டீக்கடைக்காரர் தேர்தலுக்கு ரெடி!


Image result for allari naresh comedy





அரசியலில் இளைஞர்கள்!

பிரிவினைவாதிகள் பாரதமாதா என்ற புனைவை உருவாக்கி எவ்வளவு வேகமாக செயல்படுகிறார்களோ அதைப்போலவே சமூக நல்லிணக்கத்திற்கான குழுக்களும் உருவாகிவருகின்றன. அதில் ஒன்றுதான் பட்டியல் இனத்தவர்கள் தொடங்கியுள்ள பகுஜன் ஆஸாத் கட்சியும் கூட.

இந்தியாவிலுள்ள பல்வேறு ஐஐடியில் படித்து இஎம்ஐ கட்டாமல் வீடு வாங்கும் கெத்துள்ள ஐம்பது பேர் தடாலடியாக வேலையை ராஜினாமா செய்து அரசியலில் குதித்து பகுஜன் ஆஸாத் கட்சியைத் தொடங்கியுள்ளனர். எதற்கு இந்த கட்சி? எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு இன்மைதான் கட்சி தொடங்கி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்திற்கு காரணம். "நாங்கள் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இறங்கி ஆட்சியைப்பிடிக்கும் பேராசை கொண்டவர்களல்ல. 2020 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதே எங்களது எதிர்கால லட்சியம்." என்கிறார் இந்த அணியை வழிநடத்தும் டெல்லியைச் சேர்ந்த நவீன்குமார்.

2

கரண்ட் கட்டானால் காசு!

மின்சார இடைவெட்டால் அரசுகள் கவிழ்ந்த வரலாறு உண்டு. அரசைக் காப்பாற்ற இன்றுள்ள மாநில அரசுகள் பக்கா ஷார்ப்பாக வேலை செய்கின்றன. டெல்லி அரசும் அப்படி ஒரு மக்கள்நல திட்டத்தை அறிவித்துள்ளது. அதைவிட ஆச்சர்யம் அதனை கவர்னர் அனில் பைஜால் ஏற்றுக்கொண்டதுதான்.

டெல்லியில் முதல் ஒருமணிநேர மின்வெட்டு தவிர்த்து அடுத்து மின்சாரம் நிற்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அரசு உங்களுக்கு ரூ.100 அளிக்கும். அதாவது உங்கள் மின்சார பில்லில் நூறு ரூபாய் தள்ளுபடி. "டெல்லியிலுள்ள 55 லட்சம் மக்கள், மின்வெட்டினால் பாதிக்கப்படுவதை தடுக்கும் புரட்சிகரத்திட்டம் இது" என நெக்குருகி ட்விட்டரில் எழுதியுள்ளார் ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதன்விளைவாக டெல்லி நகருக்கு மின்சாரம் தரும் தனியார் மின்நிறுவனங்கள் திகைப்பில் உள்ளன.

3

டீக்கடைக்காரர் தேர்தலுக்கு ரெடி!

டீக்கடைக்காரர் என்றதும் பரிதாபப்பட்டு உச்சு கொட்ட வேண்டாம். விரைவில் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக நிற்கும் அனில்குமார், 400 கோடிரூபாய் சொத்துக்கு ஏகபோக அதிபதி. வீட்டில் ஏறி இறங்க மட்டும் பதினாறு கார்களை வைத்துள்ள நவீன குபேரன்.

"வீட்டுவேலை செய்து எங்களைக் காப்பாற்றிய அம்மா தனக்கு சாப்பிடக் கிடைக்கும் உணவை முதலில் எங்களுக்கே கொடுப்பாள்" என்னும் அனில்குமார் கல்வி கற்க வறுமை தடையாக, பதினொரு வயதில் பெங்களூருவுக்கு வந்தார். கிடைத்த வேலைகளைச் செய்து காசு சேர்த்தவர், சிறிய டீக்கடையைத் தொடங்கி கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்தார். பின் தொண்ணூறுகளில் ரியல் எஸ்டேட்டில் இறங்கி கோடிகளை குவித்து ஜெயித்ததுதான் அனில்குமாரின் வரலாறு.

4
ராயல் போலீஸ்!

மனாய் ஆசிரமத்தில் ஆசாராம்பாபு பதினாறு வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார். நீதிபெறும் போராட்டத்தில் உறுதியாக உண்மையின் பக்கம் நின்று சாதித்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த டிசிபி அஜய்பால் லம்பா. ஜோத்பூர் பட்டியல் இன நீதிமன்றம் ஆசாராம் பாபுவுக்கு ஆயுளும், அவரின் சகாக்கள் இருவருக்கு இருபது ஆண்டுகள் சிறைதண்டனையையும் விதித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு மனாய் ஆசிரமத்தில் சிறுமியை சகாக்களுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கு இது. "சுதந்திர தினத்தன்று மைனர் பெண்ணுக்கு நடந்த அவலம் இது. நீதிவென்றுள்ளது" என நீதிபதி மதுசுதன் சர்மா தீர்ப்பளித்தபின் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் அதிகாரி லம்பா. தற்போது உதய்பூரில் சிறை அதிகாரியாக உள்ள லம்பாவுக்கு வழக்கு பதிவானதிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மிரட்டல் கடிதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட அனாமதேய போன் அழைப்புகள் வழக்கை கைவிட லம்பாவை வற்புறுத்தியும் நேர்மையாக விசாரணை செய்து நீதியை நிலைநாட்டியுள்ளார். கடமை கண்ணியம் லம்பா!



பிரபலமான இடுகைகள்