ரூ.10 ரூபாயில் பெண்கல்வி சாத்தியம்தான்!


பத்து ரூபாயில் பெண் கல்வி!- ச.அன்பரசு
Image result for veerendra samsingh





பெண்கள் நாட்டின் கண்கள் என பட்டிதொட்டியெங்கும் பேசினாலும் எழுதினாலும் இன்றுவரை இந்தியக் கிராமங்களிலுள்ள ஏழைக்குடும்பங்களில் பெண்களுக்கு அடிப்படைக் கல்விகூட கிடைப்பதில்லை என்பதுதான் நாட்டின் அவல உண்மை. படிப்பறிவற்று வேலைக்கு செல்லும் பெண்குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி என குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பதும் கல்வியறிவின்மையின் பக்கவிளைவு சமூகத்தை குலைத்துபோடுகிறது. இதைத் தடுத்து பெண்களுக்கு கல்வியெனும் சிறகு தந்து வாழ்வில் உயர வைக்கிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர சாம்சிங்.

2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேதிப்பொருள் நிறுவமான டூபாண்டில் பணியாற்றிய வீரேந்திர சாம்சிங், பெண்கள் கல்வி கற்காமல் வேலைக்கு அனுப்பியும், குழந்தை திருமணம் செய்விக்கப்படும் அவலத்தையும் கண்டு மனம் வெதும்பினார். உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு சேமிப்புத்தொகையோடு உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தார். அனுப்ஷர் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி காத்திருந்தார். ம்ஹூம் ஒருவர் கூட தன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வரவில்லை. வேலைக்கு போனால் காசு கிடைக்கும்; பள்ளிக்கு அனுப்பினால் என்ன கிடைக்கும்? என்ற பிராக்டிக்கல் எண்ணம்தான் காரணம். “பெண்கள் இன்னொரு வீட்டிற்கு செல்பவள் என நினைப்பதுதான் படிப்பு பெண்களுக்கு எதற்கு என பெற்றோர்கள் தடுப்பதற்கு முதல் காரணம். அவர்களின் மனநிலையை மாற்றவே அதிகம் உழைக்க வேண்டியிருந்தது” என்கிறார் பள்ளி நிறுவனரான சாம்சிங்.  

Related image


பள்ளியில் சேரும் மாணவிகளுக்கு தலா பத்து ரூபாய் அளிக்கப்படும் என கிராம மக்களிடம் சாம்சிங் அறிவித்ததற்கு நல்ல வரவேற்பு. 35 மாணவிகள் முதல்கட்டமாக பள்ளியில் சேர்ந்தனர். இன்று அனுப்ஷர், புலாந்த்ஷாஹர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பர்தாதா பர்தாதி கல்விச்சங்கத்தின்(PPES) இருபள்ளிகளில் மட்டும் மொத்தம் ஆயிரத்து நானூறு மாணவிகள் கல்வி கற்கிறார்கள். வெறும் கல்வி மட்டுமல்லாது ஆளுமைத்திறன் வகுப்புகள், நாடகம், கணினிப் பயிற்சி உள்ளிட்ட திறன் வளர்ப்பு பயிற்சிகளும் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நகரங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளன.  

கல்வி என்பது படிப்பவரின் வாழ்க்கையோடு சுற்றியுள்ள சமூகத்திற்கும் நன்மை தருவதுதானே! அதை மெய்ப்பிக்கும் விதமாக அனுப்ஷர், புலாந்த்ஷாஹர்  கிராமங்களில் மறுமலர்ச்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மாணவிகளின் வீடுகளில் அரசு மானியம் பெற்று கழிவறைகளைக் கட்டினால் 70% பள்ளி வருகைப்பதிவு உறுதி என்பது பெரும் மாற்றங்களை கிராமங்களில் ஏற்படுத்தியது.
Image result for veerendra samsingh



 பெண்களுக்கு தினசரி பத்து ரூபாய் வழங்கும் திட்டத்தில் அவர்களுக்கு தனி வங்கிக்கணக்கு தொடங்கி அதில் அத்தொகையை பர்தாசி கல்விச் சங்கம் டெபாசிட் செய்கிறது. மாணவி பதினெட்டு வயதை எட்டியவுடன் கணக்கிலுள்ள சேமிப்பை எடுத்து கல்விக்காக அல்லது திருமணத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு பர்தாதி பள்ளிகளில் மூன்றுவேளையும் பெண்குழந்தைகளின் உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தும் அறுசுவை உணவுகளையும் வழங்குவது கூடுதல் சிறப்பு.

 கல்வியின் வழியாக செய்த சாதனைகளைப் போலவே பெண்களை குடும்பத்தினர் பெறுமதிப்பான சொத்தாக கௌரவமாக நடத்த தொடங்கியுள்ளது பர்தாதிப் பள்ளியின் ஆகப்பெரும் பெருமை.

கிராமத்திலுள்ள பெண்களுக்கு நுண்கடன்களை வழங்கி 2200 பெண்களுக்கு சிறுதொழில்களை நடத்துவதற்கான உதவிகளை பர்தாதி கல்விச்சங்கம் செய்துள்ளதோடு தன் கல்வி மற்றும் சமூக பணிகளுக்கு ஹெச்சிஎல்(HCL Grant) நிறுவனத்தின் நிதியுதவியையும் வென்றுள்ளது. அடுத்த மூன்றாண்டுக்குள் 44 கிராமங்களிலுள்ள 4000 மாணவிகளுக்கு கல்வியை வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே 200 பேர் கொண்ட பர்தாதி கல்விச்சங்கத்தின் லட்சியம்.  


மறுமலர்ச்சி முன்னேற்றம்!

சுயதொழில் வாய்ப்பு- 6250 கிராம பெண்கள்(138 கிராமங்கள்)
உயர்கல்வி- 84 பெண்கள், வேலைவாய்ப்பு(72 பட்டதாரிகள்)
தேர்ச்சி(2017 வரை)- 437(10 ஆம் வகுப்பு), 215(12 ஆம் வகுப்பு)

ஹெச்சிஎல் கிராண்ட்!

1970 ஆம் ஆண்டு எட்டு டெக் வல்லுநர்களால் உருவான ஹெச்சிஎல் நிறுவனத்தின் திட்டம். 2015 ஆம் ஆண்டு தொடங்கி கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் செயல்படும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிதியளித்து பல்வேறு சமுதாய மாற்றம் தரும் திட்டங்களை உருவாக்க ஊக்கப்படுத்தி வருகிறது. 

தொகுப்பு: ராமமூர்த்தி அமாவாசை, ராம்மோகன் காந்தி






பிரபலமான இடுகைகள்