மின்நிலையங்களை அமைத்தால் கங்கை காலி
நேர்காணல் 2
ஜெய்ராம் ரமேஷ்
பல்வேறு மாநிலங்கள் நீர்மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனவே?
சூழல் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு பதிலாக பசுமை நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். 5 ஆண்டுகளுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு இந்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலங்களுக்கு இழப்பீடு கிடைக்காதது ஏன் என புரியவில்லை.
உண்ணாநோன்பிருந்து உயிரிழந்த அகர்வால், கங்கையில் நடைபெறும் மணல்கொள்ளையை தடுக்கவும் கூட அரசை வற்புறுத்தினாரே?
மணல்கொள்ளையை திருகலான அரசியல் பிரச்னை. இதனை தடுக்க உத்தர்காண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியாலுக்கு டஜனுக்கு மேலான கடிதங்களை எழுதியதோடு டெல்லியில் இருமுறையும் டேராடூனில் இருமுறையும் சந்தித்து பேசியும் கூட மணல் கொள்ளையை தடுக்க வற்புறுத்தினேன். ஆனால் மணல் கொள்ளை நிற்கவில்லை. கங்கை விவகாரமும் அப்படித்தான். இதற்கான பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூட நினைத்தேன். ஆனால் அப்படிச்செய்தால் ஆளும் பாஜக மாநில அரசை குறிவைப்பதாக மாறும் அபாயமிருந்தது. முடிந்தவரை உத்தர்காண்ட் முதல்வரிடம் பேசியும் மணல் கொள்ளையை தடுப்பதில் ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பது பெரும் வேதனை.
கங்கை மற்றும் அகர்வாலை அரசுகள் பாதுகாக்க தவறிவிட்டன என்று நினைக்கிறீர்களா?
ஹரித்வாருக்கு இருமுறை சென்று அகர்வாலை சந்தித்தேன். ஏனெனில் அப்படி அமைச்சர்கள் சென்று பார்ப்பது அரிது. நான் முதல்முறை அகர்வாலை பார்க்கசென்றதை பிரதமருக்கு கூட கூறவில்லை. இரண்டாம் முறை சென்றபோது நிதியமைச்சரின்(பிரனாப் முகர்ஜி ) கடிதத்தை எடுத்து சென்றேன். அப்போது என் நோக்கம் அவரது உண்ணாநோன்பை தடுத்து நிறுத்துவதாக இருந்தது. பிப்.2009 ஆம் ஆண்டு கங்கை தேசிய ஆறாக இந்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. கங்கைக்கென ஆணையம் அமைக்கப்பட்டது. கங்கையில் வாழ்ந்த டால்பினை தேசிய உயிரியாக அறிவிக்க திரு. நிதிஷ்குமார் வலியுறுத்தினார். 48 மணிநேரங்களில் கோரிக்கை ஏற்கப்பட்டு அது அரசிதழிலும் அறிவிக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்திலேயே கங்கையை தூய்மைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. நீங்களும் இதற்கான ஆணையத்தை அமைத்திருக்கிறீர்கள். ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக கங்கை அசுத்தமாகி அப்படியேதானே இருக்கிறது?
எதுவுமே நடக்கவில்லை என்று கூறமுடியாது. CPCB மூலம் மாசுபடல் அளவை அறிய சோதனைகளை நடத்த செய்து அதிலுள்ள ஆக்சிஜன் அளவை அறிக்கைகளில் பதிவு செய்தோம். ஆனால் கங்கையில் கொட்டப்படும் கழிவை கட்டுப்படுத்த முறைப்படுத்த தவறியது எங்களது பெரும்பிழை. 75 சதவிகிதம் முறைப்படுத்தப்படாத முனிசிபாலிட்டி கழிவுகளை கங்கையில் கொட்டுகிறார்கள். இதில் தொழிற்சாலைகளின் கழிவு பங்களிப்பு 25%.
கங்கையின் 2,500 கி.மீ நீளமும் முழுதாக மாசுபடுத்தப்படுகிறது என கூறமுடியாது. கன்னாஜிலிருந்து வாரணாசி(பிரதமர் மோடியின் தொகுதி) வரையில்தான் பெருமளவு முனிசிபாலிட்டி குப்பைகள் கொட்டப்படுகின்றன.
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஏற்கனவே 20 ஆயிரம் கோடிகளை செலவிட்டாயிற்று.
க்ளீன் கங்கை திட்டத்தின் சமஸ்கிருதப் பெயர்தான் நமாமி கங்கா. திட்டத்தின் பெயர்தான் வேறு. லட்சியம் ஒன்றுதான். உத்தர்காண்ட், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களை இணைத்து செல்லும் கங்கை 160 நகரங்களை கடந்து பயணிக்கிறது. 2007-2011 ஆண்டுகளில் தூய்மைபடுத்துவதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தன. தற்போதைய பாஜக அரசு மேலும் நிறைய திட்டங்களை சேர்த்துள்ளது அவ்வளவுதான்.
கங்கையில் இந்திய அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தினால் என்னாகும்?
இந்திய கானுயிர் கழகம், இந்திய ஆறுகளில் பெரும்பாலானவற்றில் டால்பின்கள் அழிந்துவிட்டன என்று கூறிவிட்டது. மின்சார திட்டங்களை நதிகளில் செயல்படுத்தினால் மக்களின் பயன்பாட்டுக்கான நீர் கூட மிஞ்சாது என்பதே அவலமான உண்மை.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: நிதி ஜாம்வால், தி வயர்