தாதா- போலீஸ் - புதிர் ஆட்டம்(Sacred Games)
சேகரெட் கேம்ஸ் - போலீஸ் - தாதாவின் புதிர் கண்டுபிடிக்கும் விளையாட்டு.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்ட கணேஷ் கைடோண்டே என்ற தாதா போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்தாஜ் சிங்கிற்கு போன் செய்து மும்பை 25 நாட்களில் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என எச்சரிக்கிறார். அவரை பின்தொடர்ந்து கைது செய்ய முயற்சிக்கிறார் சா்தாஜ். ஆனால் அம்முயற்சியில் தாதா கணேஷ் கைடோண்டேவின் உடலை மட்டுமே பார்க்க முடிகிறது. கணேஷ் கூறிய வார்த்தைகளை நம்பி புலனாய்வில் இறங்கிய சர்தாருக்கு நினைத்து பார்க்க முடியாத அனுபவங்கள் நிகழ்கிறது. இறுதியில் அவர் மும்பையை சீரழிவிலிருந்து காப்பாற்றினாரா என்பதே முதல் சீசன்(எட்டு எபிசோடுகள்) கதை.
விக்ரம் சந்திரா எழுதிய 947 பக்க நாவல் வெப் சீரியசாக மாறியிருக்கிறது. முழுக்க சீரியஸ்தான். ஆனால் இதில் ரிலாக்ஸ் என்றால் கணேஷின் திருநங்கை காதலி குக்கூ(குப்ரா சைத்), மனைவி சுபத்ரா(ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே), சர்தாரின் கான்ஸ்டபிள் கடேகர்(ஜிதேந்திர ஜோஷி) மனைவி ஆகிய கதாபாத்திரங்கள். மற்றபடி சென்சார் இல்லையென்பதால் வெட்டுகுத்து, பாலுறவு காட்சிகள், ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவின் செக்ஸ் காட்சிகள், காதைப் பொசுக்கும் ஆயிரம் கெட்ட வார்த்தைகள் என அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானே இயக்கத்தில் சுவாரசியமாக உருவாகியிருக்கிறது வெப் சீரிஸ்.
சர்தாஜ் சிங் கணேஷின் தற்கொலையை அடுத்து அவர் வழக்கை துப்பு துலக்க ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவரின் உயரதிகாரியான டிசிபி நீரஜ் கபி, சுலைமான் ஐசா குழுவிடம் லஞ்சம் வாங்கியதால் சர்தாஜ் சிங்கை எப்படியாவது தடுத்து விட முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். இடையில் ராவிலிருந்து ராதிகா ஆப்தே சர்தாஜின் விசாரணையில் இணைகிறார். இவரையும் டெஸ்க் ஜாப்பில் பிணைத்து வைக்க அவரின் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் வழக்கை விசாரிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் சாட்சிகள் கொல்லப்படுவது வரை நீள்கின்றன.
இதில் குணநலன்களை கண்டுபிடிக்கவே முடியாத கதாபாத்திரங்கள் என்றால் கணேஷ் கைடோண்டேவின் குழுவிலிருந்து தனி டானாக உயரும் சாடிஸ்ட் பண்டியை(ஜதின் சர்னா) குறிப்பிடலாம். தாதா - போலீஸ் மோதல் அனைத்தும் ராஜீவ்காந்தி பதவியேற்கும் காலம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை தொடர்கிறது.
சீரிசில் வரும் கதாபாத்திரங்களை விளக்கும் காட்சிகளில் கணேஷ் கைடோண்டே அறிமுக காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. சைவ உணவகத்தில் கோழி இறைச்சியை சாப்பாட்டில் ஒளித்து வைக்கும் நிதானமான வஞ்சகம் பார்வையாளர்களை நடுங்க வைக்கிறது. இது ஒரு சாம்பிள்தான். இதேபோல திருமணத்தன்று திருமணத்திற்கு வரும் சேட்டு குடும்பத்தை சுலைமான் குழு போட்டுத்தள்ள அதற்கு காரணமானவர்களை கணேஷ் நிதானமாக கொன்றுபோட்டுவிட்டு மனைவி ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவுடன் பாலுறவு கொள்ளும் காட்சி.
சர்தாஜ் சிங்கிற்கு மேலதிகாரிகள்(பாருல்கர்) அவர்களின் ஊழலுக்கு துணையாக காட்டிக்கொடுக்காமல் இருக்க நிர்பந்திக்கிறார்கள். மனித உரிமை கமிஷன் முன்பு பொய் சொன்னால்தான் அவர் வேலை பிழைக்கும் என்ற சூழ்நிலை நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்தால் கான்ஸ்டபிள், சக இன்ஸ்பெக்டர் என அனைவரிடமும் அவமானப்பட்டு அடிபடும் நிலையில் அவர் தடுமாறுவதை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் வருபவர்களெல்லாம் சர்தாஜை வாங்கிப்போட்டு குத்துவது ஹீரோ கெத்தை சிதைக்கிறது. பத்து அடிக்கும் ஒரு அடினாலும் வைங்க ஆபீசர்!
தெருவில் பிச்சைக்காரராக இருந்து தாதாவாக மாறும் கணேஷின் கதைதான் இது. அதனால் ஹீரோ நவாசுதீன் சித்திக் என்பதை மனதில் கொண்டால் சர்தாஜ் சிங்கான சயீப் அலிகான் உதைபடுவது உங்களுக்கு வருத்தம் தராது. ஆனால் அவரின் கான்ஸ்டபிள் கடேகர் கழுத்தறுபட்டு இறப்பது துக்கத்தை தருகிறது. கொஞ்சம் ஆக்டிவாக செயல்பட்ட ஸ்கோர் செய்பவர் இவர்தான். மிஸ்ஸிங் கேஸ் புகார் கொடுக்க இஸ்லாம் பெண் காத்திருக்க, கதவை சாத்திவிட்டு சாப்பிடுவது பின் மனசு கேட்காமல் அவரின் புகாரை வாங்கிக்கொண்டு விசாரிப்பது, மனைவியிடம் விசாரணை, பாலுறவின் போது சர்தாஜின் அழைப்பு வருவது இவரின் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைப்பவை.
இதோடு இந்தியாவை துண்டாடும் வில்லன் லுக் கென்னி, திகிலூட்டுகிறார். இறுதி எபிசோடில் ராதிகா ஆப்தேவை போட்டுத்தள்ளி சர்தாஜின் கட்டைவிரலை வெட்டி விட்டு மணிக்கட்டை வெட்ட கோடாரி ஓங்கும் போது முதுகுத்தண்ணில் மின்னல் வெட்டுகிறது. குலதெய்வ புண்ணியத்தில் சர்தாஜ்சிங் பிழைத்தார். பின்ன அடுத்த சீசனை பார்க்கவேண்டாமா?
தைரியமாக நினைத்ததை கட் போடாமல் எடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். நாவலை திரைப்படமாக மாற்ற தேவையான கேரக்டர்களை எடுத்து திரைவடிவம் செய்ய வருண் குரோவர், ஸ்மிதா சிங், வசந்த் நாத் ஆகியோரின் உழைப்பு உதவியிருக்கிறது. கதை சில இடங்களில் வேகமெடுக்காமல் சோதிக்கிறது. 25 நாட்கள் இருக்கின்றன என்றால் சர்தாஜ்சிங் எப்படி பரபரக்கவேண்டும்? பொங்கல் சாப்பிட்டுவிட்டு காபி சாப்பிட செல்வோமே அந்த வேகம் கூட சயீப்புக்கு வரமாட்டேன்கிறது. சோகம்.
மொத்தத்தில் இந்த சீசனில் ஸ்கோர் செய்பவர்கள் நவாசுதீன் சித்திக், ஜிதேந்திர ஜோஷி, ஜதின் சர்னா, குக்கூ ஆகிய கதாபாத்திரங்களே. கதை மிக மெதுவாக நகருவதால் சர்தாஜ்சிங் கதாபாத்திரம் தூங்கி வழிகிறது. காட்சிகள் எந்த ஆர்வத்தையும் தூண்டாதது பெரும் பாதகம். அடுத்த சீசனை சிறிதேனும் கியரை போட்டு வேகமெடுக்க வைத்தால் வெப் சீரிஸை இணையத்தில் தரவிறக்கியேனும் பார்க்க வாய்ப்புள்ளது.
-கோமாளிமேடை டீம்