மிஸா கொடுமை- விசிட்டர் அனந்த் எழுதிய மூன்று நூல்களின் தொகுப்பு.
மிஸா கொடுமை
விசிட்டர் அனந்த்
நக்கீரன்
விலை ரூ.200
எமர்ஜென்சி கால கொடுமைகள், பத்திரிகை ஒடுக்குமுறை, சஞ்சய் காந்தி அக்கிரமங்கள் என மூன்று நூல்களாக எழுதப்பட்டவை ஒரே நூலாக நக்கீரன் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்பகுதியில் இந்திராகாந்தி அரசால் அரசியல் தலைவர்கள், மக்கள் , நேர்மையான போலீஸ் அதிகாரிகள், மாணவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை அலங்காரமில்லாத நடையில் உணர்ச்சி பெருக விவரிக்கிறார் அனந்த்.இதில் ஜெ.பி. நாராயணன் குறித்த தகவல்களை பீகார் ,டெல்லி என பயணித்து திரட்டியிருப்பது அருமை.
அன்றைக்கிருந்த(1975 ஜூன் 25 ) இந்தியாவின் நெருக்கடியான நிலையை ஏராளமான சம்பவங்களை திரட்டி எழுதி ஆச்சரியமூட்டுகிறார் விசிட்டர் அனந்த். இரண்டாவது பகுதியில் அசாம் ட்ரிப்பியூன், ஒபீனியன், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகளை அழிக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது எப்படி என விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். மின்சாரத்தை நிறுத்துவது, விளம்பரங்களை தடுப்பது, விளம்பரதாரர்களை மிரட்டுவது, தணிக்கை தாமதம் என நீளும் அரசின் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏறத்தாழ மூடப்படும் நிலைக்கு சென்று மீண்ட வரலாறு அதிர்ச்சி தருகிறது.
மூன்றாவது பகுதியான சஞ்சய்காந்தியின் அக்கிரமங்களில் தலையாயது, குடும்பக்கட்டுப்பாடு. வளமான தேசத்தை சீர்குலைப்பது குடும்பக்கட்டுப்பாடு போன்ற திட்டங்களே. மாருதி ஊழல், அரசியல் விளையாட்டு, தன் பேச்சுக்கு தலையசைக்காத அமைச்சர்களை இன்ஸ்டன்ட்டாக மாற்றுவது என எதேச்சதிகாரத்தை அரசின் அனைத்து மட்டங்களிலும் பாய்ச்சிய சஞ்சய் காந்தி உருவாக்கிய சீரழிவை அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, இந்திராகாந்தியும் உணர்ந்தார். ஆனால ்காலம் தவறிவிட்டது. நிலப்பிரபுத்துவ முறைபோல அப்பாவின் பதவி மகனுக்கு என ஆட்சியுரிமை மாறும்போது சர்வாதிகாரம் நிச்சயம் தலைதூக்கும் என்பதற்கு உதாரண சாட்சியாக எமர்ஜென்சி காலகட்டம் இருக்கிறது. காங்கிரஸ் முக்தி பாரத் என கூவும் பாஜகவின் அரச தலைவர் மோடி, இந்திராவையே தன் முன்னோடியாக பின்பற்றி வருகிறார். எதிர்க்குரல்களை நசுக்கும் ஒடுக்கும் முனைப்பு உருவாகிவிட்டால் பிரதமர் பதவிக்கும் மன்னர் வழி முடியாட்சியாக மாறிவிடும் என்பதற்கு வரலாற்று எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு.
எமர்ஜென்சி காலகட்ட அரச அநீதிக்கு சாட்சியாக ஒலிக்கும் குரலாக விசிட்டர் அனந்தின் இந்நூல் இந்திய வரலாற்றை அறிய நினைப்பவர்களின் கைகளில் எந்நாளும் இருக்க வேண்டிய நூல்.
-கோமாளிமேடை டீம்