போதைக்கடவுள் பிறந்துவிட்டார்!
மெக்சிகோவின் போதை ராஜா!
பிடிக்கவே முடியாது. டஜன் கணக்கிலான ஆபரேஷன்கள்
தோற்றுப்போக, இறுதியில் அமெரிக்க உளவுத்துறையும் மெக்சிகோ ராணுவமும் விரக்தியும் ஆயாசமுமாக
கூறிய வார்த்தை இது. மெக்சிகோவின் ராட்சஷ கார்டெலான சினாவாலாவின் நிழல் தலைவரான குஷ்மனை
பிடிப்பது அமெரிக்காவின் போதை ஒழிப்புத்துறைக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.
2014 ஆம் ஆண்டு மெக்சிகோ அதிபர் என்ரிக் பேனா, குஷ்மனை
தந்திரமாக காவல்துறை மூலம் வளைத்துபிடிக்கும் வரை முழு உலகமும் பாராவின் முதல் வார்த்தையை
மட்டுமே வலுவாக நம்பியது. ஒருமுறை அல்ல இருமுறை சிறையிலிருந்து தப்பித்த குஷ்மன் இம்முறை
நியூயார்க் சிறையில் 14 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில்
தூண்டில் மீனாக மாட்டிக்கொண்டு விட்டார்.
வறுமையில் போதைக்கடவுள்!
அமெரிக்காவுக்கும் மெக்சிகோ காவல்துறைக்கும் பல்லாண்டுகளாக
கட்டைவிரலைக் கொடுத்து போதை பிஸினஸை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தொழிலதிபர்
ஜோக்குயின் எல் சாபோ குஷ்மன். 1957 ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் சியரா மாத்ரே மலைத்தொடர்
சூழ்ந்த லா துனா கிராமத்தில் பிறந்தார். சூரியன் இல்லாதபோது இருள் சூழும் ஊரில் உணவு,
குடிநீர், போக்குவரத்து வாகனமான கழுதை என அனைத்துமே பிரச்னைதான். போதாக்குறைக்கு குஷ்மனின்
தாய்க்கு அவரோடு சேர்த்து பத்து பிள்ளைகள். பாறைகளுக்கிடையே விதைத்த பீன்ஸ் மற்றும்
சோளம் ஆகியவற்றைக் சாப்பிடக்கொடுத்தே குஷ்மன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்தார் தாய் கன்சுலோ
லோரா. அப்போதே வறுமையை சமாளிக்க ஆரஞ்சு பழங்களை விற்கத்தொடங்கிவிட்டார் குஷ்மன்.
1972
ஆம் ஆண்டு பதினைந்து வயதில் கார்டெலில் வேலைக்கு சேர்ந்த குஷ்மன், படிப்படியாக தொழிலில்
ஆக்ரோஷம் காட்டி முன்னேறியவர் இன்று சினாவாலா கார்டெலின் தலைவர். மெக்ஸிகோ அரசு இருமுறை
கைது செய்தும் கரன்சி மூலம் சிறைகளிலிருந்து நைஸாக தப்பிய குஷ்மன், அமெரிக்காவில் நடத்திய
போதை ராஜாங்கத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள். படுகொலைகள், போட்டி கார்டெல்களை
கொன்று புதைப்பது, அரசு, காவல்துறை அதிகாரிகளை விலைக்கு வாங்குவது, லஞ்சங்களால் தொழிலை
அப்டேட் செய்வது என பல விஷயங்களில் கொலம்பிய போதை அரசர் பாப்லோ எஸ்கோபாரை நினைவுபடுத்தும்
அச்சு அசல் ஜெராக்ஸ் காப்பி குஷ்மன்.
இரண்டாம் காட்ஃபாதர்!
முப்பது ஆண்டுகளாக குஷ்மன் ஆடிய ஆட்டம் இன்று சிஐஏவின்
56 பக்க குற்றப்பத்திரிகையில் அச்சிடப்பட்டுவிட்டது. ஆறு மெக்ஸிகோ அதிபர்களை தன்
61 ஆண்டு கார்டெல் லைஃபில் அசகாயமாக சமாளித்த குஷ்மனுக்கு நியூயார்க்கின் ப்ரூக்ளினில்
விரைவில் கறார் விசாரணை தொடங்கும். அமெரிக்காவில் கடந்தாண்டில் மட்டும் ஹெராயினுக்கு
15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சுரங்கம் மற்றும்
ரயில்வே பணிகளுக்காக வேலை செய்யவந்த சீன கூலித்தொழிலாளர்கள்
ஓபியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினர். போதை அபாயத்தை தடுக்க ஜார்ஜ் வாஷிங்டன்
1914 ஆம் ஆண்டில் ஹாரிசன் சட்டத்தை கொண்டுவந்தாலும் சுனாமியாக பாய்ந்த போதை வருமானம்
அதனை மூழ்கடித்துவிட்டது. மெக்ஸிகோவின் கோல்டன் ட்ரையாங்கிள்(சினாலாவா, சிகுவாகுவா,டுராங்கோ)
எல்லைப்பகுதியில்தான் ஓபியம் ஹெராயினாக விற்கப்படுவதற்கான
வடிவத்தை பெறுகின்றன. மெக்ஸிகோவில் கார்டெல்களின் தொழில்போட்டி, ராணுவத்துடன் சண்டை
என்ற வகையில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கடந்த பத்தாண்டுகளில் இறந்துள்ளனர்.
உலகுக்கு வில்லன் ஊருக்கு நாயகன்!
"எங்களுடைய முன்னோர்களின் கலாசாரமே கஞ்சா,
ஓபியத்தை வளர்ப்பதுதான். சிறுவயதில் வயிற்றுப்பசி தீர போதைப்பொருட்களை விற்பதை தவிர
வேறு வழி கிடையாது" என 2016 ஆம் ஆண்டு வீடியோபேட்டியில் உருக்கமாக குஷ்மன் பேசியுள்ளார்.
உலகம் என்ன சொன்னாலும் சரி. அவரின் ஊர்மக்களுக்கு சிவன், விஷ்ணு, காளி, கருப்பசாமி
எல்லாமே குஷ்மன்தான்.
அடாத வழியில் சம்பாதித்தாலும் ஷங்கர் பட நாயகன்
போல ஏழைகளுக்கு கரன்சியை அள்ளியிறைத்து வீடு, மருத்துவமனை, போக்குவரத்து ஏன் ஊர்களுக்கு
சாலையே அமைத்து கொடுத்திருக்கிறார் நம் கார்டெல் ஹீரோ. பணத்தை வாரியிறைத்தாலும் எதிரிகளையும்,
துரோகிகளையும், உளவாளிகளையும் உப்புக்கண்டம் போடுவதில் கருணையற்ற உக்கிரன். 2014 ஆம்
ஆண்டு சிடி,டிவிடி விற்றுவந்த ராபர்ட்டோ காரலெஸ் மீது குஷ்மன் டீமுக்கு டவுட் வர மின்னல்
வேகத்தில் மிஸ் ஆனார். சில ஆண்டுகளாக எந்த தகவலுமில்லை. கடந்தாண்டு கிடைத்த எலும்புகளை
ஆய்வு செய்த மெக்ஸிகோ போலீஸ் இறந்தது காரலெஸ் என உறுதிபடுத்தியுள்ளது. போர்ப்ஸ் இதழ்
குஷ்மனை பில்லியனர் லிஸ்டில் வைத்திருந்தாலும் குஷ்மன் உட்பட பலரும் அதனை மறுப்பது
புரியாத புதிர். எதிரிகளை ரத்தப்பொறியல் செய்ய பிளாஸ்டிக் சீட் போட்ட வீட்டை குஷ்மன்
செட்டப் செய்து வைத்திருந்தார் என்பது பலரையும் அதிரச்செய்த செய்தி.
வன்முறையின்
விதை!
மெக்ஸிகோவில் தொண்ணூறுகளில் கோகைன் கடத்தலில் கொட்டிய
காசு கடத்தல்காரர்களுக்கு, விவசாயிகளுக்கு, கார்டெல்காரர்களுக்கு என பரிமாறத்தொடங்க
துப்பாக்கிகளும் இடையறாமல் வெடிக்கத் தொடங்கின. 1993 ஆம் ஆண்டு குவாடலஜரா கார்டெல்
ஆள் ஒருவர் ஆர்ச்பிஷப்பை சுட்ட சம்பவத்திலிருந்து மெக்ஸிகோவின் வன்முறை வரலாறு சூடுபிடிக்கிறது.
அவ்வழக்கில் குஷ்மன் கைதுசெய்யப்பட வாழ்வில் முதல் சிறைவாசம். 2001 ஆம் ஆண்டு சிறைக்காவலர்களுக்கு
லஞ்சம் கொடுத்து எஸ்கேப்பானார் குஷ்மன்.
1.6 பில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் அமெரிக்க அரசு
பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட வசதிகளை மெக்சிகோவுக்கு கொடுத்து தேடுதலை தீவிரமாக்கியது.
அதேநேரம் எதிரியான வின்சென்ட் கேரிலோ ஃப்யூன்டெஸூடன் ஏழை இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி
மோதிவந்தார் குஷ்மன். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே மெக்ஸிகோவில் 9,500 பேர் போதைப்போரில்
பலிகொடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க போதை ஒழிப்புத்துறை(DEA) குஷ்மனை வளைத்து பிடித்து
வென்றாலும் மெக்ஸிகோவில் கார்டெல்களில் இளைஞர்களை சேராமல் அவர்களின் வாழ்வை காப்பதே
முழுவெற்றி.
போதை ராஜா பயணம்!
1980
மெக்ஸிகோவின் பிரபல குவாடலஜரா கார்டெலில் இணைந்து
போதை அரிச்சுவடியை கற்கிறார்.
1989
குவாடலஜரா கார்டெல் இரண்டாக உடைய, சினாலாவா கார்டெல்
குஷ்மனின் கைப்பிடியில் வருகிறது.
1993
ஜூன் மாதம் குவாத்திமாலா காவல்துறை குஷ்மனை கைது
செய்து மெக்ஸிகோவுக்கு அனுப்ப, 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. சிறையிலிருந்து
கார்டெலை நடத்துகிறார் குஷ்மன்.
2001
ஜனவரியில் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன்
சலவைத்துணி கூடையில் ஒளிந்து எஸ்கேப்பாகிறார் குஷ்மன்.
2014
பிப்ரவரியில் பதிமூன்று ஆண்டுகளாக தேடிவந்த குஷ்மனை
சுரங்கப்பாதை மூலம் வளைத்து பிடித்தது மெக்ஸிகோ காவல்துறை.
2015
ஜூலை மாதம் குளியலறையில் ஒரு கி.மீ தூரத்திற்கு
சுரங்கம்(உயரம் 5.5 அடி, அகலம் 28 இன்ச்) தோண்டி எஸ்கேப்பாகி அதிர்ச்சி தந்தார் குஷ்மன்.
2016
ஜனவரியில் மெக்ஸிகோவின் கடற்படை, லாஸ் மோசிஸ் நகரில்
இருந்த குஷ்மனின் வீட்டை சுற்றிவளைத்தது.சுரங்கம் வழியாக தப்பிக்க முயன்றவரை உள்ளூர்
போலீஸ் கைது செய்தது.
2017
ஜனவரியில் குஷ்மன் நியூயார்க்கிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
கார்டெல் இயக்கம், ஆயுத வாங்கியது, பணமோசடி என குற்றச்சாட்டுகள் எதையும் குஷ்மன் ஏற்கவில்லை.
இவ்வாண்டில் செப்டம்பரில் விசாரணை தொடங்கவிருக்கிறது.
தொகுப்பில் உதவி: வால்டர் விக்ஸ், பூங்கோதை
நன்றி: டைம் வார இதழ்