மேக் இன் இந்தியா, மேட் இன் அல்வா!
போணியாகாத வாழை!
ஒண்டிப்பூர் சின்னத்தம்பி வீட்டுத்தோட்டத்தில் ஆசையாக வாழைக்கன்றை நட்டு வளர்த்தார். பக்கத்து தோட்டக்காரரின் நீர், உரம் என பாகுபாடின்றி பயன்படுத்தி வாழையை வாடிவிடாமல் வளர்த்தார்.
ஆனால் பழம் கனிந்து வாழைத்தாரை வெட்டினார். பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் ரேஷன்கார்டில் தன் பெயருக்கு அடுத்தபடியாக உள்ள மனைவி, குழந்தைகளுக்கும் கொடுத்தாலும் யாரும் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பவில்லை. அதிர்ச்சியாகி பழத்தை என்ன செய்வது என திணறிப்போனார் சின்னத்தம்பி.
வியாபாரிகள் பழத்தை வேண்டாம் என்றால் கூட சின்னத்தம்பி ஒத்துக்கொள்வார். புளிச்ச புண்ணாக்கு நீரைக் குடித்துவந்த தன் மாடுகள் கூட பழத்தை வேண்டாம் என்று புறக்கணித்து ஓடியதை சின்னத்தம்பியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
என்ன காரணம்? ஏனென்றால் பலரது வீட்டிலும் வாழை ஏராளமாக விளைந்திருந்ததுதான் காரணம். வீட்டிலேயே கொள்ளையாய் வாழைப்பழம் இருக்கு்ம்போது அதனை பக்கத்து வீட்டில் ஏன் வாங்கி சாப்பிடவேண்டும்? உடனே வாழ்நாளில் முதல்முறையாக தீவிரமாய் யோசனையில் ஆழ்ந்தார். தெளிவு பெற்றவராக பின் தன் தோட்டத்திற்கு ரீஎன்ட்ரி கொடுத்தவர், வாழையை பயிரிட ஆரம்பித்தார்.
அறுவடை செய்த வாழைப்பழங்களை சாப்பிட தொந்தரவு செய்வார் என்று நினைத்த சின்னத்தம்பியின் குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டு நண்டுசிண்டுகள், வியாபாரிகள் அனைவருக்கும் ஆச்சரியம். ஏன்? யாரையும் சம்பிரதாயத்திற்கு கூட பழம் சாப்பிடச்சொல்லவில்லை சின்னத்தம்பி. அத்தனை பழங்களையும் எங்கோ கொண்டு சென்றார். அத்தனை பேர் மனதிலும் ஒரே கேள்வி. சின்னத்தம்பி அந்த பழங்களை எங்கே கொண்டு செல்கிறார்?
பக்கத்து வீட்டு பழனிச்சாமி வீட்டில் பூஜை. ஐயர் என்ன செய்வார்? சாப்பிட சாரி பூஜைக்கு பழம் கேட்பார் இல்லையா? 108 பழங்கள். பழனிச்சாமி தயங்கி தயங்கி சின்னத்தம்பியிடம் 108 பழம் வேணுமே சின்னத்தம்பி? என கேட்டார். பூஜையில் போய் உட்காருங்க, பழத்தை வெட்டிக்கிட்டு வர்றேன் என்று சிம்பிளாக சொன்னார் சின்னத்தம்பி.
பூஜையும் தொடங்கியது. ஐயர் தீவிரமாய் மந்திரங்களை முழங்க வாழைப்பழங்களை சாமிக்கு படைக்கும் நேரம் நெருங்கியது. பைனாகுலர் வைத்து பார்த்தாலும் சின்னத்தம்பி வருவதாக தெரியவில்லை. பதறிப்போனார் பழனிச்சாமி. திடீரென என்ட்ரியான சின்னத்தம்பி தோளில் போட்டிருந்த பையைப் பிரித்தார்.
வாழை இலையில் பேக் செய்த ஐட்டத்தை அங்கு பரப்ப ஆரம்பித்தார். வாழைப்பழம் ஆக்சிடெண்டில் நசிக்கி ஷேப் மாறிடுச்சா? ஊர் மக்கள் திகைத்தனர். அப்போது ஊர்க்காரர் பாக்கெட்டை எடுத்து படித்தார். வாழை அல்வா, சின்னத்தம்பி பண்ணை தயாரிப்பு என எழுதியிருந்தது. "மொத்தம் 27 பாக்கெட்டு. ஒரு பாக்கெட்டுக்கு நாலு பழம் கணக்கு போட்டுக்குங்க. சரியா இருக்கா? " என்ற சின்னத்தம்பியை ஊர் ஒரு செகண்ட் ஆச்சரியமாக பார்த்து பின் வயிறுவலிக்க சிரிக்க தொடங்கியது.
தன் பழத்தை சாப்பிடாத ஊர்மக்களை பற்றி கவலைப்படாத ஒண்டிப்பூர் சின்னத்தம்பி உலகிற்கே வாழை அல்வா கொடுத்து வருகிறார். அதாவது பிசினஸ் செய்து வருகிறார். மேக் இன் இந்தியா, மேட் இன் அல்வா!
குறிப்பு: திருச்சியில் 1200 வாழை வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான மினரல்களை தன்னுள் கொண்டது வாழைப்பழம். தற்போது 120 வாழை வெரைட்டிகள் இந்தியாவில் விளைகின்றன.
நன்றி: https://storyweaver.org.in/
கதை - Rohini Nilekani
ஓவியம் - Angie & Upesh