லிங்காயத்துகளுக்கு தனிமத அந்தஸ்து!- வரலாற்று பார்வை
லிங்காயத்துகளுக்கு தனிமத அந்தஸ்து!
அண்மையில் நடந்த கர்நாடக தேர்தலில் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத வாக்கு படிநிலையில் கீழிருந்த காங்கிரஸின் உதவியால் மதச்சார்பற்ற ஜனதாதளம்(குமாரசாமி) ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி செய்த பல்வேறு சீர்திருத்தங்களில் முக்கியமானது லிங்காயத்துகளுக்கு தனிமத அந்தஸ்து. விஷயம் சூடுபிடித்தபோது எழுதி பிரசுரிக்கப்படாத கட்டுரை. அக்காலகட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு வாசிக்கவும்.
கடந்த மார்ச் 19 அன்று
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அரசு, இந்துமதத்தின் ஒரு பிரிவாக
இருந்த லிங்காயத்தை தனி மதமாக அங்கீகரித்துள்ளது.
நீதிபதி ஹெச்.என்.நாகமோகன்தாஸ் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மதமாக லிங்காயத்துகளை
கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகளுடன் ஒரே இனமாக
உள்ள வீரசைவர்களை அரசின் செயல் ஆவேசப்படுத்த மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம்
வெடித்தது. 1941 ஆம் ஆண்டு முதல் லிங்காயத்துகள் தங்களை தனிமதமாக
அறிவிக்க கோரி மாநாடுகளை, பேரணிகளை நடத்தி வந்த நிலையில் அரசு
திடீரென தனிமதமாக லிங்காயத்துகளை அறிவிக்க காரணம் என்ன? அரசியல்
அறுவடைதான்.
பல தலைமுறையாக
பாஜக ஆதரவாளர்களாக உள்ள லிங்காயத்துகளை வாரிச்சுருட்டி வாக்குவங்கிகளாக்கி ஆட்சியைக்
காப்பாற்றிக்கொள்ள சித்தராமையா விரும்புகிறார். லிங்காயத்து அமைப்புகள்,
தனிமத விண்ணப்பத்தை 2013 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு
அனுப்பியபோது, அதனை நிராகரித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசுதான் என்பது பலருக்கும் நினைவிலிருக்காது. விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஆறரை கோடி
லிங்காயத்து வாக்குகளை (மக்கள்தொகையில் 17%) பெற்று அரசியல் பந்தயத்தில் முந்தமுயலும் காங்கிரசின் முக்கிய முயற்சி இது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே லிங்காயத்துகளின் ஆன்மிக குரு பசவண்ணா போட்டோ
அனைத்து அரசு அலுவலங்களிலும் மாட்டப்பட்டுவிட்டது. அண்மையில்
கர்நாடகா வந்த ராகுல்காந்தியும் கொப்பலிலுள்ள கவி சித்தேஸ்வரா, பிடாரிலுள்ள அனுபவா மண்டபா ஆகிய லிங்காயத்து ஆன்மிக மடங்களுக்கு மட்டுமே விசிட்
அடித்தார். மேலும் வித்யாபுரத்திலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கும்
அக்கா மகாதேவியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ஆகியவை லிங்காயத்துகளை தாஜா செய்து வாக்குகளை
அள்ள ஸ்கெட்ச் போட்டு செய்த திட்டம்தான். தனிமதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள
லிங்காயத்துகளுக்கு என்ன லாபம்? மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரத்து
நூறு ஆன்மிக மடங்கள், அவற்றுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கு
அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைப்பதோடு கல்வி நிறுவனங்களில் 50 சதவிகித ஒதுக்கீடும் போனஸாக கிடைக்கும்.
லிங்காயத்துகளுக்கு தனிமத ஒதுக்கீட்டிற்கு வீரசைவர்கள்
ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்களும் லிங்காயத்துகளும்
ஒன்று என கருதுவதால்தான். ஆனால் உண்மை அதுவல்ல. பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தவாதி பசவண்ணா(பசவேஸ்வரா) லிங்காயத்து மார்க்கத்தின் தனித்துவமான ஆன்மிக
குரு. பிராமண குடும்பத்தில் பிறந்த பசவண்ணா, சமூகத்தில் நிலவிய பல்வேறு ஜாதி வேறுபாடுகள், தீண்டாமை,கர்மவினை, சனாதன படிநிலைகளை அதிதீவிரமாக எதிர்த்தவர்.
சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழியில் வல்லவரான பசவண்ணாவின் பக்தர்களுக்கு
சரணர் என்று பெயர். சுத்த சைவ உணவை வலியுறுத்தும் பசவண்ணா,
கன்னடத்தில் பலருக்கும் படிக்க வசதியாக தன் போதனைக் கருத்துக்களை(வச்னாஸ்) எழுதினார். உருவ வழிபாட்டை
எதிர்த்த பசவண்ணா தோற்றுவித்த ஆன்மிக மடமான அனுபவா மண்டபாவில் சரணர்கள் சமூக பொருளாதார
அரசியல் கருத்துக்களோடு வச்னாஸ் போதனைகளையும் விவாதித்தனர். லிங்க
வழிபாட்டோடு, இறப்பு சடங்கில் இறந்தவரின் இடதுகையில் இஷ்டலிங்கத்தை
வைத்து யோகமுத்திரையுடன் உடலை புதைப்பது லிங்காயத்துகளின் மரபு வழக்கம்.
பின்னர் வந்த பிஜல அரசுகளின் ஆக்கிரமிப்பில் பசவண்ணாவின்
போதனைகளும், சரண இலக்கியங்களும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன.
அப்போது ஆந்திராவிலிருந்த சைவ பிராமணர்கள் பசவண்ணாவில் கருத்துக்களால்
ஈர்க்கப்பட்டு லிங்காயத்துகளாக மதம் மாறினர். வழிபடுவதற்கான மூலநூல்,
இலக்கியங்கள் இல்லாத நிலையில் பார்ப்பனர்களின் இறைவழிபாட்டை அப்படியே
லிங்காயத்துகள் தொடர்ந்தனர். அப்போது சைவ சிந்தாந்தங்களிலும்,
சனாதன தர்மத்திலும் ஈடுபாடு கொண்ட வீரசைவர்களும் இருபிரிவுகளுக்கும்
பொதுவான லிங்க வழிபாட்டின் மூலம் லிங்காயத்துகளோடு இரண்டற கலந்தனர்.
பின்னர் வீரசைவத்தை தொடங்கிய குருவான பஞ்சாச்சர்யர்கள்
தம் சித்தாந்த சிகாமணி எனும் புனிதநூலை முன்வைத்து லிங்காயத்துகளும், வீரசைவர்களும் ஒன்றே என வாதிட்டு வந்தனர். கர்மவினை,
பாவங்கள், சொர்க்கம், நரகம்
என இந்துமத கசடுகள் அனைத்தையும் எதிர்க்கும் லிங்காயத்து எப்படி இந்துமத பிரிவாக முடியும்?
என்ற கேள்வியை எழுப்பிய லிங்காயத்து தலைவர்களான எஸ்.நிஜலிங்கப்பா, பி.என்.மணவாலி, சித்தவீரப்பா ஆகியோரின் பல்லாண்டு போராட்டம்
இன்று வென்றிருக்கிறது.
பகிரப்பா குருபாசப்பா தொகுத்துள்ள பசவண்ணாவின் 22 ஆயிரம் சரணங்களடங்கிய நூல், லிங்காயத்துகள் யார்,
அவர்களின் தத்துவம் மற்றும் வீரசைவர்கள் பற்றி எம்.எம். கல்புர்கி, வீரண்ணா ராஜூ,
டி.ஆர்.சந்திரசேகர் ஆகியோர்
எழுதிய கட்டுரைகளும் இந்துமத்தில் இருந்து லிங்காயத்து எப்படி வேறுபடுகிறது என்பதை
தெளிவாக காட்டுகிறது.
-ச.அன்பரசு