அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள்!



Image result for arjuna award



அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள்



1  பிரகாஷ் நஞ்சப்பா

பெங்களூரில் பிறந்து கனடாவில வளர்ந்த பிரகாஷ் நஞ்சப்பா மூன்றுமுறை விருதுப்பட்டியலில் இடம்பெற்று தற்போதுதான் அர்ஜூனா விருது பெற்றுள்ளார். அரிய முக முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பிரகாஷ், கனடாவில் பணியாற்றிக்கொண்டே துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான பிரகாஷின் தந்தை  பிபி பாபண்ணா, வற்புறுத்தலால் வேலையை கைவிட்டு துப்பாக்கி தூக்கினார். இந்தியாவில் பயிற்சி செய்து பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும்(காமன்வெல்த 2014) வரை பதக்கம் வென்றவர் இவர்.
"மூன்றுமுறை முயற்சித்து இம்முறை அர்ஜூனா விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என் லட்சியம். ரியோ ஒலிம்பிக்கில் முடக்குவாத சிக்கலால், போட்டியில் பதக்கம் வெல்லமுடியவில்லை. 2020 போட்டியில் 10மீ. பிரிவிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் 50மீ. பிரிவிலும் சாதிப்பேன்" என்கிறார் பிரகாஷ் நஞ்சப்பா.






பிரசாந்திசிங்

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீரரான பிரசாந்தி மற்றும் 4 சகோதரிகள் உட்பட இவர் ஃபேமிலியே பேஸ்கட்பால் வெறியர்கள். பாஸ்கி என செல்லமாக அழைக்கப்படும் பிரசாந்திக்கு கால்பந்து வீரரான பெம்பெம்தேவி மிகப்பெரும் இன்ஸ்பிரேஷன்.
 குறுகிராமத்தில் பெண்களுக்கான தடைகளை தகர்த்து பேஸ்கட்பால் தொட்டவர், 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூனியர்,சீனியர் என களமாடி 22 மெடல்களை வேட்டையாடி இருக்கிறார். "எங்களுடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. ஊராரின் கேலி கிண்டல் கடந்து எங்கள் பெற்றோரின் ஆதரவுதான் பலம். 28 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்கட்பால் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப்பெண் நான்தான். இன்று பனாரசில் என்னை இன்ஸ்பிரேஷனாக கொண்டு பெண்கள் பேஸ்கட்பால் விளையாட வருவது பெரிய கௌரவம்" என்பவரைப் பற்றி பி க்யூப் என்ற டாகுமெண்ட்ரியும் உருவாக்கப்பட்டுள்ளது.  


   








குஷ்பீர்கவுர்


பஞ்சாபின் நிக்கா ரசூல்பூரைச் சேர்ந்த குஷ்பீர் கவுர் தன் 21 வயதில் இன்சியோன் ஆசியப் போட்டியில் நடைபயணத்தில் வெள்ளி வென்ற வீராங்கனை. ஆறு வயதில் தந்தையை இழந்த குஷ்பீருக்கு ஊக்கம் தந்த ஒரே உறவு தாய் ஜஸ்பீர்கவுர் மட்டுமே.
2008 இல் ஷூக்கள் வாங்க முடியாத இயலாமையில் போட்டியில் ஓடிய துயரம் இவருக்குண்டு. "விருது பெறுவதற்கு எனது கோச் பல்தேவ் சிங் முதல் காரணம். லண்டனில் அத்லெட்டிக் போட்டியின்போதுதான் எனக்கு அர்ஜூனா விருது கிடைத்திருக்கிற தகவல் கிடைத்தது. அடுத்து டோக்கியோவில் நிகழும் போட்டிக்கான ட்ரெய்னிங்கில் இருக்கிறேன். நிச்சயம் பதக்கம் ஜெயிப்பேன்" என தம்ஸ்அப் காட்டுகிறார் குஷ்பீர் கவுர்.






வருண்சிங் பாடி

கடந்தாண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, வருணுக்கு சிறுவயதில் பிறக்கும்போது இடது காலில் Poliomyelitis குறைபாடு இருந்தது. பள்ளியில் பேஸ்கட்பாலில் கலக்கி பின்னாளில் உயரம் தாண்டுபவராக மாறினார்.
2014 சீன அத்லெட்டிக்ஸ், 2016 ஆசியா அத்லெட்டிக்ஸ  போட்டிகளில் பதக்கம் வென்ற வருணுக்கு தற்போது உழைப்புக்கு அங்கீகாரமாக அர்ஜூனா விருது. "முன்பு எங்களைப்போன்ற பாராஒலிம்பிக் வீரருக்கு ஊடக வெளிச்சம் கிடைக்காது. அரசு விருதுகள் மக்களிடையே எங்களை அடையாளப்படுத்தும். ஓராண்டுக்கு மூன்று போட்டிகளாவது நடந்தால் எங்களைப்போன்ற வீரர்களின் திறமை மெருகேறும்" என சிநேகமாக புன்னகைக்கிறார் வருண்சிங். தற்போது ஆசியவிளையாட்டுப் போட்டிக்கு ரெடியாகிவருகிறார்.   





  


ஆரோக்கிய ராஜீவ்

நண்பர்களிடம் கடன்பெற்ற ஷூக்களுடன் தன் தடகள வாழ்வை தொடங்கிய லாரி டிரைவரின் மகனான ஆரோக்கிய ராஜீவுக்கு, திருச்சி பூர்வீகம். இவ்வாண்டின் ஆசிய அத்லெட்டிக்ஸில் வெள்ளி வென்ற ராஜீவ், அதன் அங்கீகாரமாக அர்ஜூனா விருது பெற்றுள்ளார். நீளம் தாண்டுபவராக இருந்த ராஜீவை ஓட்டப்பந்தய வீரராக புடம்போட்டது கோச் முகமது குன்ஹி. 13 வயதிலிருந்து ஒலிம்பிக் கனவுடன் வாழும் லட்சிய மனிதர் ராஜீவ்.
"நினைத்துப் பார்க்க முடியாத விருது இது. போட்டி தடுமாற்றங்களுக்கு எனது க்ளைமேக்ஸ் பதட்டங்கள்தான் காரணம். விரைவில் அதனை தீர்த்து பதக்கம் வெல்வேன். உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரே பறக்கவைப்பேன்" என கான்ஃபிடன்டாக பேசும் ராஜீவ், அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.  

 -.அன்பரசு



  

பிரபலமான இடுகைகள்