மேன்ஷன் மேனியா!
மேன்ஷன் வாழ்க்கை சென்னைக்கு விஜயம் செய்யும் ஆண்களின் வாழ்க்கையில் கட்டாயமான நீங்காமல் இடம்பெறு்ம் காண்டம். இந்த இடத்தில் நீ்ங்கள ்வேலை கிடைத்து எங்கு தங்குகிறீர்கள் என்பதே முக்கியம். திருவல்லிக்கேணி, சூளைமேடு, கேகேநகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களை உங்கள் பாக்கெட் கனமே தீர்மானிக்கும்.
திருவல்லிக்கேணியில் தங்குவதாக பத்திரிகை தோழர் கூறியபோது, அவரின் எடிட்டர் சிம்பிளாக சொன்னார் "எழுதறவனுக்கு மனநிலை முக்கியம். அமைதியில்லாத சூழல் இருந்தால் மனசும் கெட்டு உடம்பும் போயிரும்". பின்னர் அவர் மயிலாப்பூரில் தன் சம்பளத்தை பாதியைக் கொடுத்து தங்கி ஜனசேவையைத் தொடர்ந்து வருகிறார். மேன்ஷன் வாழ்க்கையில் முக்கியமானது. இந்தியாவில் பிறரை ஏற்க நமக்கு தேவையான ஒன்றுதான். சகிப்புத்தன்மை. இதனை அளவு கடந்த பொறுமை எனவும் சொல்லலாம். திருவல்லிக்கேணியைத் தேர்ந்தெடுத்தால் மனதேச பக்கிகள் அறைத்தோழராவது நிச்சயம். எனவே இரவு சன்னி லியோனோடு ஹஸ்கியாக ரொமான்ஸ் பண்ண நினைத்து அடுத்தடுத்த எபிசோடுகள் முன்னேறுகையில் கதவு தட்டும் சத்தம் கேட்கும். ஆம். மனவாடுகள்தான். காசில்லாமல் அண்ணாச்சி கடையைத் தொங்கி திரிந்தாலும் சினிமா மீதான பித்து ஆந்திராக்காரர்களுக்கு மரபணுவில் பொதிந்திருப்பதால் அவர்களை மாற்றவே முடியாது. நைட்ஷோ போய்விட்டு நடுராத்திரி டாண் என வந்து கதவைத் தட்டி நம் உறக்கத்தை கொல்லுவார்கள். இலக்கியவாதிகளின் திருவல்லிக்கேணி பற்று வேறுவிதமானது. தியானம் போல வாழ்பவர்களுக்கு திருவல்லிக்கேணி மட்டுமல்ல எந்த இடமும் ஒ்ன்றுதான்.
அவர்களோடு நெருக்கமாகவும் உதவுவது சினிமாதான். பவனிசம், பாலைய்யா பரவசம் பற்றி பேசினால் பெவிகாலை விட உறுதியாகிவிடும் நட்பு. ஆனால் அதேநேரத்தில் ஊறுகாய் விஷயத்தில் கவனமாக இல்லையெனில் அன்பு பரிசாக மாங்காய் ஊறுகாயை சோற்றில் போட்டு ஊட்டிவிட்டு குடலை குதறிப்போட்டுவிடுவார்கள். ஏழுமுறை வயிற்றுப்போக்கான வேதனை ஆயுளுக்கும் எனக்கு மறக்காது. அதேநேரம் பிறருடைய பக்கெட்டுகளை நம்ம பயலுகதேன் என பயன்படுத்துவதும் இவர்களின் ஆஸ்தான பழக்கம். திருவல்லிக்கேணி வெங்கடேஷ்வரா மேன்ஷனில் பிரமோத்தின் அறையில்தான் நான் தங்கினேன். அந்த அறையில் நிதானமாக ஆனால் உறுதியாக தலைவர் போல அறையை அங்குலம் அங்குலமாக குறுநில மன்னர் போல ஆண்டது அவர்தான் என பேசும் தொனியிலேயே கண்டுகொண்டேன். தமிழை கொச்சையாக இங்கிலீஷ்காரன் மாதிரி பேசுவார். ஆனால் எதையும் உள்வாங்கும் திறமை அதிகம். பாகுபாடின்றி உணவுகளை பங்கிடுவார். சிலமுறை அம்மா உணவகத்தில் சோறு வாங்கி தரச்சொன்னார்.
அப்போது சமூக விழிப்புணர்வு மாத இதழில் பணி. சம்பளம் ஏழு ஆயிரம். ஆனால் அங்கே வேலைக்கு போகும்போது சாதி கேட்டு அதனை சொன்னபின்னேதான் உட்காரச்சொல்லி எனக்கு என்ன தெரியும் என்று செய்து காட்டினேன். இந்தியாவில் சாதி என்பது பெருமையல்ல; சுரண்டலுக்கான வடிவம் என்பதை அந்த அலுவலகம் மெல்ல கற்றுத்தந்தது. பெரும்பாலும் இரவு எட்டரை மணிக்கு அறைக்கு வரும்போது அறை திகுதிகு வெப்பத்திலும் இடைவிடாத லைட்டுகளின் ஒளியாலும் நிறைந்திருக்கும். அறையின் மூலை முடுக்கெங்கும் சிஏ படிக்கும் பிரமோத் மற்றும் பிற இரு தோழர்களின் நூல்கள் இறைந்து கிடக்கும். அறைகள் ஒரே போல் நடராஜ் ஸ்கேல் வைத்து வரைந்து கட்டப்பட்டிருப்பதால், குளித்து விட்டு வரும்போது எந்த ரூம் என்னுடையது என நிறையமுறை குழம்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் தெருமுக்கு பிள்ளையார் போல சேரில் உட்கார்ந்திருக்கும் பிரமோத் எனக்கு அபயம் அளித்து அறையை சொல்லாமல் காட்டுவார். அறையில் இரண்டே மாதங்களில் குறைவான வாடகைக்கு பிரமோத்தின் நண்பர் தாவிவிட, வந்தவர் அமிதாப்ஜி போல உயர்ந்தவர். ஒருமாதிரி திணறி திணறி சிரிக்கும் அவரின் சிரிப்பை மறக்கவே முடியாது. இவரின் வருகை எனக்கு அறையில் ஒட்டகச்சிவிங்கி நுழைந்து விட்டது போன்ற தன்மையை ஏற்படுத்தியது. அபார உயரத்தில் இரண்டு காலடிகளிலேயே அறையை அளந்துவிடும் நீள தவளைப் பாதம். அனைத்தும் அரசின் சொத்து என்பதுபோல அத்தனை பிரமோத்தின் கண்ணாடி, சீப்பு, பவுடர், அறைத்தோழரின் தண்ணீர், ட்ரிம்மர், என்னுடைய பக்கெட், துணி கிளிப் ஆகிய பொருட்களையும் ஈவு இரக்கமின்றி பயன்படுத்தினார். அப்போதுதான் கதிர்வேல் என்ற நண்பர் அழைத்து புதிய அறை பார்த்திருப்பதாக கூறி தங்க அழைத்தார்.