கடமை கண்ணியம் லம்பா!
ராயல் போலீஸ்!
மனாய் ஆசிரமத்தில்
ஆசாராம்பாபு பதினாறு வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார். நீதிபெறும்
போராட்டத்தில் உறுதியாக உண்மையின் பக்கம் நின்று சாதித்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த டிசிபி
அஜய்பால் லம்பா. ஜோத்பூர் பட்டியல் இன நீதிமன்றம் ஆசாராம் பாபுவுக்கு
ஆயுளும், அவரின் சகாக்கள் இருவருக்கு இருபது ஆண்டுகள் சிறைதண்டனையையும்
விதித்துள்ளது.
2013 ஆம்
ஆண்டு மனாய் ஆசிரமத்தில் சிறுமியை சகாக்களுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கு இது.
"சுதந்திர தினத்தன்று மைனர் பெண்ணுக்கு நடந்த அவலம் இது.
நீதிவென்றுள்ளது" என நீதிபதி மதுசுதன் சர்மா
தீர்ப்பளித்தபின் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் அதிகாரி லம்பா. தற்போது உதய்பூரில் சிறை அதிகாரியாக உள்ள லம்பாவுக்கு வழக்கு பதிவானதிலிருந்து
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மிரட்டல் கடிதங்கள், நூற்றுக்கும்
மேற்பட்ட அனாமதேய போன் அழைப்புகள் வழக்கை கைவிட லம்பாவை வற்புறுத்தியும் நேர்மையாக
விசாரணை செய்து நீதியை நிலைநாட்டியுள்ளார். கடமை கண்ணியம் லம்பா!
2
சாணி வைத்தியம்!
இந்தியர்களின்
மூடநம்பிக்கைகளை லிஸ்ட் போட்டால் அது பிரிட்டானிகா தொகுப்புகளையும் பீட் செய்யும் என்பதற்கு
உத்தரப்பிரதேச பாம்புகடி வைத்தியமே சாம்பிள்.
உத்தரப்பிரதேசத்தைச்
சேர்ந்த தேவேந்திரி என்ற பெண், சமைக்க விறகு தேடி காட்டுக்குள் செல்லும்போது
பாம்பு கடித்துவிட்டது. பாம்பு கடித்ததை கணவரிடம் சொன்னபிறகுதான்
விபரீதம் தொடங்கியது. உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிச்சென்றிருந்தால்
நியாயம்; ஆனால் கணவரோ
கிராமத்து பூசாரியைக் கூட்டிவந்து பாம்புகடி விஷம் உடலை விட்டு இறங்க மந்திரித்திருக்கிறார்.
பின் பூசாரியின் ஆலோசனைக்கேற்ப, மனைவியை படுக்க
வைத்து மாட்டுச்சாணத்தை கல்லறை ஷேப்பில் மனைவியின் உடல் முழுக்க பூசியதுதான் அடுத்த
அதிர்ச்சி. விளைவு, விஷம் தலைக்கேறி நுரைதள்ளி
மனைவி கணவரின் கண்முன்னே இறந்துபோனார். யோகியின் ஆசிர்வாத பூமியிலா
இப்படி ஒரு விபரீதம்?
3
உலகம் சுற்றும்
பொடிசுகளின் படகு!
ஸ்காட்லாந்தைச்
சேர்ந்த சகோதரர்களின் பொம்மைப் படகு உலகைச்சுற்றி வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆலி ஃபெர்குஷன்,
ஹாரி என்ற இரு சிறுவர்கள் கடந்தாண்டு மேமாதம் தங்களின் சிறுபடகை கடலில்
செலுத்தினர். ஸ்காட்லாந்திலிருந்து டென்மார்க் வரை மூழ்காமல்
சுற்றிவந்த பாலியஸ்டரில் உருவான படகை பலரும் இணையத்தில் ஆச்சரியத்துடன் பின்தொடர்ந்தனர்.
அட்வென்ச்சர் என
பெயரிடப்பட்டுள்ள இப்படகில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மூலம் இதன் பயணத்தை இணையத்தின்
வழியாக பார்க்கமுடியும்.
மேலும் சிறுவர்களின் பெற்றோர் இதற்காக ஃபேஸ்புக் பக்கத்தையும் தொடங்கி
அதகளப்படுத்தியுள்ளனர். தற்போது பகாமா அருகில் பொம்மை படகான அட்வென்ச்சரின்
பயணம் சிக்னல் கிடைக்காமல் முடிவுக்கு வந்துள்ளது. அட்வென்ச்சர்
சுட்டிகள்!
4
கரடியுடன் கடைசி
செல்ஃபீ!
மதுவும், சிகரெட்டும்
மட்டுமல்ல செல்ஃபீயும் உயிரைக்குடிக்கும் என தியேட்டர்களில் இனி வார்னிங் போடவேண்டியதுதான்
பாக்கி. யூத்துகளிடையே அதிகரிக்கும் செல்ஃபீ தாகம் அப்படி.
ஒடிஷாவைச் சேர்ந்த
பிரபு பத்தாரா,
பாபதஹண்டி என்ற நகருக்கு தன் நண்பர்களுடன் ஜாலி சவாரி சென்றுவிட்டு தன்
காரில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் காயம்பட்ட
கரடி நின்றுகொண்டிருப்பதைப் எதேச்சையாக பார்த்துவிட்டார்
பிரபு. செல்ஃபீ வெறியரான பிரபு, கரடியின்
ஃபிளாஷ்பேக் பற்றி அறியாமல் அருகில் சென்று செல்ஃபீ எடுத்தார். கரடி கொலைவெறியில் பிரபுவை குதறி எடுக்க, நண்பர்கள் அதனை
வீடியோ எடுத்தனரே ஒழிய காப்பாற்ற வரவில்லை. அங்கு வந்த தெருநாய்
ஒன்று மட்டுமே பிரபுவைக் காப்பாற்ற போராடினாலும் நோ யூஸ். குற்றுயிராக
கிடந்த பிரபுவை தூக்கியபடி பத்து கி.மீ தொலைவிலிருந்த வனத்துறை
அலுவலகம் சென்று சேர்வதற்கு முன்பே உயிர்பிரிந்துவிட்டது. செல்ஃபீ
உயிரையும் குடிக்கும்!