பெண் பைலட்டுகளை உருவாக்கும் பனஸ்தாலி பல்கலைக்கழகம்!


ஆகாயத்தில் சிறகு விரிக்கும் பெண்கள் - ச.அன்பரசு





Image result for banasthali university



பெண்களை நுகர்விற்கான பொருளாக பலரும் சித்தரிக்கும் நிலையில் கல்வி மட்டுமே பெண்களுக்கு சிறகு தரும் என்ற லட்சியம் மாறாது செயல்பட்டு வருகிறது ராஜஸ்தானிலுள்ள பனஸ்தாலி பல்கலைக்கழகம். பெண்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுத்து இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை அளிக்கும் இங்கு, பெண்களுக்கான விமானப் பயிற்சி மையம் தனித்துவமானது.

1935 ஆம் ஆண்டு ராஜஸ்தானிலுள்ள தோங் மாவட்டத்தில் பனஸ்தாலி வித்யாபீடம் தொடங்கப்பட்டபோது இதில் சேர்ந்த சிறுமிகளின் எண்ணிக்கை வெறும் ஏழுதான். ஆனால் தற்போது நாடெங்கிலுமிருந்து பதினாறாயிரம் மாணவிகள் இங்கு கல்வி கற்கின்றனர். 850 ஏக்கரில் 28 கட்டிடங்களோடு பிரமாண்டமாக ஆச்சரியப்படுத்துகிறது பனஸ்தாலி பல்கலைக்கழகம். ஜெய்ப்பூர் அரசின் செயலாளராக பணிபுரிந்த ஹீராலால், பனஸ்தாலி(அன்று பன்தாலி) கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்தார். அங்கிருந்த விவசாயிகளுக்கு கல்வி அறிவு புகட்ட தொடங்கியதுதான் பனஸ்தாலி வித்யாபீடத்தின் முதல்படி. "ஜாதி பேதமின்றி விவசாயிகளுக்கு கல்வி அறிவை வழங்குவதே தாத்தாவின் நோக்கம்" என்கிறார் பல்கலையின் துணைவேந்தரான சித்தார்த்.


Related image




ஹீராலாலின் மகளான சாந்தாபாய் திறந்தவெளியில் விவசாயிகளுக்கு தானாக முன்வந்து வகுப்பெடுத்ததோடு, தந்தையிடம் அனுமதி பெற்று 1929 ஆம் ஆண்டு ஒற்றை அறையைக் கொண்ட வகுப்பை கிராமத்தினருடன் இணைந்து கட்டினார். தன் பனிரெண்டு வயதில் திடீரென மரணித்த சாந்தாபாயின் மறைவு, ஹீராலாலை நிலைகுலைய வைத்தது. "சாந்தாபாய்க்கு கல்வி கற்றுத் தந்தது போல உங்கள் நண்பர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை வழங்கலாமே?" ஹீராலாலின் மனைவி ரதன் சாஸ்திரி சொன்னபின்தான் பெண்களுக்கான கல்வி நிறுவனமாக பனஸ்தாலியை ஹீராலால் உருவாக்கினார்.

கிராமங்களில் சமையல், வீட்டுவேலை தவிர்த்து பெண்களை வேறெதிலும் பங்குகொள்ள விடாமல் தடுக்கும் பழக்கம் இன்றும் உண்டு. பெண்களுக்கு கல்வி தந்தாலும் திருமணமாகி கணவரின் வீட்டுக்கு சென்றுவிடுவாள் என லாபநஷ்ட கணக்கு போடும் பழம்பெருமை சமூகம் அன்றிருந்தது. 


Image result for banasthali university



அச்சூழலில் பெண்களுக்கு மட்டுமேயான பள்ளி என்பது வறண்ட கிணற்றில் தலைகீழாக குதிக்கும் முயற்சிதான். ஆனாலும் பனஸ்தாலி வித்யாபீடத்தில் பாடங்களை சொல்லித்தந்த சாந்தாபாய், அத்தனை தடைகளையும் தன் இடையறாத கல்வி பிரசாரம் மூலம் இருண்டு கிடந்த கிராமத்து பெற்றோர்களின் மனங்களை திறந்தார். பள்ளியைத் திறந்துவைத்த திறந்து வைத்த பிரதமர் நேரு, "கலாசார வேறுபாடுகளை களைந்த ஒன்றுபட்ட இந்தியாவுக்கான முயற்சித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இங்கு படிப்பது நான் கனவுகண்ட இந்தியாவை நேரில் பார்ப்பது போல் உள்ளது" என நெஞ்சார பாராட்டி வாழ்த்திய அற்புதமும் நடந்தது. 


1983 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி என்பது பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பெருமை.
இந்தியாவிலுள்ள பீகார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், அசாம், மேகாலயா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பனஸ்தாலி வித்யாபீடத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? 

விமானப்பயிற்சிக்கு வெளியில் 20-30 லட்சம் ரூபாய் கட்டணம் என்றால் இங்கு பதினேழு லட்ச ரூபாய் மட்டுமே கட்டணம். ஒரு மணிநேரம் விமானத்தில் பயிற்சிபெற ரூ.10 ஆயிரம் வசூலிக்கிறார்கள். வணிகரீதியில் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளைப்பெற மாணவிகள் விரும்புகின்றனர். மொத்த பயிற்சி நேரம் 200 மணிநேரம். இதில் மாணவர்களின் விமான உரிமத்திற்கு பத்து மணிநேர பயிற்சியை இலவசமாக பல்கலைக்கழகம் வழங்குகிறது.

 விமானப்பயிற்சி பெறும் மாணவிகளுக்கு கிரிக்கெட், பேட்மின்டன் அல்லது குதிரையேற்றம் உள்ளிட்ட மூன்று விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுவது கட்டாயம்.
"நாங்கள் எங்கள் மாணவர்களின் தேர்ச்சியைவிட  ப்ராஜெக்டுகளில் புதிதாக கற்க வாய்ப்புள்ளதா என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்கிறார் துணைவேந்தரான சித்தார்த். 

இவரின் பேச்சை தங்களின் புதுமையத்திறன் செயல்பாடுகளால் வழிமொழிகின்றனர் மாணவிகள். ஆட்டோமோஷன் எந்திரம் விமானத்தின் பாகங்களை தூக்குவது உள்ளிட்ட செயல்களை செய்து வந்தது. தற்போது அதற்கு பல்கலைக்கழக லோகோவை வரைய சொல்லித்தந்து வருகின்றது பொறியியல் மாணவிகள் படை. இப்பல்கலையின் பொறியியல் எந்திரங்களை பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளதோடு, ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகைகளையும் மாணவிகளுக்கு வழங்கிவருகிறது.

தலைமைத்துவ பண்புகளையும் தற்சார்பான பொருளாதாரத்தை உருவாக்கும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் பனஸ்தாலி பல்கலைக்கழகம் துறைசார்ந்த சாதனையாளர்களை அழைத்து வந்து மாணவிகளிடையே உரையாற்ற வைக்கிறது. சரி, பெண்கள் இப்படி படித்துவிட்டு வெளியே எதார்த்த உலகில் சமாளிக்க முடியுமா என்று கேட்டால் "பெண்கள் தங்களுக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்கிறார் சித்தார்த். 

இப்பல்கலைக்கழகத்திலிருந்து முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார், தடகள வீராங்கனை சுமித்ரா கோதரா, போர்விமானத்தை ஓட்டிய முதல் பெண் அவானி சதுர்வேதி ஆகியோர் உருவாகியுள்ளனர். "என் அம்மாவுக்கு விமானியாகும் ஆசை இருந்தது. கனவுகளை நிறைவேற்ற என்னை அனுப்பியுள்ளார். இத்துறையில் மட்டுமல்ல பெண்களுக்கு வாழ்விலும் நிறைய சவால்கள் உண்டுதான். அதில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கிறோம்; ஆனால் முதல் அடி எடுத்து வைக்காமல் எந்த பயணமும் சாத்தியமில்லை" என நம்பிக்கையுடன் கூறுகிறார் பயிற்சி விமானியான மேகாலி தியாகி. வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்க கற்றுத்தருவதுதானே உண்மையான கல்வி!

முத்தான பெண்கள்!

அவனி சதுர்வேதி(24)

மிக் 21 பைஸன் விமானத்தை இயக்கிய முதல் இளம்பெண். மூன்று பெண் போர்விமானிகளில் அவனியும் குறிப்பிடத்தக்கவர்.

அனுராதாசிங்(45)

ஆங்கில திரைப்படங்களின் படத்தொகுப்பாளர். ஸ்லம்டாக் மில்லியனர், மில்லியன் டாலர் ஆர்ம்ஸ், ஹண்ட்ரட் ஃபுட் ஜர்னி, வெஸ்ட் இஸ் வெஸ் படங்களில் பணியாற்றியவர்.

சுனிதா கோதரா (58)

அர்ஜூனா விருது பெற்ற புகழ்பெற்ற மாரத்தான் வீராங்கனை. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தும் கௌரவம் பெற்றவர்.

பின்னி யாங்கா(1958-2015)

இந்திய அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக பணியாற்றிய பின்னி யாங்கா, பத்ம விருது பெற்ற சமூக செயல்பாட்டாளர்.

மீராகுமார்(72)

இந்தியாவின் முதல் மக்களவை சபாநாயகரான மீராகுமார், 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக பங்கேற்றார்.

கமலா பெனிவால்(91)

2009 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் முதல் பெண் ஆளுநராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றினார் கமலா. பின் குஜராத், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநர் பொறுப்பு வகித்துள்ளார்.