பிணம் தூக்கிய எம்எல்ஏ!
எழுபது வயதில்
கிணறு வெட்டியவர்!
அதிகார அமைப்புகளை
நம்பாமல் சுயநலம் விடுத்து சுயம்பாக சிலர் கிளம்புவது ஆச்சரியமல்ல; ஆனால்
மத்தியப்பிரதேசத்தின் சீதாராம் லோகி விஷயத்தில் ஆச்சரியம்தான். சாரின் வயது 71.
மத்தியப்பிரதேசத்தின்
சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள ஹதுவா கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் லோதி, தண்ணீர்
பிரச்னைக்காக தனியொருவராக உழைத்து கிணறு வெட்டியுள்ளார் என்பதுதான் வைரல் செய்தி.
மூன்று ஆண்டுகளாக நிலவிய தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க 40 அடியில் கிணறைத் தோண்டியுள்ளார் சீதாராம் லோதி.
"நான் கிணறைத் தோண்ட முயற்சித்தபோது
என் குடும்பம், ஊரார் என அனைவருமே பைத்தியக்கார முயற்சி என்றுதான்
சொன்னார்கள். ஆனால் பாருங்கள். இந்த கோடையிலும்
கிணற்றில் நீர் வற்றாமலிருக்கிறது" என புன்னகைக்கிறார் லோதி.
பக்கத்து வீட்டுக்காரர் நோயுற்ற குழந்தைக்கு குடிநீர் தேடி அலைந்த பரிதாபக்
காட்சிதான் லோதியை கிணறு வெட்ட வைத்துள்ளது.
2
பிச்சைக்காரர்களின்
டாக்டர்!
இந்தியாவில் தவிர்க்கப்பட்டவர்கள்
தலித்துகள் மட்டுமல்ல;
ஏழைகளும், ஆதரவற்றவர்களும்தான். உணவுக்கு தவிக்கும் இத்தகையோர்க்கு இலவச மருத்துவம் அளித்து உதவுகிறார் புனேவைச்
சேர்ந்த மருத்துவர் ஒருவர்.
புனேவைச் சேர்ந்த
டாக்டர் அபிஜித் சோனவானே கோயில்களின் வாசல்களிலுள்ள மனநிலை பிறழ்ந்த, வயது முதிர்ந்தவர்களுக்கு
இலவச சிகிச்சையளிப்பதை காலையில் முதல்பணியாக செய்துவருகிறார். நோய் தீவிரமானவர்களை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து தன் செலவில் மருந்துகளை
வாங்கிக்கொடுத்தும் அபிஜித் உதவுவது ஆச்சரியம்தானே? தன் சோஹம்
ட்ரஸ்ட் மூலமாக திங்கள் - சனி வரை காலை பத்துமணி முதல் மூன்றுமணிவரை
ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் அபிஜித் சோனவானே. "கோயில்களில்
பிச்சையெடுப்பவர்களில் பெரும்பாலோர் குடும்பங்களால் கைவிடப்பட்டவர்கள்தான்.
வயிற்றுப்பசிக்கு வேறுவழியின்றி பிச்சை எடுக்கும் நிலை"
எனும் அபிஜித் இரண்டு ஆண்டுகளாக இப்பணியை ஏழைகளுக்கு செ்ய்து வருகிறார்.
3
நோன்பை கடந்த மனிதநேயம்!
பீகாரைச் சேர்ந்த
முஸ்லீம் வாலிபர்,
ரம்ஜான் நோன்பையும் புறக்கணித்து குழந்தைக்கு ரத்த தானம் செய்தது பலரையும்
நெகிழ வைத்துள்ளது.
பீகாரிலுள்ள கோபல்கன்ஞ்
மாவட்டதைச் சேர்ந்தவர் ஜாவேத் ஆலம். ரம்ஜான் நோன்பையும் புறக்கணித்து
தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட இந்து சிறுவன் ராஜேஷ்குமாருக்கு ரத்தம் அளித்து உயிரைக்
காப்பாற்றியுள்ளார். தாலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்
ஒருமுறை ரத்தம் மாற்றுவது அவசியம். ரத்தம் மாற்றவேண்டிய நாளில்
ரத்தவங்கியில் ராஜேஷூக்கு ரத்தம் கிடைக்கவில்லை. 200 கி.மீ தூரம் ராஜேஷின் தந்தை சென்று ரத்தவங்கிகளை அணுகியும் பொருத்தமான ரத்தவகை
கிடைக்கவில்லை. அப்போது அறிமுகமான ரத்ததான இயக்க உறுப்பினரான
அன்வரின் உதவியுடன் ரம்ஜான் நோன்பிலிருந்த ஜாவேத் ஆலம், நோன்பை
கைவிட்டு ராஜேஷூக்கு ரத்தம் அளித்து மனிதநேய நாயகனாகியுள்ளார்.
4
டீ மாஸ்டரின் கல்வி
உதவி!
ஏழையாக இருந்தால்
பிறருக்கு உதவ முடியாதா என்ன? ஓடிஷாவிலுள்ள கட்டாக்கைச் சேர்ந்த டீ மாஸ்டர்
பிரகாஷ் ராவ், 75 குழந்தைகளை படிக்கவைக்கும் செயல் நம் மனசாட்சியை
உலுக்கி கேட்பது மேற்சொன்ன கேள்வியைத்தான்.
கட்டாக்கில் ஆறு
வயதிலிருந்து டீ விற்றுவரும் பிரகாஷ் ராவ், கடந்த பதினேழு ஆண்டுகளாக தன் வருமானத்தில்
பாதியை சேரியிலுள்ள ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக செலவழித்து வருகிறார். சிறுவயதில் பிரகாஷின் தந்தை, படிப்பு நேரத்தை வீணாக்கும்
வேலை என்று சொல்லி மூன்றாவதோடு பள்ளியை விட்டு நிறுத்திய வருத்தம் பிரகாஷூக்கு இன்றும்
ஆறவில்லை. "என் கடையில் தினசரி ரூ.600-800 வரை வருமானம் கிடைக்கிறது. காசு இல்லை என்பதற்காக குழந்தைகளின் படிப்பு நிற்ககூடாது என்பதால்தான் கல்விக்
கட்டணங்களை கட்டுவதோடு, முடிந்தவரை உணவுகளையும் வாங்கித்தருகிறேன்.
அவர்களின் எதிர்காலம் நன்றாக இருந்தாலே போதும்" என நெகிழ்கிறார் பிரகாஷ் ராவ். மன் கீ பாத்தில் பிரதமர்
மோடி பிரகாஷ் ராவை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5
பிணம் தூக்கிய
எம்எல்ஏ!
தொகுதியில் ஜெயித்த
பிறகு எம்எல்ஏ,
எம்பியை பைனாகுலரில் தேடினாலும் பார்ப்பதே கஷ்டம் என்கிற நிலையில் மக்களின்
சுக துக்கங்களில் பங்கேற்பது அரிய நிகழ்வுதானே!அசாமில் எம்எல்ஏ
ஒருவர் பிணத்தை சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அசாமின் ஜோர்கட்
மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, ஆதரவற்று
இறந்தவரின் பிணத்தை தூக்கிச்சென்று இறுதிமரியாதை செய்துள்ளார். குடும்பம் இன்றி வாழ்ந்த திலீப் டேக்கு மாற்றுத்திறனாளி தம்பி மட்டுமே துணை.
திடீரென இறந்த திலீப்பின் சவத்தை தூக்க கூட உறவினர்கள் இல்லாத நிலையில்
எம்எல்ஏ குர்மி, திலீப்பின் உடலை சுடுகாட்டிற்கு தூக்கிச்சென்று
தகனம் செய்துள்ளார். "எம்எல்ஏ என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான
பதவி அவ்வளவே. எளிய மனிதராக இறந்தவருக்கு இறுதிமரியாதை செய்த
திருப்தி போதும்" என தன்னடக்கமாக பேசும் குர்மி மூன்றாவது
முறையாக எம்எல்ஏ பதவி வகிக்கிறார்.