காந்தி கோழையா?- கோமாளியா?
அன்புள்ள புல்புல்சுனில் கிருஷ்ணன்யாவரும் பதிப்பகம்விலை ரூ. 200
நவீனத்தில் காந்தியைப் பற்றிய என்ன கருத்துகள் இளைஞர்களிடம் உள்ளன? கோழை, அம்பேத்கரை ஏமாற்றியவர், பனியா ஜாதிக்கேற்ற தந்திரபுத்தியுடன் நூல் நூற்றலை வணிகமாக்கியவர், பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர், வீரமில்லாத தந்திரவாதி, உண்ணாவிரத ஏமாற்றுக்காரர், பாகிஸ்தான் ஆதரவாளர், இந்து விரோதி என்பதுதான். அல்லது இதில் சில கருத்துக்கள் மட்டும். இவை அனைத்துக்கும் ஆழமான முறையில் பதில் சொல்லும் நூலாக வெளிவந்துள்ளது சுனில் கிருஷ்ணனின் அன்புள்ள புல்புல்.
அன்புள்ள புல் புல் வித்தியாசமான தலைப்பு. நூலில் காந்தியின் நகைச்சுவை குணத்தை வாசகர்களிடம் பதிவு செய்யும் பகுதியும் கூட. நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன.இவை ஒவ்வொன்றும் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தபின் இங்கு வாழ்ந்த 33 ஆண்டுகளில் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அவரின் பார்வையையும், அவரின் கூடவே இருந்த பத்திரிகையாளர்களின் கருத்தையும் பதிவு செய்கிறது.
நூலின் சிறப்பு, அகிம்சை போராட்டத்தை காலத்திற்ப மாற்றும் தேவை, அப்படி மாற்றி வென்ற நாடுகள், அதில் தோற்றுப்போன நாடுகளின் பிரச்னை, அகிம்சை போராட்டம் இந்தியாவில் வெல்வதற்கு அன்றைய காலத்தில் உதவியாக நின்ற விஷயங்கள் என்ற சம்ரசமற்ற பார்வையை முக்கியமாக கூறலாம்.
பாகிஸ்தானுக்கு உண்ணாவிரதமிருந்து காந்தி பெற்றுத்தந்த 55 கோடி, பகத்சிங்கின் தண்டனையை ரத்து செய்யக்கோரி காந்தி காங்கிரஸ் மாநாட்டைக்கூட தள்ளி வைத்து பேச்சுவார்தை நடந்த வைஸ்ராயிடம் அலைந்தது, போலீசின் வன்முறையை விளக்கி தன்னுடைய அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மக்களை அனுமதித்தது, படேல் - காந்தி உறவு, மனவருத்தங்கள், பிரிவினையில் காந்தி கற்கும் எதார்த்த பாடங்கள் என பாடநூல்களில் காந்தி என்பவரை கடவுளாக வைத்து பார்த்த விஷயங்களை கடந்து விமர்சனரீதியாக அவரை அணுகி பார்த்த விதம் நூலினை சுவாரசியமாக்குகிறது.
காந்தி நமக்கு ஏன் குற்றவுணர்வை தூண்டுகிறார்? அவரை சராசரியாக்க பலரும் துடிப்பது ஏன் என்ற சுனில் கிருஷ்ணனின் பதில் அபாரமானது. ஏனெனில் அதற்கு சிலமணிநேரங்கள் முன்பு ்என் நண்பர் காந்தியின் நிர்வாணமாக பெண்களின் நடுவே படுத்துறங்கும் சோதனையை ஏளனத்துடன் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார். நல்லதை விட அல்லதை நம் மனம் எளிதில் ஏற்பதை காந்தியின் பக்குவதில் என்னால் பார்க்கமுடியவில்லை. இதனால்தான் காந்தி ரூபாய் நோட்டில் மட்டுமல்ல காலம்தோறும் கண்ணில் தென்ப்டும் காந்தியர்களின் வழியாக நம் மனதில் அறவுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்.
ஷீன் ஷார்ப், மில்லி போலக், அசப் அலி, நேரு பலரும் காந்தியைப் பற்றிய தங்களது அனுபவத்தை தங்கள் கைப்பட எழுதியுள்ளனர். இதனை அந்த சூழலை மனதில் வைத்து படிப்பது முக்கியம். மற்றபடி காந்தியை புனிதர், மகாத்மா என அணுகாமல் விமர்சனநோக்கில் அணுகி ஆராயும் தன்மையில் சுனில் கிருஷ்ணனின் இந்த நூல் பாரட்டத்தக்கது. விவாதிப்பதற்கான களத்தை தனது வலைதளம் மூலம் உருவாக்கியவர் , நூல் மூலம் பரந்துபட்ட தளத்திற்கு செல்ல விழைவதையும் வரவேற்கலாம்.
- ச.அன்பரசு
நன்றி: இரா.முருகானந்தம், தாராபுரம்