அம்பேத்கருக்கு எதிராக உண்ணாவிரதம்!
வரலாற்று சிறப்புமிக்க உண்ணாவிரதம்!
தண்டி யாத்திரைக்காக 1931 ஆம் ஆண்டு மே 5 அன்று காந்தியை ஆங்கிலேய அரசு கைது செய்தது. காங்கிரஸை எப்படியாவது ஒடுக்கவேண்டும் என ஆங்கிலேய அரசு முயற்சித்து வந்தது. அதேசமயம் காந்தியின் தலைமை இல்லாமலேயே சட்டமறுப்பு இயக்கம் வென்றது காந்தியை பதற்றத்துள்ளாக்கியிருந்தது. பதட்டம் வெற்றிக்காக அல்ல; ஆங்கிலேய அரசு பிரிக்கும் தந்திரத்தை பயன்படுத்தி தொண்டர்களை முடக்கிவிடும் என்பதற்காக.
சரோஜினி நாயுடு, இமாம் சாஹிப், மணிலால் ஆகியோரின் பின்னணியில் 2500 சத்யாகிரகிகள் சேர்ந்து பேரணியாக சென்றபோது 400 போலீஸ்காரர்கள் லத்தியால் அத்தனை பேர்களையும் அடித்து நொறுக்கினர்.
பாம்பேயின் வடாலாவிலுள்ள உப்பு தொழிற்சாலையில் 40 ஆயிரம் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து உப்பை கையில் எடுத்தனர். போலீஸ் தயங்கவேயில்லை. துப்பாக்கியால் சுட்டதில் 111 பேர் இறந்துபோயினர். ஏறத்தாழ ஆங்கிலேயர்கள் பிரிக்கும் அரசியலில் அன்றைய சூழலில் வென்றிருந்தனர். முஸ்லீம்கள் சட்டமறுப்பு இயக்கத்திலிருந்து வெகுதூரம் விலகியிருந்தது எர்வாடா சிறையிலிருந்த காந்தியை பெரிதும் வருத்தியது.
ஆங்கிலேயர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி செய்யும் பிளவு இன்னும் ஆழமாக இருக்கும் என காந்தி நினைத்ததைப்போலவே சைமன் கமிஷனின் அறிக்கை வெளிவந்திருந்தது. பல்வேறு சட்டங்களை சீர்திருத்தி அறிக்கை வெளியானது. லண்டன் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட், அறிக்கையை மேம்படுத்த ஆலோசனைகளை கேட்க மோதிலால் நேரு, நேருவை சிறைக்கு அனுப்பிவைத்தார்.
"இந்தியாவுக்கு தேவை பூரண சுதந்திரம் மட்டும்தான் " என காந்தி உறுதியாக சைமன் கமிஷனின் பரிந்துரையை மறுத்துவிட்டார். 58 தலைவர்கள், பதினாறு பிரதிநிதிகள் என மூன்று மாதம் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.
1931 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று பிரதமர் ராம்சே, முஸ்லீம்களுகுக தனி தொகுதி வழங்குகிறோம் என ஒப்புக்கொண்டார். அப்போது கவர்னர் காங்கிரஸ் கட்சி மீதான தடையை விலக்கிக்கொள்ள காங்கிரஸ் செயல்படத் தொடங்கியது. ஜனவரி 26 அன்று காந்தியுடன் பிற காங்கிரஸ் தலைவர்களும் விடுதலையானார்கள்.
அப்போது வரலாற்று சிறப்புமிக்க காந்தி -இர்வின் ஒப்பந்தத்தால் மக்களை விடுதலை உணர்வில் வீழ்த்திய சட்டமறுப்பு இயக்கம் முடிவுக்கு வந்தது. காங்கிரஸை முக்கியமான இயக்கமாக ஆங்கிலேய அரசு கருதியது இந்த சூழலில்தான். 1931 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று, காங்கிரசின் லட்சியம் சுதந்திரத்தை பெறுவதே என தீர்மானமாக அறிவித்தார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்கு காந்தியின் ஒப்புதல் இல்லாமல் காங்கிரஸ் பிரதிநிதியாக ஆங்கிலேய அரசு பெயரை சேர்த்துவிட்டது. மாநாட்டில் பங்கேற்றாலும் காந்தியின் உடல்மொழி, அவருக்கு அங்கிருப்பது சங்கடமாக இருப்பதை கூறியது. புகைப்படம் எடுக்கும்போது கூட வேறுபக்கம் பார்த்தபடி இறுக்கமாக இருந்தார் காந்தி.
பின்னர் சிலநாட்களில் இந்தியா திரும்பியவரை மூர்க்கமாக போலீஸ் கைது செய்ய கவர்னர் வில்லிங்டன் காரணமாக இருந்தார். மீண்டும் காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டதோடு, நாட்டில் இயங்கி வந்த 131 பத்திரிகைகளும் மூடப்பட்டன. உடனே தலித்துகளுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட அறிவிப்பை ஆங்கிலேய அரசு அறிவித்துவிட்டது.
இந்து மதத்திலிருந்து தீண்டாமை விலக்கி விட முடியும் என்று காந்தி கூறியதை அவரது கட்சிக்காரர்களே புறக்கணித்தனர். கடவுளின் குழந்தைகள் என்ற பொருளில் ஹரிஜன் என்ற சொல்லை தலித்துகளை குறிப்பிட பயன்படுத்தினார் காந்தி. ஹரிஜன மக்களுடன் சமபந்தி உணவுண்பது உள்ளிட்ட அன்றைய புரட்சி நடவடிக்கைகளை தைரியமாக செய்த ஒரே தலைவர் காந்தி மட்டுமே. அப்போது இங்கிலாந்து பிரதமருக்கு காந்தி எழுதிய கடிதத்தில், அரசு இந்து மதத்தை அழிக்க விஷத்தை செலுத்துகிறது என்று சுட்டிக்காட்டினார்.
செப்.20 அன்று காந்தி உண்ணாநோன்பை தொடங்க பல லட்சம் மக்கள் அவரை பின்தொடர்ந்து நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். இதனால் தலித்துகளுக்கான தனி தொகுதிகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அம்பேத்கர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். சில நாட்களுக்கு பிறகு பி.ஆர். அம்பேத்கரும் , மதன்மோகன் மாளவியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோடு பூனா ஒப்பந்தம் புனா மத்திய சிறையில் கையெழுத்தானது. அச்சமயம் திடீர் அதிசயமாக இந்து கோவில்கள் தீண்டத்தகாதவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டன. ஆனால் இந்த ஒப்பந்தம் பிரிவினைக்கு அழைத்து சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடலை ஆயுதமாக வைத்து காந்தி வென்ற வரலாற்றுத்தருணம் இது. ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு நாட்களுக்கு பிறகு ஹரிஜன் சேவா சங்கத்தை காந்தி தொடங்கினார். இதற்கு ஆதரவான ஹரிஜன் என்ற வார இதழையும் நடத்தினார் காந்தி. வரலாற்றில் இந்த தருணத்தை தலித் ஆய்வளார்கள் பலகோணங்களில் அலசலாம். காந்தி மகாத்மாவாக மட்டும் இருக்கவில்லை. பலவீனங்கள் நிறைந்த மனிதராகவும் இருந்தார் என்பதையும் அவரின் முடிவுகளை பரிசீலிக்கும்போது கவனத்தில் கொள்வது அவசியம்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: அஸ்வின் நந்தகுமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்