சீனாவில் இந்திய ரூபாய்!

   

Image result for rupees



இந்திய ரூபாய் சீனாவின் தயாரிப்பா?

இந்தியச் சந்தைகளில் இந்தியப்பொருட்களை விட மிக விற்றுத்தீர்பவை சீனப்பொருட்களே. ஆனால் பொருட்களை வாங்க கொடுக்கும் பணமே சீனாவில் ரெடியாகிறது என சீன நாளிதழ் பீதி கிளப்பியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ், திருமண சான்றிதழ்கள், லைசென்ஸ் உரிமம், கரன்சி உள்ளிட்டவற்றையும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகளுக்கு சீனா தயாரித்தளிக்கிறது என செய்தி வெளியிட்டதுதான் சர்ச்சையாகியுள்ளது. ஆனால் இச்செய்தியை சீன வங்கி கரன்சி அச்சுத்துறை தலைவர் லியூ குய்செங் தடாலடியாக மறுத்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு சீனா தீட்டிய திட்டப்படி தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளை நிலம், நீர் வழியாக இணைத்து தொழில்வாய்ப்புகளை பெறுவதே நோக்கம். இதன்படி பல்வேறு நாடுகளிலுள்ள அச்சு தொடர்பான முக்கியப் பணிகளை சீனா ஏற்று செய்துவருகிறது. “தகவல் உண்மையாக இருந்தால் இந்தியாவுக்கு இதைவிட மோசமான பிரச்னை வேறு எதுவும் இருக்கமுடியாது” என காங்கிரசைச் சேர்ந்த சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கலர்கலராக கரன்சி ரிலீசானாலே பிரச்னைதான்!


2

சில்லறை பழிக்குப்பழி!

குஜராத்தின் காடியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் முன்னாள் மனைவிக்கு தரவேண்டிய ஜீவனாம்ச பணத்தை சில்லறைகளாக கொடுத்து நூதனமான பழிவாங்கியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த கணவர், விவாகரத்தான மனைவிக்கு சிலமாதங்களாக தரவேண்டிய ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சத்தொதைக நிலுவையில் இருந்தது. இதில் 25 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாக கோர்ட்டில் அளிக்க ஒப்புக்கொண்டார்.

 பதினாறாயிரம் ரூபாயை பத்துரூபாய், ஐந்து ரூபாய் என சில்லறைகளாக மாற்றிவந்து கொட்டி மனைவியை திகைக்க வைத்துள்ளார். ரூ.9 ஆயிரத்தை நோட்டாகவும், பதினாயிரத்தை சில்லறையாகவும் தர முன்வந்த கணவரின் கோரிக்கையை மனைவி முதலில் ஏற்கவில்லை. “நான் உழைத்து சம்பாதித்தை ஏன் மறுக்கிறீர்கள்?” என்று வாதிட்டு கோர்ட்டையும் ஒப்புக்கொள்ள வைத்து விடாப்பிடியாக மனைவியை ஒருமணிநேரத்திற்கும் மேலாக சில்லறைகளை எண்ண வைத்து நூதனமாக பழிவாங்கியுள்ளார் கணவர்.

3

கேரளா நிவாரணநிதிக்கு தடா!

பெருமழையால் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குரியுள்ள கேரளாவுக்கு அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி ரூபாயை இந்தியஅரசு நிறுத்தி வைத்துள்ளது.

அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் முகமது அல் நஹியான் அளித்த 700 கோடி நிவாரணநிதியை இந்திய அரசு, கேரளாவுக்கு வழங்குவதில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் உள்ளன. பிறநாடுகள், அமைப்புகள் ஏன் ஐ.நாவின் உதவிகளைக் கூட இந்தியா மறுத்துள்ள செய்தி தெரியவந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, உத்தர்காண்ட் வெள்ளம்(2013), காஷ்மீர் வெள்ளம்(2014) ஆகிய பேரிடர்களின்போதும் இந்தியா பிறநாடுகளின் நிதியுதவியை ஏற்கவில்லை.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016 படி, மாநிலங்கள் ஏற்றால் வெளிநாடுகளின் நிதியுதவியை இந்திய அரசு ஏற்கும் சட்டஷரத்தும் உண்டு. பெரும்பாலான கேரளமக்கள் பணியாற்றுவது வளைகுடா நாடுகள் என்பதால், தம் தாய்நிலத்தை காக்க அனுப்பும் நிதியை சட்டத்தை காரணம் சொல்லி புறந்தள்ளுவது புத்திசாலித்தனமல்ல. சேதமதிப்பு 20 ஆயிரம்கோடிகளுக்கு மேல். இதில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி 600 கோடிகள் மட்டுமே.

4
ஜெயில்களில் வாஜ்பாய் கீதம்!

அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசியல்வாதி என்பதோடு சிறந்த கவிஞர் என்பது பலரும் அறிந்த செய்தி. அவரின் கவிதைகளைப் பயன்படுத்தி கைதிகளை மனமாற்றம் செய்ய உ.பி அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு வாஜ்பாய் எழுதிய கவிதைகள் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன. “சிறைவாழ்க்கை கைதிகளுக்கு மன அழுத்தம் தருகிறது என்பதால், வாஜ்பாயின் ஊக்கம் தரும் கவிதைகள் அவர்களுக்கு அச்சிடப்பட்டு  வழங்கப்படவிருக்கிறது” என்கிறார் சிறைத்துறை அமைச்சர் ஜெய்குமார் ஜெய்கி. இதோடு வாஜ்பாய் வாழ்ந்த ஆக்ராவின் படேஸ்வர் கிராமம், லக்னோ, கான்பூர், பல்ராம்பூர் ஆகிய இடங்களில் மணிமண்டபம் அமைக்க உ.பி அரசு திட்டமிட்டு வருகிறது. மக்கள் பணத்தில் மங்கலம் பாடுவது ஈஸிதானே!


பிரபலமான இடுகைகள்