நூல் விமர்சனம்: கிழக்கிந்திய கம்பெனி -ஒரு வரலாறு
கிழக்கிந்திய கம்பெனி
-ஒரு வரலாறு
நிக் ராபின்ஸ்
தமிழில்: ராமன் ராஜா
கிழக்கு
விலை ரூ.300
கிழக்கிந்திய கம்பெனி எனும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னோடி நிறுவனம் இந்தியாவை ஒட்டக்கறந்து பிச்சையெடுக்க வைத்ததை உறுதியான எழுத்து ஆவணமாக முன் வைத்துள்ளார் நிக் ராபின்ஸ். 275 ஆண்டுகால வரலாற்றில் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநரான இங்கு வந்த ராபர்ட் கிளைவ், வாரன்ஹேஸ்டிங்க்ஸ் ஆகியோர் வியாபாரம், வரி தந்திரங்கள், போர், பஞ்சம் ஆகியவற்றின் மூலம் சுருட்டிய பணம் இங்கிலாந்தின் தொழில்துறையை ஊக்குவித்தது. ஆனால் இந்தியா? இன்றும் மானியங்களுக்கு அந்நிய நாடுகளிடம் கையேந்தி கெஞ்சிவருகிறது.
அரசும் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த திணறி அவர்களிடமே லஞ்சப்பணம் வாங்கி நிர்வாகம் செய்வது போலவே அன்று இங்கிலாந்தில் நடந்தது. அரச வம்சம் பாக்கெட் மணிக்காக செய்த உரிமைப்பத்திரம்தான் இந்தியாவை இருநூறு ஆண்டுகளுக்கு மீளாத துயிலில் முதுகெலும்பை உடைத்து போட்டது. இந்தியா, மற்றும் சீனாவை எப்படி ஆங்கிலேய நிறுவனம் கைப்பற்றியது என்பது இன்று வியாபாரம் என்று வரும் நிறுவனங்கள் மேல் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. வியாபாரம், வரிச்சலுகைகள், பின் அசையா சொத்துக்கள் என விரிவாக்கி நீதி, நிலப்பரப்பை கையகப்படுத்துவது வரை விஸ்வரூபமெடுத்த கிழக்கிந்திய கம்பெனியின் கரன்சி காலம் 1757-1780. இக்காலத்தில் மட்டும் 16 லட்சம் பவுண்டுகள் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு இந்தியா கொடுத்த பரிசு 1770 ஆண்டு பஞ்சத்தில் பலியான பனிரெண்டு லட்சம் மக்களின் மரணங்கள்.
1600 ஆம் ஆண்டு தொடங்கி 1874 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியா, சீனா, பர்மா, பஞ்சாப் , சிந்து ,ஆப்கானிஸ்தான் வரை போர்களை நடத்தி வியாபாரக் கம்பளத்தை விரித்தது, குறைவான கூலியில் உழைப்பை பெற்று, உள்ளூர் தொழில்களை அழித்து, வியாபாரத்தை பெருக்கி சீனாவில் நுழைய அபினை விளைவித்தது வரலாற்றுத்தடமெங்கும் கிழக்கிந்திய கம்பெனி நிகழ்த்தியவை மனிதநேயமற்ற லாபத்திற்கான குற்றங்கள்.
அதேநேரத்தில் ஆங்கிலேயர்கள் அனைவரும் வில்லன்களல்ல. எட்மண்ட் பர்க், சீன ஆங்கிலேய கமிஷனர் லின் ஆகியோர் ஓரளவு தம் மனசாட்சிப்படி உண்மை பேசி கிழக்கிந்திய நிறுவனங்களை சட்டத்தின் உதவியால் உலுக்கி நீதிகேட்டவர்கள்தான். ஆனால் அரச குடும்பத்தின் கட்டற்ற அதிகாரம் நீதிக்குழுக்களை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையே கலைக்கிறபோது சாதாரண தனிமனிதர் என்ன செய்துவிட முடியும்?
கட்டற்ற முறையில் ஒரு தேசத்தின் ஏஜெண்ட் போல செயல்படும் கார்ப்பரேட் நிறுவனத்தின் லாபவெறி கவனிக்கப்படாமல் விடும்போது எப்படி புற்றுநோயாக மாறும் என்பதற்கு கிழக்கிந்திய கம்பெனி வரலாறு முக்கிய சாட்சி. ராமன்ராஜாவின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு நூல் சொல்ல வந்த விஷயங்களை பளீரென முகத்தில் அறைவது சொல்லுகிறது.
-கோமாளிமேடை டீம்