குடிராம் போஸ்!- பதினெட்டு வயதில் செய்த அளப்பரிய தியாகம்!
என்தேசம் இந்தியா!
குடிராம் போஸ்
வங்காளத்தின் அலிப்பூரிலிருந்த டக்ளஸ் கிங்க்ஸ்ஃபோர்டு தன்னைப் பற்றி விமர்சித்து எழுதிய பத்திரிகைகளை படித்து படித்து மனம் வெந்து போனார். அதிலும் குறிப்பாக ஜூகந்தர் என்ற வங்காளப்பத்திரிகையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான துவேஷ கருத்துகள் வெளியாக பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர்களை சிறையில் தள்ளி அடித்து நொறுக்கி ஆசுவாசமானார்.
தேசபக்தி இளைஞர் கூட்டம் இதற்கு எதிராக திரண்டெழுந்தது. இதில் முன்னணியில் புரட்சிக்கருத்துகளுக்கு பெட்ரோல் ஊற்றி மக்களை வெறி குறையாமல் வைத்திருந்த இளைஞர் சுசில் சென், கிங்க்ஸ்ஃபோர்டை பெரிதும் அச்சுறுத்தினார். உடனே அவரை கைது செய்ய காவலர்களை ஏவி, கசையடி கொடுக்கச்செய்தார்.
கசையடிகள் இளைஞர்களின் மனதில் ஆ்ங்கிலேயர் மீதான கோபத்தீக்கு நெய்விட்டது போலானது. உடனே டக்ளஸ் உயிருக்கு நாள் குறித்தது இளைஞர் கூட்டம்.அப்போது முசாபர் நகருக்கு மாற்றலாகியிருந்தார் டக்ளஸ். டக்ளஸை கண்காணித்து கொல்லும் பொறுப்பை குடிராம்போஸ், பிரபுல்லா சக்கி என இரு இளைஞர்கள் ஏற்றிருந்தனர்.
1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று டக்ளஸின் வீட்டுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரெடியாக இருந்தனர் போஸ் மற்றும் சக்கி. அப்போது பிரிட்டிஷ் கிளப்பில் இருந்தார் டக்ளஸ். இரவு நேரம் 8.30. குதிரை வண்டியில் டக்ளஸ் வருவது போல தெரிய, உடனே நாட்டு வெடிகுண்டுகளை பற்றவைத்து வண்டியில் வீசினர். துரதிர்ஷ்டவசமாக அந்த வண்டியில் டக்ளஸின் மனைவியும் மகள் பிரிங்கிள் கென்னடியும் அந்த வெடிவிபத்தில் இறந்து போயினர். மாட்டிக்கொள்வோம் என்ற பதட்டம் இல்லாமல் நடந்தே அந்த இடத்தை விட்டு அகன்றனர். அடுத்தநாள் போலீஸ் தகவல் அறிந்து இருவரையும் சுற்றிவளைக்க பிரபுல்லா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். குடிராம் போஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவரின் வயது பதினெட்டுதான். அவரை முசாபர் நகருக்கு கூட்டிவரும்போது வீர இளைஞன் யாரென கூடிய கூட்டத்தை போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. "முதல் வகுப்பிலிருந்து தெளிவான முகத்தோடு அணுவளவும் பதட்டமில்லாத உடல்மொழியில் இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்து வந்தனர். அவர்தான் குடிராம் போஸ்" என வங்காளத்தில் வெளியான ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை எழுதியிருந்தது.
1908 ஆம் ஆண்டு மே அன்று நீதிமன்றத்தில் குடிராம் போஸின் குற்றம் நிரூபணமாகி இறக்கும்வரை தூக்கிலிட உத்தரவானது. ஆகஸ்ட் 11 தூக்கு. கல்கத்தா வந்தவரை பார்க்க திருவிழா கூட்டம். இளைஞரின் மீது தூவ அனைவரின் கைகளிலும் மலர்மாலைகள். கண்களில் நெகிழ்ச்சி கண்ணீர். இறந்த உடலை எரிக்கும் மயானம் வரை கொண்டு சென்ற பயணத்தில் மக்கள் தீராத வேதனையுடன் மலர்களை தூவியபடி சென்ற காட்சி மண்ணுக்காக தன் உயிரை அர்ப்பணித்த குடிராம் போஸின் தேசப்பற்றுக்கான பெரும் அங்கீகாரமன்றி வேறென்ன?
மேற்கு வங்கத்தின் மெட்ரோ ரயி்ல்வே நிலையம், ரயில்வே நிலையம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சுதந்திரபோராட்ட வீரர் குடிராம் போஸின் பெயர் சூட்டப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம்விட மக்களின் மனதில் குடிராம் போஸ் ஏற்படுத்திய தாக்கம் அளவற்றது.
தொகுப்பும் ஆக்கமும்: கா.சி.வின்சென்ட்
தொகுப்பில் உதவி : கார்த்திக் ஜெய்ஷன்