இன்ஸ்டாகிராம் செல்வாக்கு மார்க்கெட்டை உயர்த்துமா?
இன்ஸ்டாகிராம் சந்தை! –- ச.அன்பரசு
சுருக் கமெண்ட் நறுக் போட்டோ பதிவிட்டு
கருத்து முதல் களேபரத்திற்கு புகழ்பெற்ற ஃபேஸ்புக், டுவிட்டரை விட போட்டோக்களை மட்டுமே
பதிவிட்டு விடும் எளிமையால் இன்ஸ்டாகிராம் பெருமளவு மக்களை கவர்ந்துவிட்டது.
மக்கள் ஒன்றுகூடுமிடத்தில் சந்தை
இல்லாமலா? டிவியில் பார்த்து பொருட்கள் வாங்கும் பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது. இன்ஸ்டாகிராமில்
ஃபேர்னெஸ் க்ரீம் முதல் செக்கு எண்ணெய் வரை பயன்படுத்தி பார்த்து புகைப்பட பதிவு விழுந்தவுடன்
குறிப்பிட்ட பொருட்களை புலிப்பாய்ச்சலில் பாய்ந்து வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இணையத்தின் வழியே
பொருட்களை வாங்குபவர்களுக்கு சமூகவலைதளங்களின் பரிந்துரையே முதல் சாய்ஸ் என்று கூறியவர்களின்
அளவு 76%. இன்ஸ்டாகிராமோடு போட்டியிட்டதில் டுவிட்டர் கூட சோர்ந்துவிடக்காரணம் கருத்து
குத்தல் இல்லாமல் போட்டோவை பதிவிட்டு டக்கென பார்ப்பவர்களுக்கு சேதி சொல்லிவிடும் எளிமைதான்
என இ-மார்க்கெட்டர் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 25 நாடுகளில் செய்த ஆய்வில்
இந்தியாவுக்கு அடுத்த இந்தோனேஷியா நாட்டிலுள்ள 83 சதவிகித மக்கள், சமூகவலைதளங்களை சந்தையாக
பயன்படுத்துகிறது.
2015 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில்
இணைந்த நேகா சர்மா, ஜாலி டூடுல்களை பொழுதுபோக்கிற்காக வரைந்து பதிவிட்டு வந்தார். பாடகர்
ஹனிசிங் தீமில் டூடுல் வரைந்த நேகா, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அப்படம் பெற்ற
லைக்குகள்தான் இன்று சிஏ படிப்பை விட்டு டூடுல் வரைந்து நேகா சம்பாதிக்க முக்கிய காரணம்.
சினிமா பிரபலங்கள் சொல்லி பொருட்களை வாங்கியவர்களுக்கு திடீரென என்ன ஆச்சு? சினிமா
நாயகர்களை விட பயன்படுத்தியவர்கள் கூறுவது மிகச்சரியாக இருக்கும் என்கிற குறைந்தபட்ச
காமன்சென்ஸ்தான் இன்ஸ்டாகிராமை வேகமாக வளரும் சூப்பர் சந்தையாக்கி வருகிறது. அவ்வளவு
ஏன்? கூகுள் பிக்ஸல் 3 போனைக் கூட இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தவே அதிக ஆர்வம் காட்டுகிறது
கூகுள்.
இந்த லிஸ்டில் குவாக்கர் ஓட்ஸ், ஹிமாலயா ஆகியவையும் இணைந்துள்ளன. “பொருட்களை
விளம்பரப்படுத்தும் பணியில் தரம் தேவை. இன்ஸ்டாவில் உங்களுக்கு நல்ல இமேஜ் இருந்தால்
மார்க்கெட்டிங் ஜெயிக்கும்” அழுத்தமாக பேசுகிறார் விளம்பர தூதரான பல்லவி ரூகைல். ஒரு
லட்சம் பேர்கள் பின்தொடரும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு ரூ.35- 50 ஆயிரம் வரை விளம்பர
வருமானம் கிடைக்கிறது.