டாடா நிலையான செல்வம்!- 150 ஆண்டுகளை கடந்த நிறுவனத்தின் வரலாறு
டாடா நிலையான செல்வம்ஆர்.எம்.லாலாதமிழில்: பி.ஆர்.மகாதேவன்கிழக்கு
1839 ஆம் ஆண்டு பிறந்த ஜ்ம்சேட்ஜி தொடங்கிய டாடா குழுமத்திற்கு இவ்வாண்டு 150 ஆவது பிறந்தநாள். 98 நிறுவனங்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட டாடா நிறுவனம் இந்தியாவில் தோன்றிய நிறுவனம். ஏர் இந்தியா, 501 சலவைசோப், ஹமாம் குளியல் சோப், லக்மே உள்ளிட்ட பிராண்டுகளை உருவாக்கியது டாடா என்பது பலரும் அறியாத ஒன்று. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்குபவர்கள் ஏன் இந்த நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில்களை டாடா நூல் நிச்சயம் தரும்.
1868 ஆம் ஆண்டு தோன்றிய டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் கோலோச்சுகிற ஒன்று. டாடா குழும நிறுவனங்களை டாடா சன்ஸ் தன் பங்குகளை வைத்து கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. பார்சி நிறுவனர்களை தலைவர்களாக கொண்டிருந்தாலும் போர்டு குழுமத்தில் வெளி ஆட்களையும் அனுமதிப்பது, வேலைநேரம் எட்டு மணிநேரம், பணி சார்ந்த பலன்கள் பலவற்றையும் 1912-1920 என இக்காலகட்டத்திலேயே டாடா உருவாக்கி வரலாற்று செய்திகள் பிரமிக்க வைக்கின்றன.
ஜம்சேட்ஜி, ஜே.ஆர்.டி, ரத்தன் டாடா என பல்வேறு தலைமுறை ஆட்களும் எளிமையான முறையில் நிறுவனத்தின் செயல்முறைகளை கற்று இயக்குநர்களாக எழுந்து நின்றவர்கள்தான். பெரும்பாலும் அரசியல் சதிகளை பேசாத நூல் என்றாலும் 1980 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்துடனான டை அப்புக்கு அனுமதி தரவில்லை என்பது எதற்கு என நம்முள் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மாருதி சுசுகி நிறுவனத்தில் அரசின் பங்கு இருந்தது என்பதை ஆர்.எம்.லாலா சொல்லாமலே கடக்கிறார். பின்னர் 1948 இல் தேசிய உடமையாக்கப்பட்ட ஏர் இந்தியாவையும் பெற முடியவில்லை என்று வருந்துகிறார். கிழக்கிந்திய கம்பெனி நூலில் கூறும் வியாபாரம் என்பது போர் இல்லாமலில்லை என்று கூறும் சொல் இங்கும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.
டாடா குழுமம் என்றாலும் டாடா லோகோவை பயன்படுத்த விதிமுறைகள் உண்டு என்பதும், தனியே பிரிந்து வணிகம் செய்வது நிறுவன விருப்பம் என்பது போன்ற தகவல்கள் ஆச்சரியம் தருகின்றன. ரத்தன் டாடா காலத்தில் உருவாக்கிய டாடா டெலிகம்யூனிகேஷன், டாடா எலக்சி, டாடா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை பின்னாளில் முக்கிய நிறுவனங்களாக முன்னேறியது அவரின் தொலைநோக்கு பார்வைக்கு சான்று. மற்றபடி க்லவி, ஆராய்ச்சி, சமூக அறிவியல், தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி என டாடா பல்வேறு விஷயங்களுக்கு ஆராய்ச்சி பணத்தை அளித்து சமூகப்பணிகளையும் செய்கிற விஷயங்களையும் ஆர்.எம்.லாலா அற்புதமாக விவரித்துள்ளார்.
அடிப்படையில் டாடா நிறுவனத்திற்கு லாபம் ஒன்று மட்டுமே நோக்கில்லை என்பதால் பல்வேறு துறைகளிலும் ஆக்ரோஷ ஈடுபாடு இல்லை என்பதை பலம் என்பதா, பலவீனம் என்பதா? டெல்லியை மத்திய அரசின் மையமாக்க அரசியலுக்கு பயன்படுத்திய டாடாவின் அரசியல் விஷயங்கள் இந்நூலில் கிடையாது. டாடா குழுமத்தில் பணியாற்றியவர் எழுதிய நூல் என்பதால் டாடா வுக்கான புகழாரங்கள் அதிகம். டிஜிட்டல் வணிகங்களுக்கு பலரும் மாறிவரும் இந்நேரத்தில் டாடா 150 ஆவது பிறந்தநாளில் தன்னை மேம்படுத்திக்கொள்வது மிக அவசியம். பல்வேறு துறைகளில் டாடா இருந்தாலும் அதனை வெளிக்காட்டுவது டாடா ஸ்டீல், டாடா உப்பு, டிசிஎஸ்,டாடா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்கள் என்பது அந்நிறுவனத்திற்கு நிச்சயம் பெருமையல்ல.
தலைமுறை பணியாளர்கள் நிறுவனத்தின் பலம் என்பவர்கள் திறமை பாரம்பரியமாக தழைக்காது என்பதை சிந்திக்காதது ஏன் என்று புரியவில்லை. இந்திய மண்ணில் அரசியல் வேறுபாடுகளை கடந்து 150 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். அதன் சமூக பொருளாதார திட்டங்கள் மக்களுக்கு உதவியிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அதன் லட்சியத்தை வரவேற்கலாம். புதிய நூற்றாண்டிற்கான சவால்களை டாடா எப்படி வெல்கிறது என்பதைக் காண காத்திருக்கிறோம்.
- கோமாளிமேடை டீம்.