இந்தியாவின் முதல் புரட்சி நாயகன்!
என் தேசம் இந்தியா!
பகத்சிங்
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது கருப்புக்கொடி காட்டி இந்தியாவே போராடியது. என்ன காரணம்?, அரசியலமைப்பை திருத்தும் அந்த கமிஷனில் ஒருவர் கூட இந்தியராக இல்லை என்பதால்தான். அக்டோபர் 30 அன்று தேசியவாதியான லாலா லஜபதிராய் சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினார். லாகூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தை போலீசார் என்ன வேடிக்கை
பார்த்து்க்கொணடிருப்பார்களா?
தூத்துக்குடியில் வண்டியைக் கொளுத்தி துப்பாக்கிச்சூட்டை தொடங்கிய போலீசாருக்கு முன்னோடிகள் அவர்கள். எனவே லத்தியை சுழற்ற பலர் அடிபட்டு வீழ்ந்தனர். அதில் போராட்டத்தை முன்னெடுத்த லாலா லஜபதியும் ஒருவர். அடித்த அடியில் மருத்துவமனையில் காயங்களுடன் படுக்கையில் துவண்டு கிடந்த லாலா, நவம்பர் 17 அன்றே இறந்துபோனார். இந்த சம்பவம் பிறருக்கு கோபம் தந்ததோ இல்லையோ பகத்சிங் என்ற இளைஞனுக்கு தீராத வன்மத்தை ஆங்கிலேயர்கள் மீது ஏற்படுத்தியது. தோழர்கள் சிவராம் ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் சேர்ந்து லத்தி சுழற்ற உத்தரவிட்ட சூப்பரிடெண்ட் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொலை செய்ய திட்டமிட்டனர். டிச.17, 1928 அன்று திட்டமிட்டப்படி செயலாற்றும்போது தவறுதலாக துணை சூப்பரிடெண்ட் ஜான் பி சாண்டர்ஸ் என்பவர் இறந்துபோனார். உடனே லாகூரில் போலீஸார் தீவிரமாக பகத்சிங் குழுவை தேடியலையத்தொடங்க, அங்கிருந்து தலைமறைவாகி தப்பித்தது இளைஞர் படை.
1929 ஆம் ஆண்டு டிச. 17 பகத்சிங் இன்னொரு தீவிரமான காரியத்தை செய்தார். நண்பர் படுகேஷ்வர் தத் உடன் சேர்ந்து புது டெல்லியிலுள்ள மத்திய அமைச்சரவையில் உள்நுழைந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். அவையும் இன்று போலவே வீரியமாக வெடிக்காமல் கண்ணீர் புகை குண்டாய் புகையைக் கொட்ட சில உறுப்பினர்களே காயமுற்றனர். தப்பி ஓட வாய்ப்பிருந்தும் இருவரும் அங்கேயே வந்தே மாதரம் என்று முழங்கிக்கொண்டு நிற்க கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேயரைக் கொன்று நாட்டு வெடிகுண்டு வீசினால் என்ன தண்டனை கிடைக்கும்? ஒரே வாய்ப்புதான். தூக்கு தண்டனை. 1931 ஆம் ஆண்டு பகத்சிங் தன் இருபத்து மூன்று வயதில் தேசத்திற்காக தன் உயிரை பலியிட்டார். "பகத்சிங் தீவிரவாதிபோல நடந்துகொண்டாலும் லாலா லஜபதிராய் மீது கொண்ட அபிமானமே அதற்கு காரணம் என்பது பகத்சிங்கின் புகழ், பெருமைக்கு காரணம்" என்று பேசினார் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு. இந்தியாவில் முதல் புரட்சிவீரனாக பகத்சிங் இன்றும் போற்றப்பட்டு வருகிறார்.