செய்திபரிமாற்றத்திற்கு புறாவை பயன்படுத்தும் இந்திய மாநிலம்!



Image result for odisha pigeon service



புறாவிடு தூது!- .அன்பரசு


Image result for odisha pigeon service



ஒரு நிமிஷத்தில் பத்து மெசேஜ்களை வாட்ஸ்அப்பிலும், டஜன் செல்பிகளை இன்ஸ்டாகிராமிலும் பறக்கவிடும் காலத்தில் தபால் அனுப்புவதே இன்று வினோதம்தான். பரபரப்பான இந்தகாலத்தில் புறா மூலம் செய்தி அனுப்பினால் உலகம் நம்மை என்ன நினைக்கும்? விநோதரச மஞ்சரியில் நம் பெயர் வந்துவிடும். பகடிகளுக்கு அஞ்சாமல் அன்றிலிருந்து இன்றுவரை ஒடிஷாவில் புறாக்களை பேணிவளர்த்து தூது அனுப்பி வருகிறார்கள்.

உலகிலேயே இன்று இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் மட்டுமே புறாக்களின் செய்தி சேவை செயல்பாட்டிலுள்ளது. 1946 ஆம் ஆண்டு  இந்திய ராணுவம் ஒடிஷா காவல்துறையிடம் சோதனைகளை செய்துபார்க்க 200 புறாக்களை கொடுத்தது. தகவல் தொடர்பு அற்றுப்போகும் அபாயகரமான சூழலில் காவல்துறை செய்திகளை பரிமாறிக்கொள்ள இப்புறாக்கள் உதவும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். கோரபுத் மாவட்டதில் தொடங்கி புறாக்களின் செய்திசேவை பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று, பிரதமர் ஜவகர்லால் நேரு கட்டாக் அலுவலகத்திலிருந்து புறா செய்தி சேவையை தொடங்கிவைத்து சம்பல்பூர் பகுதிக்கு செய்தி அனுப்பினார். "நடக்கவுள்ள மாநாட்டில் பேச்சாளரையும் மக்களையும் பிரிக்குமாறு மேடை அமைப்பு இருக்கவேண்டாம்" என்பதே அச்செய்தி.

Related image


செய்திகளை பரிமாறுவதற்கெனவே பந்தயங்களில் பயன்படுத்தப்படும் 700 பெல்ஜியம் ஹோமர் புறாக்கள் வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. தற்போது 50 புறாக்களை பராமரித்து வரும் ஒடிஷா காவல்துறை, அண்மையில் புவனேஸ்வர் - கட்டாக் வரை செய்திகளை கொண்டு செல்ல புறாக்களை பயன்படுத்தினர். 25 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து செய்தியை கொண்டுசென்று சேர்த்து சாதித்திருக்கின்றன இப்புறாக்கள். இந்நிகழ்ச்சியை இன்டாக்(INTACH) எனும் கலை மற்றும் கலாசார அறக்கட்டளை நிறுவனம் ஒருங்கிணைத்தது. "புறாக்களின் செய்தி பரிமாற்றம் என்பது ஒடிஷாவின் மாநிலத்திற்கான தனிப்பெருமை.இதனை அரசு தொடர்ந்து வருவதற்கு அரசுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்" என இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் டிஜிபி அமியாபூஷன் திரிபாதி நெகிழ்ந்து பேசினார். தற்போது அரசு விழாக்களில் மட்டுமே புறாக்களை பயன்படுத்துகின்றனர்.  

1982,1999 ஆம் ஆண்டுகளில் ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பில் ரேடியோ உள்ளிட்ட தகவல்தொடர்பு சேவைகள் செயலிழந்தபோது கட்டாக்கில் அமைக்கப்பட்டிருந்த புறாக்கள் சேவை மையம் செய்திகளை பல்வேறு தொலைதூர காவல்நிலையத்திற்கு கொண்டு சேர்க்கும் அரியபணியை செய்தன. ஆண்டுதோறும் மாநில அரசு புறாக்களை பராமரிக்கவென 5 லட்சரூபாயை செலவு செய்துவருகிறது. காவல்துறை கட்டாக் மற்றும் அங்குல் நகரங்களில் 150 புறாக்களை பராமரித்து வளர்த்து வருகிறது.

 எப்படி பயிற்சியளிக்கிறார்கள்? முதலில் புறாக்களுக்கு பயிற்சி என்பது 3-5 கி.மீதான். சில நாட்கள் பயிற்சியில் புறாக்களுக்கு அந்த ஏரியா நன்கு அறிமுகமானபின் செய்தி கொண்டு செல்லும் தூரத்தை மெல்ல அதிகரிக்கிறார்கள். இதில் மொத்தம் ஸ்டேடிக், பூமராங், மொபைல் மூன்று முறைகள் உள்ளன. தற்போது பயன்படுத்தப்படுவது ஸ்டேடிக் எனும் ஒற்றை செய்தி பரிமாற்ற முறைதான். 20 ஆண்டுகள் வாழும் புறா, 25 கி.மீ தூரத்தை தோராயமாக 20 நிமிடங்களில் கடக்கும் திறன் கொண்டது. புறாக்கள் பிறந்த ஆறாவது வாரம் செய்தியைக் கொண்டு செல்வதற்கான பயிற்சிகள் தொடங்குகின்றன. இதில் உச்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் 805 கி.மீ தொலைவு சென்று வந்த அட்வென்ச்சர் முயற்சிகளும் புறாக்களுக்கு உண்டு. "நாங்கள் வளர்க்கும் புறாக்களை ஒவ்வொன்றாக தனியாகவும் அடையாளம் காணுவதோடு, அவையும் நம்மை குரல் மூலம் புரிந்துகொள்கின்றன. எனவே அவற்றை சுதந்திரமாக பறக்கவிடும்போது வேலையை செய்துவிட்டு எங்களிடமே திரும்பி வந்துவிடுகின்றன" என்கிறார் பதினாறு ஆண்டுகளாக புறாக்களை பராமரித்து வரும் கான்ஸ்டபிள் பரசுராம் நந்தா.


தூதர் புறா!

கி.பி.1187(மூன்றாம் ராம்சஸ் ) காலகட்டத்திலேயே புறாக்கள் அஞ்சல் சேவைக்காக கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டன. 1800களில் பிரான்சிலும் பின்னர் 1938 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தேசிய புறா சேவை(NPS)யை மேஜர் டபிள்யூ.ஹெச்.ஆஸ்மன் தொடங்கினார். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் புறாசேவைப்பிரிவு ராணுவத்திற்கு 2 லட்சம் புறாக்களை தகவல்சேவைக்காக அளித்தது. செய்தி கொண்டு சேர்க்கும் பணியில் 32 ஆயிரத்து 187 கி.மீ பறந்து சாதித்த புறாக்களும் உண்டு. உலகப்போர் முடிவுக்கு வந்தபின், 32 டிக்கின் சாதனை விருதுகள் புறாக்களுக்கு வழங்கப்பட்டன.

  
சாதனை விருது!

இரண்டாம் உலகப்போரில் சாதனை படைத்த பறவைகளுகு வழங்கப்பட்டதே டிக்கின் வெண்கலப்பதக்கம். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையில் சிறப்பாக செயல்படும் விலங்குகளுக்கு பச்சை, ப்ரௌன்,நீல நிற பட்டை கொண்ட டிக்கின் பதக்கம் அளிக்கப்படும். விலங்குகளுக்காக பாடுபட்ட மரியா டிக்கின்(1870-1951) என்ற பெண்மணி தொடங்கிய PDSA(People's Dispensary for Sick Animals) அறக்கட்டளை அமைப்பின் மூலம் இவ்விருது வழங்கப்படுகிறது.1943 ஆம் ஆண்டு ராயல் விமானப்படையைச் சேர்ந்த மூன்று புறாக்களுக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.