"இணையம் திறமையான எழுத்தாளர்களுக்கான களம்" நேர்காணல்!
முத்தாரம் நேர்காணல்
அனுபமா
கிருஷ்ணகுமார், வாணி விஸ்வநாதன்,
ஸ்பார்க் இதழ்.
தமிழில்: ச.அன்பரசு
அனுபமா, வாணி ஆகிய இருவரும் இணையத்தில் தொடங்கிய ஸ்பார்க் இதழ், நூறு இதழ்களை எட்டியுள்ளது. விளம்பரம், சந்தா இன்றி இயங்கும் ஸ்பார்க் இதழ் நூறு இதழ்களை எட்டுவது சாதனைதானே.
இதழ் பற்றி உரையாடுகிறார்கள் அனுபமாவும்,
வாணியும்.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஸ்பார்க் இதழில் நூறாவது இதழைக் கொண்டு வந்துவிட்டீர்கள். எப்படி?
மிகச்சிறப்பான ஸ்பெஷல் தருணம் இது.
2010 ஆம் ஆண்டு ஸ்பார்க் இதழைத் தொடங்கும்போது இதனை நினைத்தே பார்க்கவில்லை. எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோரின் பங்களிப்பினால் இது சாத்தியமானது. சிறந்த எழுத்தை மக்களுக்கு சுவையான முறையில் அளிக்கவேண்டும் என்ற முயற்சி சிறிதேனும் ஈடேறியிருப்பதில் எங்களுக்கு பெருமைதான்.
வணிக ஆதாயமற்ற இலக்கிய இதழை உங்களின் தனிப்பட்ட வேலைகளைக் கடந்து உருவாக்கியிருக்கிறீர்களே?
அனுபமா:நானும் வாணியும் பணிகளை பிரித்துக்கொண்டு செய்ததால் ஸ்பார்க் தடையின்றி நடைபோட முடிந்தது.
சிலசமயங்களில் குழந்தைகளோடு நேரம் செலவழிக்கும்போது வாணி ஸ்பார்க் இதழின் வேலைகளை பார்த்துக்கொள்வார். அதேபோல்தான் நானும்.
வாணி: நாங்கள் ஸ்பார்க்கை தொடங்கியபோது அனுபமாவுக்கு குழந்தை பிறந்திருந்தது; நான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தேன்.
பின் டெல்லிக்கு வந்து தற்போது இரண்டு கம்பெனிகளில் வேலைபார்த்தபடி ஸ்பார்க்கை கவனித்து வருகிறேன்.
பயணம், வேலை என
அனைத்தும் இயல்பாவது அனுபமாவின் அனுசரணையால்தான்.
பரந்தளவிலான எழுத்தாளர்களை ஸ்பார்க் இதழில் எழுத வைக்கும் ஐடியாவை எப்படி பிடித்தீர்கள்?
ஒவ்வொரு
மாதமும் குறிப்பிட்ட தீமில் ஸ்பார்க்கை உருவாக்குவது என
தீர்மானித்தபின் கட்டுரை, கவிதை ஆகியவற்றை எழுதும் எழுத்தாளர்களிடம் பேசினோம்.
ஆங்கிலத்தின் இலக்கணம் குளறுபடி, செக்குமாடு பார்வை, வறுமை என
ஜவ்வாக இழுத்து சுற்றிவந்தால் உடனே அவற்றை தூக்கிவீசிவிடுவோம். நிறைய எழுத்தாளர்களின் கட்டுரைகள் எந்த திருத்தமும் தேவைப்படாமலும் பிரசுரமாகியுள்ளது.
ஸ்பார்க் அதிவேகமாக வளர அவசியமில்லை, பலரும் அதனை விமர்சிக்கும்படியான வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை என்று ஒருமுறை கூறியிருந்தீர்களே?
இதழ் இயல்பாக
நிதானமாக வளரவேண்டும் என்பதால்தான் அப்படி கூறினோம். எங்கள்
வேலையினூடே செய்த இதழ்ப்பணியிலும் ஸ்பார்க் நூறாவது இதழ் என்ற கோட்டைத் தொட்டதற்கு
எங்களின் பேராசையில்லாத நோக்கமும் முக்கியக்காரணம். இமாலய
நோக்கங்களை விதிக்காமல் ஜாலியாகவும் புதுமைத்திறனோடும் பணியாற்றுவது மட்டுமே
எங்களது லட்சியம்.
இணைய இதழை
நடத்துவதில் உள்ள சிரமங்கள், இதன் பாத்திரம் பற்றி
கூறுங்களேன்.
புதுமைத்திறன்
கொண்ட படைப்பாளுமைகளுக்கு இணையம், மிகச்சிறந்த களம்.
மைய
ஊடகங்களின் வெளிச்சம் படாத அற்புதமான எழுத்தாளர்கள் இணையத்தில் ஏராளமாக உள்ளனர்.
புதிய
எழுத்தாளர்கள் உடனுக்குடன் தங்கள் எழுத்துக்களைக் குறித்த எதிர்வினைகளை அறிய
முடிவதோடு, உண்மையான பிரச்னைகளைக் குறித்து இணைய இதழ்கள்
நேர்த்தியாக செய்தி வெளியிடுகின்றன எ.கா வடகிழக்கு
மாநிலங்கள், தலித்துகளின் பிரச்னைகள். மற்றபடி இணைய
இதழை தரமாக கொண்டுவருவது அடுத்த நெருக்கடி. நிறைய
கட்டுரைகள் வந்தாலும் அவற்றைத் தேர்ந்தெடுத்த பிரசுரிக்க கிடைக்கும் நேரம் மிக
குறைவு. எழுத்துக்களை பட்டை தீட்டி தொகுத்து,
புதிய
கருத்துக்களை இணையத்தில் தேடி அடைவது அடுத்த வேலை. எங்களுடைய
கவனத்தையும் மீறி வரும் எழுத்துப்பிழைகள், சரியாக
உள்வாங்கப்படாத வாசகர்களின் எதிர்வினை என பேச நிறையவே இருக்கிறது.