ஒரு லட்ச ரூபாய் கனவு காரின் கதை!
டாடா நானோ
தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு
2005 ஆம் ஆண்டு டாடா ஏஸ் அறிமுக விழாவில் பயணிகள் கார் தயாரிப்பில் குறைந்த விலை கார் தயாரிக்கும் எண்ணத்தை பத்திரிகை நிருபர் ரத்தன் டாடாவிடம் போட்டுவாங்க டாடா நானோ தயாரிப்பின் பிள்ளையார் சுழி போடப்படுகிறது. டாடா நானோ மேற்கு வங்காளத்தில் சிங்கூர் ஆலை போராட்டத்தை சந்தித்து பின்னர் குஜராத்தில் தொழில்தொடங்கி நானோவை அறிமுகப்படுத்துவது வரையிலான வரலாற்றை கூறுகிற நூல் இது.
சேர்மன் ரத்தன் டாடாவின் கனவை நிறைவேற்றுவது டாடா மோட்டார்ஸ் குழுவினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 534, 586, 634 என பல்வேறு எஞ்சின்களை மாற்றி திட்டமிட்ட ஒரு லட்ச ரூபாய்க்குள் உதிரிபாகங்களை வாங்குவது அடுத்த பிரச்னையாக எழ எப்படி சமாளித்து சந்தைக்கு நானோவை கொண்டுவருகிறார்கள் என்பது சாதனை சரித்திரம். டாடா நானோவில் புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு என்று ஏதும் கிடையாது. குறைந்த விலை கார் என்பதே இதற்கான விளம்பரம், அதே காரணத்தால் நானோவின் வடிவமைப்பு தள்ளிப்போனது. தற்போது மே 2018 நானோ நஷ்டம் தந்ததால் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக விக்கிப்பீடியா தகவல் தருகிறது.
டூவீலரில் செல்பவர்களும் கூட கார் வாங்கமுடியும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்ட கார் டாடா நானோ. வெளிப்படையாக நிறுவனரே ஒத்துக்கொண்ட உண்மை , இந்த பட்ஜெட் காரில் லாபம் கிடையாது என்பது. அதற்காகவே அதில் சிற்சில வசதிகளை சேர்த்து மூன்று வகை விலைகளில் கார்களை தயாரித்து விற்றனர். இன்று நிறுத்தப்பட்டாலும் கார் வாங்க வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிய வகையில் டாடா நானோ முக்கியமான தயாரிப்பு. டைம் இதழில் ரத்தன் டாடாவை இடம்பெற வைத்ததும் டாடா நானோவின் சிறப்புகளில் ஒன்று. லட்சியக்கனவு எப்படி மெல்ல உயிர்பெறுகிறது என்பதை அறிய நீங்கள் நிச்சயம் டாடா நானோ காரின் கதையை படித்துதான் ஆகவேண்டும்.
-கோமாளிமேடை டீம்