எஸ்பெராண்டோ எனும் உலகபொதுமொழி!
சல்யூடான்! போன் கிஸ்! - ESPERANDO! – ச.அன்பரசு
சல்யூடான், போன் கிஸ், படித்தாலும்
இரண்டொருமுறை சொல்லிப்பார்த்தும் கூட ஒன்றும் புரியவில்லையா? எஸ்பெரான்டோ மொழியில்
வணக்கம், நன்றி சொன்னேன் அவ்வளவுதான். ஏறத்தாழ 131 ஆண்டுகளுக்கு முன்பு போலந்தைச் சேர்ந்த
ஸமென்ஹாஃப் பன்மொழி கலைஞர் கண்டுபிடித்த மொழி, எஸ்பெரான்டோ.
1887 ஆம் ஆண்டு போலந்து, ரஷ்யர்கள்,
ஜெர்மன்கள், யூதர்கள் அனைவருக்குமான உலகப்பொது மொழியாக 16 இலக்கண விதிகளோடு உருவாக்கப்பட்டது
எஸ்பெரான்டோ. ஸமென்ஹாஃப், தான் எழுதிய நூலில் எஸ்பெரான்டோ மொழி உருவாக்குவதற்கான ஐடியாவை
முன்னதாக வெளியிட்டு எஸ்பெரான்டோவை உருவாக்கினார். 1905 ஆம் ஆண்டு பிரான்சில் மொழிகளுக்கான
உலகமாநாட்டு தீர்மானப்படி 1908 இல் உலக எஸ்பெரான்டோ சங்கம் உருவானது.
1920 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான
எஸ்பெரான்டோவை, லக்ஷ்மிஷ்வர்சின்கா என்பவர் தாகூர் படைப்புகளை அம்மொழியில் மொழிபெயர்த்து
பிரபலப்படுத்தியதோடு பயிற்சி மையத்தையும் தொடங்கினார்.
ஆங்கிலமொழி அலையில் அடித்துச்செல்லப்பட்ட
எஸ்பெரான்டோ மொழியை 2014 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகம், பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆகியோர்
ஆதரித்து கிளப்புகளை தொடங்கினர். அண்மையில் புனேவிலுள்ள அறிவியல் கல்வி ஆராய்ச்சி கழகம்(IISER),
கொல்கத்தாவிலுள்ள த்ருபாசந்த் ஹால்டர் கல்லூரியும் இம்மொழிக்கென புதிய படிப்புகளை தொடங்கியுள்ளனர்.
“அவதாரின் நவி மொழி, கேம் ஆஃப் த்ரோனின் தோத்ரகி போன்ற மொழிக்கண்டுபிடிப்புகள் போல
இம்மொழி மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம்” என்கிறார் இந்திய எஸ்பெரான்டோ பெடரேஷன்
தலைவரான பேராசிரியர் கிரிதர்ராவ்.
மொழி பாரம்பரியப் பெருமையோடு பொருளாதார
ஆற்றலும் இருந்தால்தான் மக்கள் அதனை பயன்படுத்துவார்கள். ஆங்கிலேயர்களின் காலனியாக
இந்தியா இருந்தபோது ஆங்கிலமொழி இந்தியர்களின் கலாசாரத்தை குலைத்து மேற்குலகின் ஜன்னல்
வெளிச்சமாக விரிந்தது. “ஆங்கிலம் இந்தியாவின் கலாசாரங்களை மொழியை வலுக்கட்டாயமாக கீழிறக்கி
தன்னை மேலுயர்த்திக்கொண்டது. ஆனால் எஸ்பெரான்டோ மொழி சமூகநீதி லட்சியத்தோடு பல்வேறு
இனமக்களின் கலாசாரத்தை உயர்த்தும் தன்மை கொண்டது” என்கிறார் பேராசிரியர் கிரிதர்ராவ்.
இதற்கு எதிராக காலாவதியான மொழி என சிலர் திட்டமிட்டு எஸ்பெரான்டோவை பழித்தாலும் இம்மொழிக்கான
ஸ்பெஷல் இலக்கியங்கள், கலைகள் உண்டு.
பாடத்திட்டமும், குறிப்பிட்ட நாடும்
அடையாளமில்லாத மொழி என்பதால் இதனை கற்றறிந்தவர்களின் பிரசாரம், இணையம் வழியாக எஸ்பெரான்டோ
ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் பரவியுள்ளது. அதேசமயம் அதிகாரப்பூர்வமாக பதினெட்டு மொழிகளுக்கு
மேலுள்ள இந்தியாவில் முதன்மைமொழியாக இந்தியை கட்டாயப்படுத்தும் அரசுடன் பிறமொழிகள்
போலவே எஸ்பெரான்டோவும் மோதவேண்டிய சூழல் உள்ளதையும் நாம் மறுக்கமுடியாது. போன் கிஸ்
!