குட்காவுக்காக கொடும்பாவி எரிப்பு!
ஆரோக்கிய குழந்தைக்காக நரபலி!
உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தைச் சேர்ந்த பெற்றோர் மாந்திரீகர்களின்
பேச்சைக்கேட்டு தம் ஆறு வயது பெண்குழந்தையை நரபலி கொடுத்து உடலை எரித்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து
வருகிறது.
ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆறுவயது குழந்தையை
கொன்றால் அடுத்து பிறக்கும் குழந்தை பயில்வானாக பிறக்கும் என்று மாந்திரீகர் அளித்த
நம்பிக்கைதான் பெற்ற மகளையே கொல்லத்தூண்டியுள்ளது. குழந்தையை கொன்று வீட்டினுள்ளே உடலை எரித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. "பல்வேறு மருத்துவமுறைகளை கையாண்டும் மகளின் உடல்நிலை பலவீனமடைந்துகொண்டே வந்தது. என் பேரனுக்கும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு இருந்தது" என்கிறாள் இறந்த தாராவின் பாட்டி. போலீஸ் போஸ்ட்மார்ட் அறிக்கைப்படி, இறந்த தாராவை பெற்றோர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளது என தெரிவித்துள்ளார் போலீஸ்
அதிகாரியான ரவீந்திர கௌர். விரைவில் நரபலி பெற்றோருக்கு சிறைவாசம்
விதிக்கப்படவிருக்கிறது.
2
ஆயிரம் குழந்தைகளுக்கு உதவும் சிங்!- ரோனி
பஞ்சாபின் சங்ரூர் நகரைச் சேர்ந்த பான்சிங் ஜஸி, பதினைந்து ஆண்டுகளாக ஷேர்பூர், பர்னாலா, லாங்வால், சங்ரூர், துரி ஆகிய இடங்களிலுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வியளித்து
வருகிறார்.
இருபது ஆசிரியர்களின் உதவியுடன் ஆறுபள்ளிகள் மூலம் ஆயிரம்
மாணவ மாணவிகளுக்கு அரசின் அணுவளவு உதவியையும் பெறாமல் ஜஸி கல்வியமுதை ஊட்டியுள்ளார். 2003 ஆம் ஆண்டு தொடங்கிய குருநானக்தேவ் அறக்கட்டளை மூலம் ஏழைக்குழந்தைகளின்
கல்வி, நூல், ஆசிரியர்களின் சம்பளத்தையும் வழங்கிவருகிறார் ஜஸி. "என் வீட்டின் அருகிலுள்ள பாம்பு பிடிப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள் ஆகியோரை அணுகி குழ்ந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரியபோது
ஏழ்மையால் அது எங்கள் விதி என குழந்தைகளை அனுப்பவில்லை. அச்சம்பவமே பள்ளிதொடங்குவதற்கு காரணம்" என்கிறார் ஜஸி. நூல்கள் உட்பட பல்வேறு பொருட்களை தானம் பெற்று இரவு படிப்பகம் உள்ளிட்டவற்றை நண்பர்களுடன்
இணைந்து நடத்திவருகிறார் ஜஸி. அறியாமையை கொளுத்த கல்வித் தீப்பந்தமே
சரி!
3
ஆபரேஷனுக்கு அரசு உதவி!
திருநங்கைகளின் செக்ஸ் மாற்று ஆபரேஷனுக்கு கேரள அரசு 2 லட்சரூபாய் உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
"அரசிடம் அறுவைசிகிச்சைக்கு உதவிகோரி விண்ணப்பித்துள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும். பெண் அல்லது ஆண் என விருப்பத்துடன்
வாழ்வதற்கு பணம் தடையாக இருக்காது" என அதிகாரப்பூர்வமாக கேரள முதல்வர்
பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் திருநங்கைகள் தொடர்பான சட்டத்தை உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக கேரள அரசு முன்னமே பல்வேறு உதவிகளை
வழங்கிவருகிறது. கேரளாவின் உயர்கல்வி ஆணையம் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இரண்டு சீட்டுகளை வழங்கியுள்ளது. கொச்சி மெட்ரோ ரயிலில் திருநங்கைகளுக்கு பணிவாய்ப்புகளும், சுயதொழில் வாய்ப்புகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
4
குட்கா விபரீதம்!
உ.பியிலுள்ள மதுராவில் ஒருவரை உயிரோடு
கொளுத்த முயற்சித்த இரு நண்பர்கள் பிடிபட்டனர். குட்காவை ஷேர் செய்ய மறுத்ததற்காகத்தான் இந்த கொலைவெறி.
மதுராவின் சம்போகா கிராமத்தைச் சேர்ந்த பர்தேசி, மளிகைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த ராஜூ, ராகுல் தாக்கூர் என்ற இரு நண்பர்கள்
கொஞ்சமே கொஞ்சம் குட்கா கடன் கேட்க, பர்தேசி இன்ஸ்டன்ட்டாக மறுத்திருக்கிறார். டென்ஷன் ஆன இருவரும் உடனே பர்தேசியின் பையிலிருந்த கெரசினை எடுத்து அவரது தலையில்
ஊற்றி நெருப்பை பற்றவைத்துவிட்டனர். மக்களின் உதவியால் 20% நெருப்புக்காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார் பர்தேசி. கொலைமுயற்சி, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்து வழக்கம்போல குற்றவாளியை சேசிங் செய்து வருகிறது போலீஸ்.