வீட்டு வேலைகள் புருஷ லட்சணம்!
வீட்டு வேலைகள் புருஷ லட்சணம்! –- இல்லரத்தரசர்களின் கலாசாரம்
ஆபீஸ் போவதுதான் ஆண்களில் இலக்கணம் என்பது மாறி பெண்களை வேலைக்கு
அனுப்பிவிட்டு குழந்தைகளை அக்கறையாக பராமரிக்கும் கணவர்களின் எண்ணிக்கை கேரளாவில் விறுவிறுவென
அதிகரித்துவருகிறது.
உலகளவில் குழந்தைகளை பராமரிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்,
குடும்பத்தலைவர்கள் என்றாலே ஆண்கள் என பழகிய இந்தியாவில் அதிலும் கேரள மாநிலத்தில்
பெருமளவு மாற்றம் தொடங்கியுள்ளது ஆச்சர்யம். கோட்டயம் மாவட்டத்திலுள்ள பனிரெண்டுக்கும்
மேற்பட்ட குடும்பங்களில் பெண்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து சம்பாதித்து பணம் அனுப்ப,
ஆண்களே வீட்டுச்சாமான்களை வாங்கிப்போட்டு குழந்தைகளை ஆராரிரோ பாடி தூங்கவைத்து பராமரித்து
வருகிறார்கள்.
“நானும் மனைவியும் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் வேலைபார்த்து
வந்தோம். குழந்தை பிறந்தவுடன் அங்கு செலவுகள் கூடியதால் குழந்தையை வளர்ப்பதற்காக நான்
ஊர் திரும்பிவிட்டேன். என்பெற்றோர்கள், உறவினர்கள் குழந்தை வளர்ப்பில் உதவுகிறார்கள்”
என்கிறார் இல்லரத்தரசர் பாபு ஜோசப். இவர் மட்டுமல்ல இம்மாவட்டத்தில் 117 கணவர்கள் குழந்தைகள்
வளர்க்கும் பொறுப்பேற்று வீட்டுவேலைகளை ஏற்றுள்ளனர் என்கிறது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த
மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தின் ஆய்வறிக்கை(ஜன.-மார்ச் 2018).
தந்தையில் கண்டிப்பான வளர்ப்பும், தாயின் அக்கறையான பராமரிப்பும்
ஒன்றாகிவிடாதுதான். ஆனால் வெளிநாடுகளில் தனியாக விளையாடுவதை விட குறைந்தபட்சம் தாத்தா,
பாட்டியின் அரவணைப்பேனும் குழந்தைகளுக்கு கிடைப்பது பெரிய விஷயம்தான் அல்லவா? இதனால்தான்
ஆண்டுக்கு இருமாத லீவில் வரும்வரை குழந்தைகளுடன் தாய்மார்கள், தினசரி ஸ்கைப்பில் பார்த்து
பேசி உறவை வளர்த்து வருகின்றனர். வீட்டை சுத்தம் செய்வது, உணவு தயாரிப்பது, மளிகைப்பொருட்களை
வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என அனைத்து வேலைகளையும் ஆண்கள் வெட்கப்படாமல்
செய்யத்தொடங்கியுள்ளது புதிய மாற்றத்தின் அறிகுறி.
“டீ குடித்த கப், சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்வது எனத்தொடங்கிய
பணிகள் இவ்வளவுதான் என முடியாமல் நீண்டன. அப்போதுதான் பெண்களின் வேலைச்சுமையை புரிந்துகொண்டேன்.
வீட்டுவேலைகளால் அப்பா-மகன் உறவு இணக்கமாவதோடு என் மகனும் பெண்களை மரியாதையோடு நடத்துவான்”
என இல்லத்தரசர்களின் பாசிட்டிவ் பக்கங்களை கூறுகிறார் பாபு ஜோசப். குழந்தைகள் தாயிடம்
மட்டும் சொல்லும் விஷயங்கள் உண்டு. சூழல் நிர்பந்தத்தால் தாயின் இடத்தை ஆண்கள் நிரப்பியுள்ள
நிலையில், குழந்தைகளின் நாணம் களைந்து தந்தையிடம் பேசத்தொடங்கியுள்ளதை கைதட்டி வரவேற்கலாம்.
நன்றி: டெக்கன் கிரானிக்கிள்