு கவலை கிடையாது. பணம் இருக்கிறது. புகழ்,பெருமையை சம்பாதித்தால் போதும் என காதல் புரிந்து களி நடனம் ஆடுகிறாள்.
ஒருகட்டத்தில் அண்ணன் மூலம் நாயகன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தபோது அவள் என்ன யோசிக்கிறாள். நாயகன் பொய் மட்டுமே கூறினான் என்றா? அல்லது வசதி வாய்ப்புகள் இல்லாத இடமாக நாம் வாழும் இடம் உள்ளது என்று யோசிக்கிறாளா? அதை படத்தின் இயக்குநர்தான் கூறவேண்டும். நாயகன் தன் தரப்பை நியாயப்படுத்த முயன்றும் நாயகி அதற்கு பெரிதாக வாய்ப்பு தரவில்லை. உண்மையில் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக தெரியவில்லை. நாயகியை, அவளுடைய முறை மாமா திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். நாயகி அதற்கு மறுக்கிறாள். அந்த நேரத்தில் ராஜூ சிக்குகிறான். அவ்வளவே. தேவாலயத்தில் நாயகன் மெழுகுவர்த்தி ஏந்தி மெழுகு வடிந்து கையில் காயம் ஏற்படுத்துவது எல்லாம் எந்த பரிவுணர்வையும் ஏற்படுத்தவில்லை.
நாயகனின் வாழ்க்கையை பெருமளவு அழிப்பவர்கள், அவனுடைய நண்பர்கள்தான். அவர்களும் படிப்பதில்லை. படிக்கும் நாயகனையும் இறுதிவரை முடிந்தளவு நற்பெயரை சிதைக்கிறார்கள். நாயகனும் இங்கு நல்லவன் கிடையாது. காசு சம்பாதிக்க எந்த வழிக்கும் செல்பவன்தான். பெண்கள் உடைமாற்றுவதை சக கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் போட்டு காட்டியவன். போதைப்பொருட்களையோ, ஆயுதங்களையோ விநியோகம் செய்யவில்லை. அதுமட்டுமே மிச்சம்.
படத்தில் காதல் மட்டுமே ஒருவருக்கு கிரியாஊக்கி என காட்டுகிறது. நீங்கள் வளர்ந்த இனக்குழு சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதைக் காப்பாற்ற படித்த வெளியாள் ஒருவர் போராடுகிறார். அவரது உதவியால் தப்பி பிழைத்த ஒருவன்தான் நாயகன். அவன் கூட பணக்கார இளம்பெண் பின்னே சுற்றப்போய்விடுகிறான். நாயகன் வளர்ந்த பிறகும் கூடவா, தனது இனத்தின் மேல் பரிதாபம் வரவில்லை. அதை மேலே உயர்த்த விரும்பவில்லை. அவன் தனது இனக்குழுவிற்கு உதவி செய்யும் ஒரே காட்சி, படம் நிறைவுற்றபிறகு வருவதுதான். மற்றபடி அவன் தன் உயிரைக் காப்பாற்றியவருக்கோ, தனது பாழ்பட்ட படிப்பறிவில்லாத இனக்குழுவைக் காப்பாற்ற ஒரு புல்லையும் அசைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பில் நாயகியோடு காதல் நடனம் ஆடுகிறார். அவ்வளவுதான். இதில் இறுதிக்காட்சியில் நேர்மை பற்றிய வசனம் ஒன்றுதான் கேடு.
இயக்குநர் தான் எழுதிய கதை ஒன்றாக, எடுத்தபடம் ஒன்றாக வந்துவிட்டது போல. பழங்குடி கிராமத்தில் நாயகன், சட்டைக்குள் கறுப்பு நிற பனியன் போட்டுக்கொண்டு வினோதமாக திரிகிறார். பழங்குடிகளுக்கு உதவும் மனிதர் வீட்டில் தேநீருக்கு கப், சாசர் பயன்படுத்துகிறார்கள். நாயகனை விட திறமைசாலியாக அவனது வகுப்பில் உள்ள படிக்கும் மாணவர் எவ்வளவோ பரவாயில்லை. இறுதியாக அவரைக்கூட ஒரே ஒரு வசனம் பேச வைத்து பலவீனம் செய்கிறார்கள். ஏன் இயக்குநரே? இப்படத்தில் கல்லூரி மாணவர்கள் செய்வது குறும்புகள் அல்ல குற்றங்கள். அதை எப்படி நகைச்சுவை என்ற பெயரில் நியாயப்படுத்த முடியும்?
சித்தார்த் பாத்திரத்தில் சுனில் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வரும் நகைச்சுவை பகுதிகள் நன்றாக உள்ளன. ஹோட்டலில் பூச்சாடிகளை உடைத்து அவருக்கும் ஹோட்டல் மேலாளர் பாத்திரத்தில் நடித்துள்ள தர்மாவரம் சுப்பிரமண்யத்துக்கு வரும் முரண்பாடு நன்றாக உள்ளது. பிரம்மானந்தம் நல்ல நகைச்சுவை நடிகர்தான். அவருக்கான நகைச்சுவை பகுதிகள் நன்றாக அமைந்தால்... இப்படத்தில் பால்புதுமையினரை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைய உள்ளன. தன் பாலின ஈர்ப்பு கொண்ட பாத்திரம் அருவெருப்பு அடைய வைப்பது. அப்படியான பாத்திரம், இயக்குநரின் மொண்ணையான மூளையில்தான் இருக்கமுடியும்.
பழங்குடி மாணவன் காதல் வழியாக அதன் வெற்றி வழியாக படிப்பை, கல்வியை அடைகிறான் என்பதே நம்ப முடியாத பிறழ் கருத்து. வணிகத்திற்காக எந்த அளவுக்கும் இறங்கலாம், குரலெழுப்ப முடியாத பலவீனமான பிரிவினரை இழிவுபடுத்தலாம், அவர்களை தவறாக சித்திரித்து காட்டலாம் என்ற அளவுக்கு இயக்குநர் சென்றிருக்கிறார். ஆபத்து என்பது இங்கு ஒரு மனிதர் அல்ல. திரைப்பட இயக்குநரான அவரின் சிந்தனை அதை ஏற்றுக்கொண்ட அவரையொத்த மனிதர்களும் பேரளவு ஆபத்தை சமூகத்திற்கு மக்களுக்கு ஏற்படுத்துவார்கள்.
பழங்குடி மாணவனின் காதலில் விழுந்தேன் கதை.
கருத்துகள்
கருத்துரையிடுக