இந்தியாவின் ஸ்பெஷல் விழாக்கள்!


இந்தியாவின் பெருமை சொல்லும் ஸ்பெஷல் விழாக்கள்!- .அன்பரசு


Image result for indian festivals




தமிழகத்தின் பெரும்பாலான விழாக்கள் சித்திரையின் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக வேகமெடுத்து ஆண்டு முழுவதும் வீரியமாக தொடர்பவை. பெரும்பாலான விழாக்களின் நாயக, நாயகிகளின் ஆதார வடிவம் இயற்கைதான். பல்வேறு கலாசார வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாடும்படி இந்தியளவில் வேறென்ன விழாக்கள் உள்ளன?  

Related image



சம்மக்கா- சரக்கா ஜாத்ரா விழா(ஜன.31-பிப்.3)

தெலுங்கானாவின் மேதரம் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒரு கோடிப்பேருக்கும் மேலான பழங்குடிகள் பங்கேற்கின்றனர். ஆந்திரா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சம்மக்கா-சரக்காவுக்காக செய்யும் முக்கிய நிவேதனப் பொருள், நாட்டுச்சர்க்கரை.

இவ்வாண்டு கிடைத்த நன்கொடையான 10 கோடியில் மூன்றில் ஒரு பங்கு 200 கோயா இனக்குழு பூசாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உற்சாகமாக மது, இறைச்சி விருந்தோடு கொண்டாடப்படும் இவ்விழாவில் எந்த மனிதவடிவ சிலைகளும் கிடையாது. கோயா- காகதியர்கள் என இரு இனக்குழுக்குள் நடந்த போரில் உயிர்நீத்த சமக்கா, அவரின் மகளான சரக்கா ஆகியோரின் வீரத்தை இவ்விழா நினைவுகூருகிறது.
   

கூவாகம் திருவிழா

மகாபாரத போர்க்களத்தில் அர்ஜூனனின் மகனான அரவானை போர்வெற்றிக்காக களப்பலி கொடுக்க தீர்மானிக்கிறார்கள். அதற்கு முதல்நாள் கிருஷணரின் பெண் வடிவான மோகினி, அரவானை மணக்கிறாள் என்பதே கூவாகம் திருவிழாவின் நதிமூலம். விழுப்புரத்திலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் அரவானை உற்சாகத்துடன் மணந்து அடுத்தநாள் அவர் இறக்க ஒப்பாரியுடன் விதவையாவதுதான் கூவாகம் திருவிழா. தமிழ்நாட்டில் மொத்தம் 11 அரவான் கோயில்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதுமிருந்து லட்சோபலட்சம் திருநங்கைகள் கூவாகம் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.

கரக ஜாத்ரா விழா(மார்.23-ஏப்.2)

பாண்டவர்களை நினைவுகூரும்படி, பெங்களூருவின் திகலார்பேட்டையிலுள்ள தர்மராயசுவாமி கோவிலில் நடைபெறுகிறது கரக ஜாத்ரா விழா. சப்தமி தொடங்கி பௌர்ணமி வரை விழா விண்ணை முட்டும் உற்சாகத்தை தொடுகிறது.

திமாசுரனின் ஒவ்வொரு ரத்த துளியிலுமிருந்து தோன்றிய பல்லாயிர திமாசுரர்களை ஆதிசக்தி அவதாரமான திரௌபதி அழித்து மக்களை காப்பதே திருவிழாவின் ஆதாரம். தேவியின் படைவீரர்களான வீரகுமாரர்களை நினைவுபடுத்தும்படி வெள்ளை பைஜாமா, வேட்டி கட்டி விழாவை சிறப்பிக்கிறார்கள் திகலா இனக்குழுவினர். திகலா இன பூசாரி மண் கரகத்தை மல்லிகையால் அலங்கரித்து தலையில் வைத்து கீழே விழாமல் கொண்டுவருவது விசேஷ சென்டிமெண்ட். கொடியேற்றத்தில் தொடங்கும் விழா, கையில் கங்கணம் அணிவது, சக்திபீட ஆரத்தி சடங்குகள் நடந்து இறைவிக்கு திருமணம் முடிவதில் நிறைவு பெறுகிறது.

சாவோ ஜோவோ விழா(ஜூன் 24)

கோவாவின் மழைக்காலத்தில் உள்ளூர் முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொண்டாடி களிக்கும் திருவிழா, சாவோ ஜோவோ. புது மாப்பிள்ளை பெண் வீட்டாருடன் கிணறு, ஏரி, ஆறு, கடல் என நீராடிக் கொண்டாடும் விழா சாவோ ஜோவோ என்பது இதில் ஸ்பெஷல். பூக்கள், இலைகள், காய்கறிகளால் செய்த கிரீடங்களை அணிந்து தெருவில் குதிக்கும் கோவாவாசிகள் 'விவா சாவோ ஜோவோ' என்பதை பூமி அதிர உச்சரித்து விழாவைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஜீசஸின் சகோதரரான புனிதர் ஜான் தி பாப்டிஸ்டை நினைவுகூருவதே இவ்விழாவின் ஆன்மிக நோக்கம்.  
  
பண்டாரா விழா(ஏப்.16)

மகாராஷ்டிராவிலுள்ள ஜேஜூரியிலுள்ள இறைவன் கண்டோபாவுக்கு புதுமையாக மஞ்சள் பொடியை நிவேதனமாக அளித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். மன்னராக இருந்த கண்டோபா எதிரியான மணி மெய்லாரா என்பவரை வென்றதால் கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் புகழ்பெற்ற வழிபாட்டுத்தெய்வம். எம்ஹாலசா, பானு ஆகிய இருமனைவியரோடு கண்டோபா வீற்றிருக்கும் இக்கோயில் தங்கர், கோலிஸ், சோனார், குன்பி, மராத்தா, தேசாஸ்தா, கர்கடே பிராமணர்கள் ஆகிய இனங்களுக்கு உரிமையானது. பண்டாரா விழாவின் உச்சகட்டத்தில் மஞ்சள்பொடியை பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் தூவி பாடி ஆடுவதைக் காண்போர் நெஞ்சிலும் அருள்பிறக்கும். மஞ்சள்தூள், பெல்பழ இலைகள், வெங்காயம் பிற காய்கறிகளோடு கோதுமை பன்னும் பக்தர்களால் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹோலா மொகல்லா(மார்.2-9)

அமைதியான வாழ்வை போதிக்கும் சீக்கியமதத்தினரின் குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட போர்வித்தை திறன்களுக்கு புடம்போடும் ஆக்ரோஷ விழா.முஸ்லீம்களின் தாக்குதல்,பிரிவினை, 1984 படுகொலை ஆகியவற்றால் தடுமாறிய சீக்கியமதம் தன்னை இலக்கியம், வாழ்கை, ராணுவம் என பல்வேறுவிதமாக தக்கவைக்க உருவாக்கிய இவ்விழாவில் 3 கோடி சீக்கியர்கள் பங்கேற்கின்றனர். "நம் அனைத்து கொள்கைகளும் தோற்றாலும் வாள் நம்மை உயிர்ப்பித்திருக்கும்" என்னும் சிந்தனையை குருகோவிந்த்சிங் வந்தடைவதாக Hymns of the guru's நூலாசிரியர் குஷ்வந்த்சிங் குறிப்பிடுகிறார்
      
ஹிந்தோலா உற்சவம்(ஆக.13-ஆக.23)

உத்தர்பிரதேசத்தின் பிராஜ் பகுதியிலுள்ள ஹிந்தோலா உற்சவம், கிருஷ்ணருக்கான பிரத்யேக விழா. தங்கம், வெள்ளி, கண்ணாடி, காய்கறிகள், பழங்கள், மல்லிகை, ரோஜாக்களை கிருஷ்ணர், ராதா ஆகியோருக்கு நிவேதனமாக படைத்து வழிபாடு நடைபெறுகிறது. நீர்,நிலம்,நெருப்பு,காற்று ஆகியவற்றின் குறியீடாக நடைபெறும் வழிபாடுகள் ஹிந்தோலா வழிபாட்டின் ஸ்பெஷல்.
அம்புபாசி மேளா(ஜூன் 22-26)
அசாமின் குவாகாத்தியில் நடைபெறும் நான்கு நாள் விழாவான அம்புபாசி மேளா கருத்தரித்தல், உயிர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட தொன்மையான சக்தி வழிபாடு. தட்சனின் யாகத்தில் விழுந்து உயிர்விட்ட சதியின் யோனி விழுந்த இடமே அசாமிலுள்ள காமாக்யா கோவில்.மாந்த்ரீகர்கள், தாந்த்ரீகர்கள், சாதுக்கள், பக்கிரிகள் பங்கேற்றும் புதுமையான விழாவில் பல்வேறு வகையான உணவுகள், குடிநீருக்கு பஞ்சமில்லை.

ஜூல் திருவிழா(ஏப்.29-30)

ஜம்மு-காஷ்மீரில் 15 ஆம் நூற்றாண்டு சூஃபி துறவியான சகி ஸைனுதீன் வாலியின் நினைவாக கொண்டாடப்படும் விழா. லஷி எனும் மர தீப்பந்தங்களை ஏந்தி சூஃபி துறவி ஸைனுதீன் வாழ்ந்த இடத்தை நோக்கி இஸ்லாமியர்கள் செல்கின்றனர். ஜம்முவில் கிஸ்ட்வாரில் வாழ்ந்த ராஜபுத்திர இளவரசரான ஸைனுதீனை இளமையில் தொடர்ச்சியாக நோய்கள் தாக்க காஷ்மீரிலுள்ள அய்முகாம் குகையில் தியானம் செய்து நோய் தீர்த்துக்கொண்டு பிறமக்களுக்கும் உதவினார். அவர் தியானித்த குகையே இன்று கோவிலாகியுள்ளதோடு அங்கு குழந்தைகளுக்கு முடி இறக்கும் சேவையையும் செய்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள், முதியவர்களை குகைக்கு அழைத்துசெல்ல ரோப்கார் வசதியை மாநில அரசு செய்துதர ஆலோசித்துவருகிறது.

கஸ்டர் விழா(அக்.27-28)

லடாக்கில் மன்னர் லாங் தர்மா(கி.பி.838-842) புத்த கோவில்களை மூடியதோடு துறவிகளையும் தூக்கிலிட்டு கொன்று கொடுமைப்படுத்தினார். இப்பிரச்னைக்கு முடிவு கட்ட நினைத்த எல்ஹலுங் பெல்ஜி டோர்ஜே என்ற துறவி, ஷம் எனும் முகமூடி நடனத்தை அரசரின் முன் அரங்கேற்றி நடனத்தின் இடையில் திடீரென அம்பு தொடுத்து கொடூர மன்னர் லாங் தர்மாவைக் கொன்றார். அந்நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கொண்டாடப்படுவதே கஸ்டர் விழா. 

லூனார் காலண்டர்படி ஆண்டின் ஒன்பதாவது மாதத்தின் 17 ஆவது நாள் கஸ்டர் விழா தொடங்குகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் திபெத் இசைக்கருவிகள் இசைக்கப்பட கறுப்பு தொப்பிகளுடன் ஷம் நடனம் தொடங்கி இறுதியில் லாங் தர்மா மன்னரின் கொடும்பாவி கொளுத்தப்பட்டு கொண்டாடப்படும் இவ்விழா, இந்துக்களின் தசராவுக்கு நிகரானது.

கன்வார்மேளா, கங்கை நீரை பாத்திரங்களில் சேகரித்து மூங்கில் கம்புகளில் தூக்கியபடி உத்தரப்பிரதேசத்தின் ஹரித்வாருக்கு வந்து உள்ளூர் சிவன் கோவில்களுக்கு அர்ப்பணிப்பதே இவ்விழா.
மனெர் அர்ஸ், பீகாரின் பீகார் ஷெரீப் பகுதியில் வாழ்ந்த துறவி ஷேக் ஷர்ஃபுதீன் யயா மனேரி என்பவரின் நினைவாக கொண்டாடப்படும் இசைவிழா.

லாய் ஹரோபா, மணிப்பூரின் இம்பால்,மொய்ரங் பகுதியில் உமாங் லாய் உள்ளிட்ட தெய்வங்களை நினைவுகூர்ந்து நடைபெறும் மெய்டெய் மல்யுத்தம், நடனம், நாட்டுப்புற பாடல்களைக் கொண்ட விழா.

செட்டியாகிரி விகாரா விழா, மத்தியப்பிரதேசத்தின் சான்ச்சி பகுதியிலுள்ள புத்த துறவிகளுக்கானது.

திங்கா கவர் விழா, ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில் நடைபெறும் முழு முதல் பெண்களுக்கான விழா. ஹோலிக்கு அடுத்தநாள் சூரிய மறைவுக்கு பிறகு பார்வதியின் சிலைகளோடு சூடுபிடிக்கும் விழா இது. சிலைகளை நெருங்கும் ஆண்களை பல்வேறு கெட்அப்புகளில் பிரம்புகளோடு பெண்கள் தடுப்பது சிறப்பு.    
 

நன்றி: பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

பிரபலமான இடுகைகள்