மோடி செய்தது என்ன? - மைனஸ் பிளஸ் மைனஸ்? 1
மோடியின் ஃபிளாப்
பணமதிப்பு நீக்கம்
மோடி இன்னும் கசப்பு மருந்து எனும் வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தினாலும் வரலாற்றில் மறக்கமுடியாத மக்களின் தோல்வியாக இது பதிந்துவிட்டது. கருப்பு பணம் என புருடா விட்டு பணத்தை திரும்ப வங்கிக்கு கொண்டு சேர்த்த 99.3% பணம் மோடியின் குட்டை உடைத்து அவமானத்தை, கறையை ஏற்படுத்திய யோசனை.
எரிபொருள் விலையுயர்வு
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்றாலும் அதனை முறைப்படுத்தக்கூட யோசிக்காதது மோடிக்கு பின்னடைவு. ரூபாயில் ஏற்றி பைசாவில் குறைக்கும் மோடினாமிக்ஸ் தந்திரத்தை சரவணா ஸ்டோர் அதிபர் கூட தள்ளுபடிக்கு பயன்படுத்தவில்லை என்பது நகைமுரண்.
ஜிஎஸ்டி
எல்எஸ்டி ஒருவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட ஜிஎஸ்டி அதிகம் பாதித்துவிட்டது. கடலைமிட்டாய்க்கு ஒருவரி, பிஸ்கட்டிற்கு ஒரு வரி என விதித்து கடை ஓனரை மட்டுமல்ல வாங்கும் மக்களையும் தாக்கி வீழ்த்தி புலம்பவைத்துவிட்டது. சிறுகுறு தொழில்துறை மூடப்பட்டது ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்ட பின் என்பது கசக்கும் உண்மை.
வேலை கிடையாது
பொருளாதாரம் மேலே ஏறினாலும் வேலைவாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்பது இளைஞர்களின் கோபத்திற்கு காரணம். வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போட பழகலாமே என பொறியியல் மாணவர்களுக்கு உபதேசித்தது பிரதமராக மோடிக்கு பெரும் தோல்விதான்.
ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல்
இந்திய அரசின் நிதித்துறை , ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடியை பெற்று பெருமுதலாளி முதல் சிறுதொழில்முனைவோர்களுக்கு கடன் அளித்து வாக்குகளை வேட்டையாட முயற்சித்தது. ஆனால் இந்தியாவிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் பயத்தில் உர்ஜித் படேல் மௌனம் சாதிக்க, அரசுக்கும் மத்திய வங்கிக்கும் மோதல் வெடித்தது. அரசு விதிகளை பயன்படுத்தலாமா என்று சர்வாதிகார யோசனையில் அரசு முரட்டு முட்டாள்தனமாக ஈடுபட்டுள்ளது நிச்சயம் மக்கள் நலனுக்காகத்தான் என்றால் சிறுபிள்ளை கூட சிரித்துவிடும்.
விவசாயிகள் கோபம்
விவசாயிகளின் பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை உத்தரவாதத்தை
கூட மோடி அரசு தரமுடியவில்லை. அமைதி முறையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை போலீஸ் வைத்து தடியடி மூலம் கலைத்தது யாருக்கான அரசு இது என அரசின் முகத்தை வெட்டவெளிச்சமாக உலகிற்கே காட்டிவிட்டது.
அரசு நிறுவனங்களை உடைத்தல்
ஜனநாயகத்தன்மை கொண்ட சிபிஐ, தேர்தல் ஆணையம், நீதித்துறை என ஆர்எஸ்எஸ் நபர்களை நியமித்து அதனை உடைத்து மக்களின் நம்பிக்கையை தகர்ப்பது மோடிக்கு தேர்தலில் வாக்குகளை நிச்சயம் பெற்றுத்தராது. திட்டக்குழுவை உடைத்து நிதிஆயோக் என மாற்றியபின் அறிக்கை வெளியாவதோடு சரி. வேலைகள் சரியானபடி நடக்கிறதா என்பது யாமறியேன் பராபரமே கதைதான்.
மக்களை பிரிப்பது நியாயமா?
இந்தியாவை சுற்றி சுவர் கட்டுவேன் என மோடி சொல்லவில்லை. ட்ரம்ப் சொல்லிவிட்டார். அவ்வளே வித்தியாசம். அயோத்தி ராமர் கோவில், அசாம் மக்கள் பதிவேடு(NRC), உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் என்பவை கட்சி மட்டுமல்ல அதன் அரசாட்சிக்கும் பெருமை சேர்ப்பவை கிடையாது.
நன்றி: அவுட்லுக், பாவ்னா விஜ் அரோரா.