ரஷ்யாவில் கால்பந்து திருவிழா!
ஃபிபா 2018:
ரஷ்யாவில்
கால்பந்து திருவிழா!
மெஸ்ஸி, நெய்மர்,
ரொனால்டோ என ஃபுட்பால் சூப்பர்ஸ்டார்கள் காம்போ ரகளையாக களமிறங்கும்
21 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் விரைவில் ஆரம்பம்.
இப்போட்டியை ரஷ்யா ஏற்று நடத்துகிறது. 2006 ஆம்
ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய நாடொன்றில் நடைபெறும் உலகப்கோப்பை போட்டி இதுதான்.
வரும் ஆண்டில் ஜூன் 14 - ஜூலை 15 வரை பதினொரு நகரங்களில் நடைபெறும் மெகா வேர்ல்ட்கப் போட்டியில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் மத்தியில் நடைபெறும்
தகுதிச்சுற்றுகளில் போட்டியிட்டு வெல்லும் நாடுகள், டிசம்பரில்
குரூப்களாக வகைப்படுத்தப்பட்டு மேட்ச் விசில் ஊதப்படும்.
\
ரசனைக்கேற்ப மேட்ச்!
எந்த அணி உங்களுக்கு பிடிக்குமோ, அந்த மேட்ச்சுகளுக்கு மட்டும் டிக்கெட் வாங்கிக்கொள்ளும் வசதி வேர்ல்ட்கப்
ஸ்பெஷல். ஒருவேளை உங்கள் அபிமான அணி மண்ணைக்கவ்வினாலும் அந்த
குரூப்பிலுள்ள வின்னர் அணி எது என அறிய மூன்று மேட்சுகள் பார்க்க முடியும்.
அந்த அணியும் கோவிந்தா சொன்னால் அதே டிக்கெட்டில் உங்கள் எதிரணியின்
நான்கு மேட்சுகளை முகாரி ராகம் இசைத்து பார்க்கலாம். ஒரு நகரில்
ஒரு மேட்ச் என பார்ப்பவர்களும் தொடக்க மேட்ச், காலிறுதி,
அரையிறுதி, பைனல் மேட்சுகளைத் தவிர்த்து பிறமேட்சுகளைப்
பார்க்கவும் டிக்கெட் உண்டு. எனக்கு குறிப்பிட்ட மேட்ச்சுகளைப்
பார்த்தாலே ஆத்மா சாந்தி அடைந்துவிடும் என அடம்பிடிப்பவர்களும் மேட்ச் பார்க்க தனி
டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். ஃபுட்பால் கிளப்பில் நீங்கள் உறுப்பினரா?
சூப்பர், உங்களுக்கு மேட்ச் பார்க்க 8%
டிக்கெட் ஒதுக்கீடு கூட உண்டு ப்ரோ.
டிக்கெட் சேல்ஸ்!
ராண்டம், முதலில் வருபவர்களுக்கு
முன்னுரிமை என இருமுறைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. முதல்
கட்டமாக ராண்டமில் (செப் 14-அக்.12,2017)
முன்னுரிமையில் (நவ. 16-28,2017) எனவும், இரண்டாவது
கட்டமாக ராண்டமில் (டிச.5,2017-ஜன.31,2018)
முன்னுரிமையில் மார்ச் 13-ஏப்.3, 2017)
எனவும் கடைசிநாள் விற்பனை (ஏப்.18-ஜூலை 15,2018) எனவும் ஃபிக்ஸ் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட டீம்களுக்கான டிக்கெட்டுகளை முதல் கட்டத்திலும், குறிப்பிட்ட ஸ்பாட்களில் நடக்கும் மேட்சுகளைப் பார்க்க இரு கட்டங்களிலும் டிக்கெட்டுகளை
வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட மேட்சுகளைக் காணும் டிக்கெட்
பற்றி டிசம்பரில் அறிவிக்க இருக்கிறார்கள். இதில் நான்கு பிரிவாக
டிக்கெட் ரேட் உள்ளது. 210 - 1,100 டாலர்கள் வரை இடது மற்றும்
வலப்புறமுள்ள மேல், கீழ் சீட்களுக்கான டிக்கெட் ரேட்.
அடுத்து கோல்போஸ்ட்களுக்கு மேலும் கீழுமுள்ள சீட்களின் விலை
160-710 டாலர்கள் வரை. இவை தவிர்த்த பிற சீட்டுகள்
ரஷ்யாவின் உள்ளூர் கால்பந்து ரசிகர்களுக்கானவை.
ஃப்ரீ சவாரியும், ஃபேன் ஐடியும்
முதல்கட்டம் இரண்டாம் கட்ட டிக்கெட்டுகள் ஏப்ரல்
அல்லது மே மாதங்களில் அஞ்சலில் உங்கள் வீட்டு காலிங்பெல் அடிக்கும் என்பதால் டோண்ட்
வொரி.
போட்டியைக் காண பக்கா பட்ஜெட்டில் ஹோட்டல்களும் ரஷ்யாவில் உண்டு.
டிக்கெட்டில் நுழையும் கேட் நம்பர் வரை அட்சர சுத்தமாக பிரிண்ட் ஆகியிருக்கும்.
மேட்ச் நடக்கும் கிரவுண்டுக்கு இலவச பஸ் சவாரியும் இருப்பதால்,
மேட்ச் நாட்களின்போது ரசிகர்களுக்கு ஒவ்வொரு செகண்டும் த்ரில் கொண்டாட்டம்தான்.
ரஷ்ய அரசு பாதுகாப்பு கருதி, மேட்ச்சை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு இலவசமாக ஃபேன் ஐடியை தருகிறது.
வெளிநாட்டினர் யாரும் ஐடி இன்றி உள்ளே போகும் ஐடியாவை மறந்துவிடலாம்
அந்தளவு கெடுபிடிகள் டைட்.
FIFA ஹிஸ்டரி!
1904 இல் பாரீசில் தொடங்கப்பட்டு நூற்றாண்டு கடந்து
கால்பந்து,ஃபுட்சல்,சாசர் விளையாட்டுகளை
உலகளவில் நிர்வகிக்கும் ஸ்விட்சர்லாந்து அமைப்பு. உலகளவில்
211 நாடுகளை உறுப்பினராக கொண்டு ஆசியா, ஐரோப்பா,
ஆப்பிரிக்கா, மத்திய, தெற்கு
அமெரிக்கா, கரீபிய நாடுகளின் அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது.
1930 ஆம் ஆண்டில் உருகுவெயின் மான்டேவிடியோவில் முதல் உலக கோப்பை நடைபெற்றது.
103 பணியாளர்களைக் கொண்டுள்ள ஃபிபாவின் ஆண்டு வருமானம் 1.3 பில்லியன் டாலர்கள். தற்போதைய தலைவர் கியானி இன்ஃபான்டினோ.
ஃபிபா ஸ்பெஷல்!
வீரர்களின் புரொஃபைல், அப்டேட், டீம் தகவல்களை அறிய ஃபிபா, ஈஎஸ்பின், வெல்கம் 2018 ஆகிய ஆப்களை
பயன்படுத்தலாம். இதில் மேட்ச் நடக்கும்போது பிரமாண்ட ஸ்க்ரீன்களில்
ஸ்டேடியத்திற்கு வெளியே ஒளிபரப்பாகும் ஃபேன் ஃபெஸ்ட் உற்சாக கொண்டாட்ட நிகழ்வு.
நகரின் பூங்கா, கடற்கரை என முக்கிய இடங்களில் இக்கொண்டாட்டம்
களை கட்டும்.
வித் லவ் ரஷ்யா!
கலினிங்கிரேட்
போலந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையிலுள்ள பால்டிக்
கடற்பகுதி ஸ்பாட். கோனிங்ஸ்பெர் கதீட்ரல் இமானுவேல்
கன்ட் சமாதி, 98 கி.மீ நீளமுள்ள மணல்மேடு
ஆகியவை பார்க்கவேண்டியவை.
கசான்(டாடர்ஸ்டான்)
விளையாட்டுகளின் தலைநகரம். கசான் கிரெம்ளின், சுயும்பைக் டவர் ஆகியவற்றை கண்குளிர
காணலாம். மாஸ்கோவில் செஞ்சதுக்கம், செயின்
பாசில் கதீட்ரல், கிரெம்ளின், போல்சாய்
தியேட்டர். நிஸ்னி நோவ்காரோட்டில் 600 நினைவு
சின்னங்கள்.
காகஸின் நுழைவாயில் எனப்படும் ரஷ்யாவின் பெரும்
நகரமான ரோஸ்டோவ் அன் டான். 18 ஆம் நூற்றாண்டில் ஜார் பீட்டர்
உருவாக்கிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம், பீட்டர்ஹாஃப் மியூசியம்,
வின்டர் பேலஸ் ஆகியவை முக்கிய ஸ்பாட்கள்.
ரஷ்யாவின் ஆறாவது பெரிய நகரமான சமராவிலுள்ள குபிசெவ்
சதுக்கம்,
ஸ்டாலினின் பதுங்குகுழி முக்கிய இடங்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜார் மன்னரால் கண்டுபிடிக்கப்பட்ட
யெகாட்டரின்பர்க், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பார்டரில்
உள்ளது. பாலட் தியேட்டர், ஐசெட் நதி அணை
இதிலுள்ள முக்கிய இடங்கள்.
ரஷ்ய அதிபர் புடின் நாட்டின் தடுமாறும் நிதிநிலைமையில் போட்டி நடத்தும் உரிமை பெற்றது முக்கியமான விஷயமாகிறது. இங்கிலாந்தில் உளவாளிக்கு விஷம் கொடுத்தது, சிரியா போர் என வெளியுறவு தடுமாறும் நிலையில் விளையாட்டின் மூலம் தன்னை நிலைகுலையாத வல்லரசாக காட்ட புடின் நினைக்கிறார். ஏறத்தாழ ஃபிபா போட்டியை 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவழித்து நடத்துகிறார். இதில் வெற்றிபெற்றால் உலக அரசியலில் முக்கியமான அரசியல் வெற்றியை புடின் அடைந்துவிட்டார் என்றே கூறலாம்.
ஆக்கமும் தொகுப்பும் : ச.அன்பரசு
தொகுப்பு உதவி: கார்த்திக் ஜெய்ஷன்