ரத்தம் தெறிக்க ஒரு போர்! - ஃபைனல் ஃபேன்டஸி அதகளம்
Final Fantacy
மூன்று அத்தியாயங்கள் வீடியோ வடிவில் பார்த்தேன். முதல் கதை, பூமியில் தாவரங்கள் உள்ளதா என தேடிவரும் பெண், அவளை நேசிக்கும் ராணுவ தளபதி, ஆராய்ச்சிகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ராணுவத்தலைவர், பூமியை கட்டுப்படுத்திவிட்ட நுண்ணுயிரிகளின் கூட்டம் என கதை செல்கிறது.
நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் உதவி கிடைத்தால் மட்டுமே ஆராய்ச்சி செய்யும் நாயகி உயிர்பிழைக்கும் நிலை. ஆனால் அப்படியொரு ஆராய்ச்சி தேவையில்லை என ராணுவத்தலைவர் தடுத்து விண்ணிலிருந்து பூமியை ஏவுகணைகளால் தாக்குகிறார். இதற்கு அவருக்கு கீழேயுள்ள அதிகாரி எப்படி தனக்கு அட்வைஸ் சொல்லலாம் என்ற ஈகோவும் காரணம்.
சயின்டிஸ்ட் நாயகிக்கு காதலனான ராணுவத்தளபதியும் துணைநிற்க பூமியில் உதவி கிடைத்ததா? நாயகி உயிர்பிழைத்தாளா? என்பதே கதை. மெதுவாக நகரும் கதை பெரிய சோதனை. அதையும் மீறி பார்த்தாலும் நுண்ணுயிரிகளின் ஆற்றலுக்கு முன்னால் மனிதர்கள் பரிதாபமாக பலியாகிறார்கள். நாயகியும் மூத்த விஞ்ஞானி மட்டுமே இறுதியில் உயிர்பிழைக்கிறார்கள்.
Kings alive
இது தேசத்தை ரத்தம் சிந்தி கைகால்களை உடைத்துக்கொண்டு தேசம் காக்கும் ஃபேன்டஸி கதை. நாட்டின் தலைவர் காலை நொண்டினாலும் மந்திரக்கல்லினால் பலமானவர்தான். ஆனால் பக்கத்துநாட்டு எதிரி பாசத்தோடு நெருங்கி தேசத்தை உடைக்க முயற்சிக்கிறார். இதற்கு அவரின் மகளையே பயன்படுத்துகிறார்கள். ராணுவத்தளபதி படையிலுள்ள உள்ள வீரர்தான் ஹீரோ.
தளபதியின் படையில் சாதாரண வீரராக இருந்து நாட்டை எதிரிகள் உடைக்க முனைய நெருப்பாக கோபத்தை வெளிப்படுத்தி தன் ராணுவத்தலைவரையே நேருக்கு நேர் எதிர்கொண்டு சண்டைபோடும் காட்சிகள் பிரம்மிப்பூட்டுகிறது. ஒவ்வொரு பன்ச்சிலும் ரத்தம் தெறிக்கிறது. பார்க்கும் நமக்கு வலிக்கிறது. ரொமான்ஸ் என தப்பித்தவறியும் கேட்டுவிடாதீர்கள். வாளை எடுத்து வயிற்றில் சொருகி விடுவார்கள். முழுக்க சண்டைதான்.
அதிலும் நாட்டின் ராஜா மோதிரத்தை எடுத்து போட்டு நாட்டை ஆண்டுவிட நினைத்து மாட்டிக்கொள்ளும் காட்சிகள் சூப்பராக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் நாயகன் கடவுள்களிடம் சக்தியை கோரி பெற்று வில்லனை வீழ்த்தி விழுப்புண்களை தாங்கி நின்று ஜெய்ஹிந்த் சொல்வதுதான் க்ளைமேக்ஸ் காட்சி.
கத்தியை எறிந்து புதிய இடங்களில் தொற்றி ஏறுவது, உடலிலுள்ள மந்திர சக்தியை பயன்படுத்துவது, மந்திர மோதிரத்திற்கான போட்டி, நண்பர்களின் திடீர் துரோகம், ராணுவத்தலைவரின் நெகட்டிவ் அவதாரம் என ஆச்சரியங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. ரசித்து பார்க்கலாம்.
Final Fantasy 7
ஜியோ ஸ்டிக்மா என்ற நோய் மக்களை பிடித்தாட்டுகிறது. தன் நண்பனைக் கொன்ற வில்லனை பழிவாங்க தனியாக அலையும் க்ளவுட் நாயகனுக்கு இந்நோய் பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது. வேற்று உலகிலிருந்து வரும் உயிரிகளை வரவேற்று மக்களை பலிகொடுக்க முற்படும் உள்நாட்டு துரோகிகளை அழித்து நோயை அழித்து மக்களை காப்பதுதான் கதை.
நாயகனுக்கு ஏராளமான ஃபிளாஷ்பேக் காட்சிகள் உண்டு. இதெல்லாம் பார்க்கும்போது நாமே என்னவாக இருக்கும் என யோசித்துக்கொள்ளலாம். பைக்கில் போகும்போது அதேவேகத்தில் நாயகனுக்கு மனதில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஒளிவேகத்தில் ஓடுகின்றன என்பதை புரிந்துகொள்வது நம் சாமர்த்தியம். க்ளவ்டுக்கு உதவம் டீம் உண்டு என்பதை இரண்டாவது சண்டைக்காட்சியில் தெரிந்துகொண்டாலும் அவர்களின் உதவி க்ளைமேக்ஸில் பெரியளவு கிடையாது.
இறுதி சண்டைக்காட்சிதான் ஃபைனல் ஃபேன்டஸியை தூக்கி நிறுத்துகிறது. வில்லனின் ஒற்றை இறக்கை, அதிநீள வாள் பயம் கூட்டுகிறது. காதல் கிடையாது. சமூகம், நண்பனுக்கு கொடுத்த லட்சியம் என நாயகனுக்கு ஷெட்யூல் போட்டு இயக்குநர் வேலை கொடுத்திருக்கிறார். பல்வேறு ஃபிளாஷ்பேக் காட்சிகள், விரக்தி, சோகம் என ஃபைனல் ஃபேன்டஸியில் இது வேற லெவல் அத்தியாயம் என்பதை படம் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.
-நன்றி: மைக்கேல் அலைஸ் மீகா